குருவே...யோகி ராமா.. 16: ரயிலில்... டிக்கெட்டைக் காணோம்!

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

பள்ளி வாசலில் நின்று கொண்டிருக்கும் தாயைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து மிகப்பெரிய பூரிப்புடன் குழந்தை ஓடிவருமே... பார்த்திருக்கிறீர்களா. வந்து கழுத்தைக் கட்டிக் கொள்ளுமே... கவனித்திருக்கிறீர்களா. அந்த முகத்தில் பரவியிருக்கும் மொத்தக் குதூகலமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

கன்றுக்குட்டியே அழகுதான். அதிலும் அந்தக் கன்று, வழியேதும் தெரியாமல், தன் தாய்ப்பசு எங்கே இருக்கிறது என்று தவித்துக் கொண்டே இருக்கும். அடிவயிற்றில் இருந்து, குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். அங்கே இங்கே என அலைந்து, அம்மாப்பசுவைக் கண்டதும், மான்குட்டிப் போல் துள்ளி வரும். ஓடிவந்து, தாய்ப்பசுவின் முதுகை நாக்கால் தடவும். தன் இல்லாத கொம்பைக் கொண்டு, செல்லமாகக் குத்தும். பிறகு பசியை உணர்ந்து முட்டிமுட்டி பால் குடிக்கும். கன்றின் பாசத்தையும் பசுவின் ஆதுரத்தையும் பார்த்தால் நெகிழ்ந்துவிடுவோம்.

ராம்சுரத் குன்வர், அப்படியான குழந்தையின் மனநிலையுடன், கன்றுவின் குதூகலத்துடன் இருந்தார். பயணம் மேற்கொள்ள த் திட்டமிட்டிருந்தார். அதற்கான தேதியையும் முடிவு செய்திருந்தார். ஆனால், ஏதோ அந்த நாள் வந்துவிட்டது போலவும் ரயிலேறி விட்டது போலவும் எங்கே இறங்க வேண்டுமோ, அங்கே இறங்கிவிட்டது மாதிரியும் நினைத்துக் கொண்டார்.

ரயிலில் இருந்து இறங்கி, அந்த மகானைத் தரிசித்துவிட்டது போல் பூரித்துப் போனார். பகவான் ஸ்ரீஅரவிந்தரை வணங்கி, அவருக்கு எதிரே நின்று, அமர்ந்து, இவர் தன் சந்தேகங்களைக் கேட்க, அதற்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் ஸ்ரீஅரவிந்தர் பதில் சொல்வது மாதிரியெல்லாம் நினைத்துக் கொண்டார்.

இதுதான் சங்கல்பம் போலும். இந்த சத்விஷயமானது, இப்படித்தான், இந்த வேளையில்தான், இவர் மூலமாகத்தான் நிகழவேண்டும் என சங்கல்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் காசியில் நிகழவில்லை. சாரநாத்தில் ஏதும் நடக்கவில்லை. அங்கெல்லாம் ஏதோவொன்று நிகழ்ந்திருந்தாலும் ‘இங்கேயெல்லாம் ஏன் சுத்துறே. இங்கே தேடினாலும் எதுவும் கிடைக்காது’ என்று எவரும் சொல்லவில்லை.

ஆனால், ஊர் ஊராகப் போயும் கிடைக்காத ஒன்று, ஊரிலேயே கிடைத்தது. ஊருக்கே தேடி வந்து சொல்லப்பட்டது. ஊருக்கு வந்திருந்த, கங்கைக் கரைக்கு வந்திருந்த அந்த சாதுதான் சொன்னார்... ‘தெற்கே போ’ என்று!

யாரைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. எங்கே, எந்த ஊருக்குப் போகவேண்டும் என்றெல்லாம் விவரிக்கவில்லை. திசையை மட்டும் சொன்னார். தெற்குப் பக்கம் போ என்று திசையைச் சொல்லி வழிகாட்டினார். திக்கு எது திசை எது என்றுத் தெரியாமல், தவித்து வந்த ராம்சுரத் குன்வருக்கு, இந்த ஒன்றே போதுமானதாக இருந்தது.

அந்த சாது ‘தெற்கு’ என்று திசை காட்டிவிட்டார். அதேசமயத்தில், அரவிந்தரின் ‘Lights on Yoga' புத்தகம் கிடைத்ததும் அதைப் படித்ததும் சரியான தருணமாக, ஏதோவொன்றை உணர்த்துவதாக அறிந்தார் ராம்சுரத் குன்வர்.

அந்த நாளும் வந்தது. ராம்சுரத் குன்வர் ரயிலேறினார். இந்த முறை ரயில் செலவுக்கும் வழிச்செலவுக்குமாக கொஞ்சம் காசு வைத்துக் கொண்டார். ரயில் கிளம்பி அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் நின்று, கிளம்பி, நின்று கிளம்பி... பயணிகளை ஏற்றுவதும் இறக்குவதுமாகப் பரபரப்புடன் இருந்தது.

அப்போது, டிக்கெட் பரிசோதகர் ரயிலில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்டுகளைக் கேட்டு வாங்கி சோதித்துக் கொண்டிருந்தார். வரிசையாக சோதித்திக் கொண்டே வந்தவர், ராம்சுரத் குன்வரிடம் வந்து, ‘டிக்கெட் டிக்கெட்...’ என்றார்.

ஆழ்ந்த யோசனையில் இருந்த ராம்சுரத் குன்வர், அதிலேயே மூழ்கியிருந்தார். அந்த டிக்கெட் பரிசோதகர், மீண்டும் அவரை லேசாக உசுப்பி, ‘டிக்கெட் டிக்கெட்...’ என்று கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டு, பாக்கெட்டில் வைத்திருந்த டிக்கெட்டை எடுப்பதற்கு, எடுத்துக் காட்டுவதற்காக கையை பாக்கெட்டினுள் நுழைத்தார்.

அதிர்ச்சி அடைந்தார் ராம்சுரத் குன்வர். பாக்கெட்டுக்குள் விட்ட கை, வெளியே வர இன்னொரு வழி இருந்தால், யார்தான் அதிர்ந்து போகமாட்டார்கள். ஓட்டை. சொல்லப்போனால் ஓட்டை அல்ல. யாரோ பிளேடோ கத்தியோ வைத்து, சட்டைப்பையை கிழித்து, திருடியிருக்கிறார்கள்.

அங்கிருந்த எல்லோரும் அவரையேப் பார்த்தார்கள். திருடு போயிருப்பது தெரிந்து, வருந்தினார்கள். ஆனால் டிக்கெட் பரிசோதகர் இதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. நம்பினாலும் அவர், தன்னுடைய மேலதிகாரிக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே!

ராம்சுரத் குன்வர், கொஞ்சம் கூனித்தான் போனார். இதில் இன்னொரு பெரிய சிக்கல்... திருடு போனது டிக்கெட் மட்டுமல்ல... செலவுக்கு வைத்திருந்த பணமும்தான்! சொல்லப்போனால், பணத்தைப் பிரதானமாகத் திருடியவன், அப்படியே டிக்கெட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டான் போல!

'டிக்கெட்டும் இல்ல. பணமும் இல்ல. பேசாம, அடுத்த ஸ்டேஷன்ல இறங்கு’ என்றார் டிக்கெட் பரிசோதகர்.

முகமே வாடிப் போனது ராம்சுரத் குன்வருக்கு! டிக்கெட் களவு போனதோ, பணம் திருடு போனதோ அவருக்கு வருத்தமில்லை. எல்லோரும் பார்க்க, குற்றவாளி போல், அவமானப்பட்டு நிற்பதெல்லாம் கூட அவரை எதுவும் செய்துவிடவில்லை.

இந்தப் பயணம் தடைப்படுகிறதே என்றுதான் அவர் வருந்தினார். நினைத்தபடி, தெற்குப் பக்கம் போகமுடியாது போய்விடுமோ என்றே கவலைப்பட்டார். ஸ்ரீஅரவிந்த தரிசனம் தள்ளிப் போகிறதே... என்பதற்காகத்தான் சட்டென்று முகத்தில் வாட்டம் வந்தது.

ஆனால் அனைத்தையும் கடந்து, உள்ளே ஓர் நம்பிக்கை இருந்தது. இந்தப் பயணம் தடைப்படாது என உறுதியாக இருந்தார்.

‘அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிக்கோ’ என்றார் அந்த டிக்கெட் பரிசோதகர்.

அப்போது அங்கே இருந்த சகபயணிகள், தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பிறகு, டிக்கெட் பரிசோதகரிடம் பேசினார்கள். ‘எவ்ளோ அபராதமோ... அதை நாங்க கட்டிடறோம்’ என்றார்கள். பணமும் கட்டினார்கள்.

இதையெல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ராம்சுரத் குன்வர்.

அந்தப் பயணிகள் அத்துடன் நின்றுவிடவில்லை. திரும்பவும் கூடிப் பேசினார்கள். இன்னும் கொஞ்சம் காசு திரட்டினார்கள். அந்தப் பணத்தை ராம்சுரத் குன்வரின் கையில் திணித்து, ‘வழிச்செலவுக்கு வைச்சுக்கோங்க’ என்றார்கள்.

நெகிழ்ந்து போனார் ராம்சுரத் குன்வர். உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்... ‘இதுவும் தெய்வசங்கல்பம்... ஆண்டவன் கட்டளை!’

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்