மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி திருவிழா - முதல் நாளில் கருங்குருவிக்கு உபதேசித்த லீலை

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத்திருவிழா முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசித்த லீலை நடைபெற்றது. இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி ஆக.13ம் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் மற்றும் சுற்றுக்கொடிமரங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. ஆக.13 முதல் 18-ம் தேதி வரை சந்திரசேகர் உற்சவம் 2-ம் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முதல் நாளான இன்று ஆக. 19-ம் தேதி காலை கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.

மாலையில் கற்பகவிருட்ச வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து நாளை (ஆக.20) காலை நாரைக்கு முக்தி கொடுத்த லீலை, மாலையில் பூதவாகனம், அன்ன வாகனம் புறப்பாடு நடைபெறும். ஆக.21-ல் காலையில் மாணிக்கம் விற்ற லீலை, மாலையில் கயிலாயபர்வதம், காமதேனு வாகனம் புறப்பாடும், ஆக.22-ல் காலையில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை, மாலையில் தங்கச் சப்பரம், யானை வாகனம் புறப்பாடும் நடைபெறும்.   

ஆக.23-ல் காலையில் உலவாக்கோட்டை அருளிய லீலை, மாலையில் அதிகாரநந்தி, யாளி வாகனம் புறப்பாடும், ஆக.24-ல் காலையில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, மாலையில் தங்க ரிஷப வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் புறப்பாடும், ஆக.25-ல் காலையில் வளையல் விற்ற லீலை, இரவு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். ஆக.26-ல் காலையில் தங்க சப்பரம், மாலையில் நரியை பரியாக்கிய லீலை, தங்க குதிரைவாகனம் புறப்பாடு நடைபெறும்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமான் எழுந்தருளல் நடைபெறும். ஆக.27-ல் காலையில் 6 மணிக்கு சொக்கநாதப்பெருமான் பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மதியம் மண் சாத்துதல் நடைபெறும். அன்றிரவு இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலுக்கு எழுந்தருளல். ஆக.28-ல் மாலை    விறகு விற்றலீலை, ஆக.29-ல் காலையில் சட்டத்தேர் இரவு 7 மணிக்கு சப்தாவர்ணசப்பரம் எழுந்தருளலும், ஆக.30-ல் மாலையில் பொற்றாமரை குளத்தில்  தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரிஷப வாகனம் எழுந்தருளலோடு திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருவிளையாடல் புராண வரலாறு: முற்பிறப்பில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தும், சிறிது பாவமும் செய்தமையால் ஒருவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்தது. அப்போது சிலர் மதுரை பற்றியும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் எனவும் உரையாடினர். கருங்குருவி அங்கிருந்து மதுரைக்கு வந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது. இறைவனும் குருவியின் பக்திக்கு இணங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் கருங்குருவியின் இனத்து பெயரான எளியான் பெயரை ’வலியான்’ என மாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE