வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம்: புதுச்சேரி ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தோராட்டத்தை ஆளுநர், முதல்வர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோவியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டின் ஆடித் தேரோட்டாம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள், இரவு பல்வேறு வாகனங்களில் சிறப்பு வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்து வழிபாடு செய்தனர்.

இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எம்எல்ஏகள் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர் நான்கு மாட வீதிகள் வழியாக சுற்றி வந்து நிலையை அடைந்தது. விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை சாலையெங்கும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் திருவிழாவுக்கு வருகை தரும் பக்கதர்களின் நலன் கருதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் குடிநீர், பொது சுகாதாரப் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தெற்கு பகுதி போலீஸ் எஸ்.பி வீரவல்லவன் தலைமையில் போலீஸார் செய்திருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேர்த் திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE