ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறையில் குவிந்த மக்கள் - ஆடி அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்/திருச்சி/ஈரோடு: ஆடி அமாவாசையான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று ஆயிரக்கணக்கான திரண்டனர். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்தன. ஜுலை 17-ல் வந்த முதல் அமாவாசையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் வழிபாடு நடத்தினர்.

நேற்று 2-வது அமாவாசையையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவிலிருந்தே ராமேசுவரம் வரத் தொடங்கினர்.

நேற்று அதிகாலை ராமநாத சுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அக்னி தீர்த்தக் கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடி, அங்கிருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு பழங்கள், காய்கறிகள், அரிசி, பூஜை பொருட்களை வைத்து தர்ப்பணம் செய்தனர்.

பின்னர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் நேற்று ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் முன்னோர் வழிபாடு மேற்கொள்வதற்காக, நேற்று காலை முதல் ஏராளமானோர். குவிந்தனர். காவிரிக்கரையில் பக்தர்கள் திதி கொடுத்து தர்ப்பணம் செய்யவும், காவிரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE