துளி சமுத்திரம் சூபி 09: அன்பால் தூய்மையடையும் ஆன்மா

By முகமது ஹுசைன்

வி

சித்திரங்கள் நிறைந்தது நம் வாழ்வு. ஆச்சரியங்களை அளித்துக்கொண்டிருப்பது அதன் இயல்பு. இந்த வாழ்வில் உத்தமர் தடுமாறி விழுவதும் கொடியவர் உத்தமராவதும் நொடியில் மாறிடும் நிகழ்வு. இது புரியாதவரை வாழ்வு பெரும் புதிர். அதைப் புரிந்துகொண்டவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர் ஹபிப் முகமது.

ஹபிப் முகமது பாரசீகத்தில் பிறந்து பாக்தாத்தில் எட்டாம் நூற்றாண்டில் மறைந்த சூபி ஞானி. இவர் பஸ்ராவில் வசித்த சூபி ஞானியான ஹஸனிடம் மறைஞானத்தைப் பயின்றவர். கல்வியறிவு இல்லாவிட்டாலும் கேள்வி ஞானத்தைக் கொண்டு மெய்ஞானத்தைப் பயின்றார். படிப்பறிவு இல்லாததால் இவர் குரானைப் படித்தது இல்லை. இவரது முரட்டுத்தனமான பக்தியின் காரணமாகக் காட்டுமிராண்டி என்று பலரால் அழைக்கப்பட்டார்.

“உடல் தண்ணீரால் தூய்மையடையும்,

அகங்காரம் கண்ணீரால் தூய்மையடையும்.,

அறிவு ஞானத்தால் தூய்மையடையும்.

ஆனால்,

ஆன்மா அன்பால் மட்டுமே தூய்மையடையும்”

அன்பைப் பற்றி இவ்வளவு சிலாகித்துக் கூறிய அவர் ஆரம்ப காலங்களில் அன்பின் சுவடே இல்லாமல் வாழ்ந்தவர். இவர் அப்போது கடவுளையும் நேசிக்கவில்லை அன்பையும் நேசிக்கவில்லை. பணத்தை மட்டுமே நேசித்தார். அதுவும் வெறியுடன் நேசித்தார். வட்டிக்குக் கடன் கொடுப்பது இவர் தொழில். அந்தத் தொழிலில் மனிதாபிமானம் துளியும் இல்லாமல் ஈவு இரக்கமற்ற முறையில் பணம் ஈட்டினார்.

வட்டிக்காரர் வருகிறார்

தினந்தோறும் கடன் பெற்றவர்கள் வீட்டுக்குச் சென்று வட்டியை வசூலிப்பார். பணம் இல்லையென்று சொல்பவர்களிடம், ‘உன் வீட்டுக்கு வந்ததால் எனது செருப்பு தேய்ந்துவிட்டது. அதற்குப் பணம் கொடு’ என்று ஒரு தொகையை வாங்கிவிட்டுத்தான் வருவார். எந்த வீட்டிலும் எந்த நாளிலும் இவர் பணம் வாங்காமல் திரும்பியதேயில்லை. இவர் தெருவில் நடந்தாலே கடன் பெற்றவர்கள் எல்லாம் பயந்து ஓடி மறைவார்கள். தெருவில் விளையாடும் குழந்தைகள்கூட வட்டிக்காரர் வருகிறார் என்று பயத்தில் ஒளிந்துகொள்ளும்.

ஒருமுறை கடன் வசூலிக்க ஒரு வறியவர் வீட்டுக்குச் சென்றார். உள்ளே பூட்டியிருந்த கதவைப் பலமாகத் தட்டினார். சிறிது நேரம் கழித்து ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்து கதவைத் திறந்தாள். அவள் இவரிடம் கடன் பெற்றவருடைய மனைவி. கதவைத் திறந்தவள், ‘மன்னிக்கவும் நான் தொழுதுகொண்டு இருந்ததால் என்னால் உடனே கதவைத் திறக்க முடியவில்லை’ என்றாள். அவளின் மன்னிப்பை சட்டை செய்யாமல், ‘எங்கே உன் கணவன்?' என்று மிரட்டும் தோரணையில் ஹபிப் கேட்டார். உடல் நலமற்ற தன் சகோதரரைப் பார்க்கச் சென்று இருப்பதாக அவள் சொன்னாள். அதனால் எனக்கு என்ன என்ற தோரணையுடன் வட்டிப் பணத்தை எடுத்து வரச் சொல்லி உத்தரவிட்டார். வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் கணவர் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்களை நாளை வந்து சந்திப்பதாகச் சொல்லச் சொன்னார் என்றாள்.

ஹபிப் அவளிடம் மிகுந்த சினம் கொண்டார். ‘சரி, எனது செருப்புக்கான கூலியைக் கொடு’ என்று கேட்டார். ‘வெட்டிய ஆட்டின் கழுத்தைத் தவிர வீட்டில் வேறு எதுவும் இல்லை. அதை வேண்டுமானால் உங்களுக்குத் தருகிறேன்’ என்று அவள் நயந்து கூறினாள். ஹபிப் சிறிது யோசித்தார். பின் அவளிடம் ‘அப்படியானால் அதை நீ சமைத்துக் கொடு’ என்றார். ‘அடுப்பைப் பற்றவைக்க விறகும் இல்லை, சமைப்பதற்குப் பொருட்களும் வீட்டில் இல்லை’ என்றாள். ‘நீங்கள் அவற்றை வாங்கி வந்து கொடுத்தால், சமைத்துத் தருகிறேன்’ என்று சொன்னாள். அதற்கு ஆகும் செலவை வட்டியுடன் சேர்த்துத் தர வேண்டும் என்று அவளிடம் உறுதிமொழி பெற்றார். பின் கடைக்குச் சென்று அவற்றை வாங்கி வந்து கொடுத்தார்.

மனிதனாக மாறினார்

அந்தப் பெண் சமையல் செய்ய ஆரம்பித்தாள். ஹபிப் வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு முதிய யாசகர் மிகுந்த தள்ளாட்டத்துடன் வந்து பிச்சை கேட்டார். அந்தப் பெண் உள்ளேயிருந்து ஓடி வந்தாள். ‘வீட்டில் பணம் இல்லை. சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள். சமையல் முடிந்தவுடன் உணவு தருகிறேன்’ என்று கனிவாகக் கூறினாள். ‘யார் உணவை யாருக்கு கொடுப்பதாகச் சொல்கிறாய். முதலில் நீ உள்ளே செல்’ என்று அவளிடம் கத்தினார் ஹபிப். பின் அந்த முதியவரை நோக்கி, ‘இங்கே பார், என்னிடம் பணம் பெறுவதால் நீ செல்வந்தனாக மாறப் போவதில்லை. ஆனால், உனக்குக் கொடுத்தால் நான் பிச்சைக்காரன் ஆகி விடுவேன். எனவே இங்கிருந்து ஓடிப் போ’ என்று அவரை விரட்டினார். அந்த முதியவர் ஹபிபின் கண்களை உற்றுப் பார்த்துச் சன்னமான குரலில், ‘எனக்குப் பிச்சையிட்டால் நீ பிச்சைக்காரன் ஆக மாட்டாய், ஆனால் மனிதனாக மாறுவாய்’ என்று சொல்லி மறைந்தார்.

ஹபிப் தன் வாழ்வில் முதன்முறையாக அதுவரை உணராத ஏதோ ஒன்றை உணர்ந்து தன்னை இழந்தார். அந்தப் பெண்மணி தான் சமைத்த உணவைக் கொண்டுவந்து கொடுத்தார். ஹபிப் அதை வாங்கிக்கொள்ளாமல் ஈரமான விழிகளுடன் வீட்டை நோக்கி நகர்ந்தார். எப்போதும்போல் தெருவில் பயந்து ஓடிய குழந்தைகளும் கடன்காரர்களும் அன்று புதிதாக அவருக்கு வேதனையை அளித்தனர். ஓவென்று அழுதபடி அவர்களை விரட்டிச் சென்று பிடித்தார். பின் அவர்களிடம், ‘ஒளிய வேண்டியது நீங்கள் அல்ல, நான்தான்’ என்று அழுதபடி சொன்னார். அங்கிருந்து நேராக மசூதிக்குச் சென்றார். தொழுகை முடிந்து வெளிவந்தவர்கள் இவரைப் பார்த்துச் சற்று தயங்கி நின்றனர். அவர்களைப் பார்த்து அழுதபடி உரத்த குரலில், ‘நீங்கள் யாரும் என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டாம்’ என்று சொன்னார். ‘உங்களுக்குப் பணமோ பொருளோ தேவையிருந்தால் அதனை நீங்கள் என் வீட்டில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

தான் சொல்லியபடி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் தனக்கு என்று எதுவும் இல்லாது போகும் நிலை வரும்வரை தானம் செய்தார். தினமும் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு சூபி ஞானி ஹஸன் ஆற்றும் உரைகளைக் கேட்க ஆரம்பித்தார். பின் அவரிடமிருந்து இரவும் பகலும் ஞானத்தைக் கற்க ஆரம்பித்தார். ஒரு நாள் ஹசன் இவரை அழைத்து, ‘இப்போது நீ செல்வந்தனா, பிச்சைக்காரனா?’ என்று கேட்டார். ‘நான் முன்பு ஏழ்மையில் வாடினேன். இப்போது செல்வச் செழிப்பில் கொழிக்கிறேன்’ என்று பதில் சொன்னார். ‘இனி உனக்கு ஏழ்மை ஒருபோதும் வராது’ என்று சொல்லி ஹஸன் இவரை வழியனுப்பி வைத்தார்.

பயந்து ஓடியவர் கூடினர்

தினமும் வசூலுக்குச் செல்வதுபோல் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்புவார். அங்கிருந்து நேராக யூப்ரடீஸ் ஆற்றங்கரைக்குச் செல்வார். அங்கே தனிமையில் அமர்ந்து “ஓ கடவுளே! உன்னிடம் பொங்கும் இன்பத்தைப் பார்க்க முடியாத கண்களால் வேறு எங்கு அதைக் காண முடியும்? நிம்மதியையும் அமைதியையும் உன்னிடம் உணர முடியாத மனதால் வேறு எங்கு அவற்றை உணர முடியும்?” என்று சொல்லித் தீவிர பிரார்த்தனையில் ஈடுபடுவார். பின் வழக்கம்போல் இரவு வீடு திரும்புவார். எந்தப் பணத்தின் மீது தீராத மோகம்கொண்டு இருந்தாரோ அந்தப் பணத்தை அறவே வெறுத்து ஒதுக்கினார். வீடு வறுமையில் தள்ளாடிய போதும் அதனை அணுஅணுவாக ரசித்து மகிழ்வுடன் ஏற்றார்.

அவர் மரணிக்கும் முன், ‘நான் இதுவரை போயிராத இடத்துக்கு நான் அறிந்திராத பாதையில் சென்று இதுவரை பாத்திராத எனது எஜமானைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது’ என்று கண்களில் நீர் மல்க மகிழ்ச்சியுடன் சொன்னார். யாரைக் கண்டு பயந்து ஒளிந்தனரோ, அவரை வழியனுப்ப அன்று அந்த ஊர் மொத்தமும் சோகத்துடன் கூடியிருந்தது.

(மெய்ஞானம் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்