அமிர்தம் கடைந்ததும் அப்போது ஆலகால விஷம் வந்ததும் அந்த விஷத்தை தான் உண்டதும் அதனால் சிவபெருமானுக்கு நீலகண்டன் எனும் திருநாமம் அமைந்ததும் தெரியும்தானே. அப்போது அமிர்தத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தவர் யார் தெரியுமா? பிள்ளையார். அந்தப் பிள்ளையாரின் திருநாமம் நீலகண்டப் பிள்ளையார்.
இந்தக் கோயிலும் அழகு. திருக்குளமும் தூர்வாரப்பட்டு, அழகுற பராமரிக்கப்பட்டு, உதாரணத் திருக்குளமாகத் திகழ்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பேராவூரணி. இந்த ஊரை ஏந்தல் என்றும் அழைக்கிறார்கள். ஏந்தல் எனும் அழகிய ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் நீலகண்டப் பிள்ளையார்.
சர்க்கரை நோய் என்பது இன்றைக்கு நேற்றைக்கான விஷயம் அல்ல. துளசீந்திர மகாராஜாவுக்கே சர்க்கரை நோய் இருந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார் மன்னர். எப்போதும் அயர்ச்சியாக இருந்தார். பசிக்கவில்லை. பசித்தாலும் சாப்பிடமுடியவில்லை. அப்படியே சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகரித்து, ஒரு மயக்க நிலையில் தவித்துப் போனவராகவே இருந்தார் மன்னர்.
அரசு வைத்தியர் கொடுத்த மருந்துகள் கூட பெரிதாக நலம் தரவில்லை. அப்போதுதான் திருப்பெருந்துறை தலத்துக்குச் செல்லுங்கள். அந்தத் தலத்து இறைவன் உங்களின் நோயை குணமாக்கி ஆரோக்கியத்தைத் தந்தருள்வான் என்று சொன்னார்கள். உடனே மன்னரும் திருப்பெருந்துறை நோக்கிப் பயணப்பட்டார்.
வழியில் ஒரு கிராமத்தில் இளைப்பாறினார். அன்றிரவு அங்கேயே உறங்குவது என முடிவு செய்யப்பட்டது. அப்போது துளசீந்திர மகாராஜாவின் கனவில் வந்த விநாயகர், ‘இங்கே உள்ள திருக்குளத்தில் நீராடி, அருகில் உள்ள கோயிலில் வணங்கி வழிபடு. உன் நோயெல்லாம் அகலும். ஆரோக்கியத்தை அருள்வேன்’ என அசரீரி கேட்டது.
விடிந்ததும், குளத்தைத் தேடினார் கள். அந்தக் குளத்தில் நீராடிய மன்னர், அருகில் மரத்தின் கீழ் வீற்றிருந்த விநாயகர் சிலையை வணங்கினார். அவர் கண்கள் மூடி பிரார்த்தனை செய்தார். விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். எழுந்திருக்கும் போது, கண்களில் படர்ந்திருந்த கருவளையங்கள் காணாமல் போயிருந்தன. முகத்தில் பொலிவு கூடியிருந்தது. உடல் முழுவதும் ஓர் உற்சாகத் தெம்பு பரவியிருந்தது.
உடனே வைத்தியர் அழைக்கப்பட்டார். மன்னரின் நாடி ஓட்டத்தை சோதித்துப் பார்த்துவிட்டு, ‘ஒரு குறையுமில்லை மன்னா. நீங்கள் முன்பைக் காட்டிலும் இன்னும் பலம் வாய்ந்தவராகத் திகழ்கிறீர்கள்’ என்று தெரிவித்தார் வைத்தியர்,
இதில் மகிழ்ந்த மன்னர், அங்கே நீலகண்டப் பிள்ளையாருக்கு அழகிய ஆலயம் அமைத்தார். திருக்குளத்தை இன்னும் விரிவாக்கினார். கோயிலுக்கு நிலங்களை நிவந்தமாக எழுதி வைத்தார். இன்றைக்கும் பேராவூரணியில் குளக்கரக் கரைக்கு அருகில் அமர்ந்தபடி, அனைவருக்கும் அமிரதமென வாழ்க்கையை அருளிக் கொண்டிருக்கிறார் நீலகண்டப் பிள்ளையார்.
இந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பு... முகூர்த்த நாட்களில் சுமார் ஐம்பது எழுபதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடைபெறுமாம். இங்கே அவர் சந்நிதிக்கு முன்னே திருமணம் செய்துகொண்டால், இல்லறம் செழிக்கும். குடும்பம் தழைக்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சந்ததிகள் சிறக்க சந்தோஷமாக வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
வருடத்தில் சித்திரையில் 13 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும். தினமும் உத்ஸவம், சிறப்பு பூஜைகள், தேரோட்டம் என அமர்க்களப்படும். இந்த விழா நடைபெறும் போது, இந்த ஊரைச் சேர்ந்தவர்கள், இப்போது வெளியூரில், வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் இருந்தாலும் அந்த சமயத்தில் நிச்சயமாக இங்கு வந்து விழாவில் கலந்துகொண்டு, பிள்ளையாருக்கான தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
கோயில் குளம் கொள்ளை அழகு. வருடந்தோறும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தூர்வாரப்படுகிறது. இயற்கை சுண்ணாம்பைக் கொண்டு, குளம் முழுவதும் தூவப்படுகிறது. அதனால்தான் சுற்றியுள்ள எந்த ஊர்க் குளத்தில் தண்ணீர் இல்லையென்றாலும் கூட, தண்ணீர் இங்கே, இந்தக் கோயில் குளத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இந்த மக்களின் உதவியாலும் கோயில் ஊழியர்களின் உழைப்பாலும் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று என்று தெரிவிக்கிறார் கோயில் செயல் அலுவலர் கோவிந்த்ராஜ்.
ஆடி மாதத்தில் இந்தக் குளத்தில்தான் பெண்கள் ‘தாலிப்பெருக்கி’ செய்துகொள்கிறார்கள். அதாவது தாலிப் பிரித்துப் போடுதல் என்பதை தாலிப்பெருக்கி என்று சொல்கிறார்கள். அதாவது தாலியின் பலத்தைப் பெருக்கி, கணவரின் ஆயுளைக் கூட்டி, மஞ்சள் குங்குமத்துடன் வாழ வைப்பார் நீலகண்டப் பிள்ளையார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பட்டுகோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி முதலான ஊர்களைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரியத்தைத் துவக்குவதாக இருந்தாலும் அது கல்யாணம் முதலான வைபவங்களாகட்டும், கடை, தொழில் என வியாபார நிறுவனங்களாகட்டும்... எதுவாக இருந்தாலும் இங்கு வந்து நீலகண்டப் பிள்ளையாரை வேண்டிய பிறகே செயலாற்றுகின்றனர். காரியத்தடைகளை நீக்கி, காத்தருள்வார் இந்தப் பிள்ளையார் என்கிறார்கள் பக்தர்கள்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago