மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவையொட்டி இன்று சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் முன்பு பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் முடிந்து தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்திலுள்ள 5 சன்னதி முன்புள்ள கொடிமரங்களில் சுற்றுக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஆக.13 முதல் 18-ம் தேதி வரை காலை, இரவு சந்திரசேகர் உற்சவம் 2-ம் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து ஆக. 19-ம் தேதி காலை கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையும், மாலை கற்பகவிருட்சம், வெள்ளி சிம்ம வாகனம் புறப்பாடு நடைபெறும். ஆக.20ல் காலை நாரைக்கு முக்தி கொடுத்தலீலை, மாலையில் பூதவாகனம், அன்ன வாகனம் புறப்பாடு. ஆக.21-ல் காலை மாணிக்கம் விற்றலீலை, மாலை கயிலாயபர்வதம், காமதேனு வாகனம் புறப்பாடு. ஆக.22-ல் காலை தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை, மாலையில் தங்கச் சப்பரம், யானை வாகனம் புறப்பாடு. ஆக.23-ல் காலை உலவாக்கோட்டை அருளிய லீலை, மாலையில் அதிகாரநந்தி, யாளி வாகனம் புறப்பாடு.

ஆக.24-ல் காலை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, மாலையில் தங்க ரிஷப வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் புறப்பாடு. ஆக.25-ல் காலை வளையல் விற்ற லீலை, இரவு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். ஆக.26-ல் காலை தங்க சப்பரம் மாலையில் நரியை பரியாக்கிய லீலை, தங்க குதிரைவாகனம் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமான் எழுந்தருளல் நடைபெறும்.

ஆக.27-ல் காலை 6 மணிக்கு சொக்கநாதப்பெருமான் பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மதியம் மண் சாத்துதல் நடைபெறும். அன்றிரவு இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலுக்கு எழுந்தருளல். ஆக.28-ல் மாலை விறகு விற்றலீலை, ஆக.29-ல் காலையில் சட்டத்தேர் இரவு 7 மணிக்கு சப்தாவர்ணசப்பரம் எழுந்தருளல். ஆக.30-ல் மாலை பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரிஷப வாகனம் எழுந்தருளலோடு திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE