வா
ழ்க்கை எனும் சாகரத்தில் இன்பம், துன்பம், சோர்வு, மகிழ்ச்சி, துக்கம், விரக்தி என்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் அனுபவங்கள் இருக்கின்றன. ஒரு புள்ளியில் நின்று திரும்பிப் பார்க்கையில், மகிழ்ச்சிக்கும் துயரத்துக்குமிடையே நம் வாழ்வு ஊசலாடுகிறது. கடலலைகள் ஓயாததைப் போல், நம்மைச் சூழும் உணர்வுகளுக்கு விடிவே இல்லையா என்ற கேள்வி பிரம்மாண்டமாய் நம் மனத்தில் எழுகிறது. “ஆம். விடிவு உண்டு” என்கிறது முண்டக உபநிடதம்.
முண்டக உபநிடதம் அதர்வண வேதத்தின் கீழ் அமைந்துள்ளது. அறியாமையால் நாம் நிழலைப் பற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்கூறி, நிஜம் எது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது முண்டக உபநிடதம். இந்த உபநிடதத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஆறு உட்பிரிவுகளிலுமாக மொத்தம் 64 மந்திரங்கள் உள்ளன.
நமது அன்றாட வாழ்வில், நிழலை உண்மை என்று நம்பி அதன் பின்னால் நாம் ஓடுகிறோம். தவறான திசையில் நாம் செய்கின்ற பயணம்தான் நமது ஏமாற்றம், விரக்தி, துயரம், சோர்வு என்ற அனைத்து உணர்வுகளுக்கும் மூல காரணம். “நீ நிழலைப் பற்றிக்கொண்டு அதனுடன் யுத்தம் செய்கிறாய். அதை விட்டுவிட்டு நிஜத்தைப் பற்று” என்று கூறுகிறது இந்த உபநிடதம். உடம்பு, மனம், ஆத்மா என்று பல பகுதிகளாலானவன் மனிதன். இதில் உடம்பும் மனமும் மாறக்கூடியவை, நிழல். ஆன்மா மாறாதது, நிஜம். நிழலுடன் நம்மை ஒன்றுபடுத்துவதை விட்டுவிட்டு நிஜத்துடன் ஒன்றுபடுத்திக் காண வேண்டும்.
ஒளியே அடிப்படை
ஓர் அறையில் மேசை, நாற்காலி, புத்தகங்கள் என்று பல பொருட்கள் இருக்கையில், அவற்றைத் தெளிவாகக் காண ஒளி அவசியமாகிறது. ஒளி இல்லை எனில், எதுவும் புலப்படாது. ஒளியே அடிப்படை ஆகிறது. அதேபோல், ஆன்மா என்பது உடம்புக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டது. ஆன்மா இருப்பதால்தான் அறிய முடியாதவற்றை அறிய முடிகிறது. எனவே, ஆன்மா பற்றிய அறிவு அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படை ஆகிறது.
நமது அறிவு புலன்களுக்கு உட்பட்டது. புலன்களின் மூலமே நாம் எதையும் அறிகிறோம். ஆனால், இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், “உனது இந்தக் கண்ணால் என்னைப் பார்க்க இயலாது. எனவே, உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன். எனது யோக சக்தி மகிமையைப் பார்” என்கிறார். அவ்வாறு தெய்வீகக் கண்ணைப் பெற்றவர்களையே இந்த மந்திரம் ‘விழிப்புற்றவர்கள்’ என்று கூறுகிறது. அவர்கள் எங்கும் இறைவனைக் காணும் அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
நிழலும் நிஜமும்
ஆன்மா என்ற மாறாத ஒன்று, இறைவனின் அம்சமான ஒன்று நம்மில் இருக்குமானால், அந்த ஆன்மாவே நாம் என்பது உண்மையானால் நமக்கு இன்ப துன்பங்கள் ஏன் வர வேண்டும் என்கிற கேள்வி நம்முள் எழுகிறது. முண்டக உபநிடதம் அதற்கு விடை தருகிறது.
“ஒரு மரத்தில், அழகிய இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று மிகுந்த நேசம் பாராட்டுகின்றன. ஒன்று பழங்களைத் தேடித்தேடி உண்கிறது. மற்றொன்று அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை மாறி மாறி இனிப்பும் கசப்புமான பழங்களைத் தின்பதால் அதற்கேற்ப மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறது. ஆனால், மேலே அமர்ந்திருக்கின்ற மற்ற பறவையோ அமைதியாக அமர்ந்திருக்கிறது. அது இனிப்பையும் உண்ணவில்லை. கசப்பையும் உண்ணவில்லை. எனவே சுகம், துக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மகிமையிலேயே ஆழ்ந்திருக்கிறது.”
மனிதனின் நிலையும் கீழ்க்கிளைப் பறவை போல்தான். புலனின்பங்களை நாடி ஓடிக்கொண்டே இருக்கிறான்.எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பொற்கணம் வரத்தான் செய்கிறது. ஆன்ம அனுபவத்தை அக்கணம் உணர்த்துகிறது. அப்பொழுது மேல் கிளைப் பறவையைப் போல் உணர்கிறான். மீண்டும் மறக்கிறான். மீண்டும் கீழ்க்கிளைப் பறவை ஆகிறான். வாழ்க்கையின் பல அனுபவங்களில் அடிபட்டு, துயருற்ற வேளையில் மேல் கிளைப் பறவையின் பால் கவனம் குவிகிறது. இன்னும் நெருங்க நெருங்க, அகம் கரைந்து, மேல் பறவையாகவே மாறிவிடுகிறான். உண்மையில் கீழ்க்கிளைப் பறவை வேறல்ல. மேற்கிளைப் பறவையின் பிரதி பிம்பமே.
நிழலை நிஜம் என்று நம்பி துன்பத்தில் உழலும் நாம், அறியாமையை விடுத்து, ஆன்மாவை அறியும் உயர் அறிவை நாடுவோம். மேன்மை பெறுவோம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago