சுவாமி சரணம்.. 6: அன்புதான் பக்தி!

By வி. ராம்ஜி

அன்பை வழங்குவது என்று முடிவெடுத்துவிட்டால், அதில் ஆணென்ன, பெண்ணென்ன? விட்டுக் கொடுப்பது என்று முடிவாகிவிட்டால், அதில் உறவுகள் தோழமைகள் எனும் வித்தியாசம் எதற்கு? பக்தி செலுத்துவது என்றாகி விட்ட பிறகு, அதில் சைவ வைணவப் பிரிவுகளும் பேதங்களும் தேவையே இல்லை. புனலூர் தாத்தா எனும் மகானும், எந்தப் பாகுபாடும் எவரிடமும் காட்டவே மாட்டார். எதுகுறித்த பிரிவினைகளும் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை.

‘‘எதிரில் இருக்கிற எல்லாருமே மனிதர்கள்தான் அவருக்கு. எல்லோரையும் சமமாகத்தான் பாவிப்பார் என்றெல்லாம் சொல்லிப் புகழ்வார்கள். அதெப்படி எல்லாரிடமும் அன்பாய் இருக்கமுடியும். எல்லா சமயங்களிலும் நாம் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா என்ன? இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்றெல்லாம் இருக்கும் போது, பேதம் பார்க்காமல் இருப்பது எப்படிச் சாத்தியம்?’’ & புனலூர் தாத்தாவிடம் இப்படிக் கேட்டதற்கு அவர் சொன்னார்...

‘‘நீ, அவர், இவர், அந்தம்மா, பக்கத்து வீட்டுக்காரங்க, சொந்தக்காரங்க, நண்பருங்க, தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, அவ்வளவு ஏன்... நல்லவங்க கெட்டவங்கன்னு எல்லாரையும் நான் சாஸ்தாவாத்தான் பாக்கறேன். எல்லாரையும் பகவானாப் பாக்கற புத்திதான் வேணும். அப்படி இருந்துட்டா... எந்தப் பிரிவினையும் இல்லை. பிடிச்சது பிடிக்காததுன்னு எதுவுமே இருக்காது. எல்லார் முகத்துலயும் எல்லார் செயல்லயும் ஐயப்ப சுவாமியைத்தான் பாக்கறேன்‘‘ என்று சொன்ன புனலூர் தாத்தா, எங்களுக்கெல்லாம் சாட்ஷாத் சபரிகிரிவாசனாத்தான் தெரிஞ்சார் என்று வாஞ்சீஸ்வர ஐயர் சொன்னதை சிலிர்க்கச் சிலிர்க்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஐயப்ப குருசாமிகள்!

விலங்குகள், மனிதர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், எல்லா உயிர்களின் மீதும் வாஞ்சையுடனும் அன்புடனும் பழகினார் புனலூர் தாத்தா. ஏழு யானைகளை குழந்தைகள் மாதிரி வளர்த்து வந்தவர் அவர். அதனால் யானைகளின் குணமும் செயல்பாடுகளும் அவருக்கு அத்துபடி.

காட்டில், மலையேறிக் கொண்டிருக்கும் போது, செடிகொடிகளின் அசைவை வைத்தே, அங்கே யானைகள் நடமாட்டம் இருக்கிறதா எவ்வளவு யானைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்லிவிடுவாராம்.

எல்லோரையும் சமமாக பாவிக்கிறதுக்கு மனப்பக்குவம் தேவை. அந்தப் பக்குவமும் பரந்த மனமும் புனலூர் தாத்தாவின் இயல்பு. இவையெல்லாம், சாஸ்தாவின் மேல் கொண்ட பக்தியால் வந்ததா... அப்படியான அன்பு மனம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் சாஸ்தாவின் பேரருள் பரிபூரணமாகக் கிடைக்குமா... தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சக மனிதர்கள் மீது யாரெல்லாம் உண்மையான பிரியமும் எதிர்பார்ப்பு இல்லாத நேசமும் அளவற்ற அன்பும் கொண்டிருக்கிறார்களோ... அவர்களை நோக்கி கடவுளே வருவான்; அவர்களுக்கு அருள்வான் என்பது மட்டும் உறுதி.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஐயனை நாடி வரும் பக்தர்கள் அனைவரிடமும் புனலுர் தாத்தா காட்டிய பேரன்பு என்பது தாயுள்ளத்துக்கு இணையானவை.

‘‘காட்டுல இருக்கற எல்லாமே நம்மளை விட சக்தியானவை. ஆயிரம் மடங்கு பலம் கொண்டவை. அது மிருகங்களாகட்டும்... சாஸ்தாவாகவே இருக்கட்டும். ஆக, நம்மை விட சக்தி வாய்ந்த இந்தக் காட்டுக்குள்ளே இருக்கற ஐயப்பனைப் பாக்க வரும் போது, பணிவும் துணிவும், நேர்மையும் உண்மையும் ரொம்பவே அவசியம்.

காசு பணம் இருக்கறவங்களை மதிக்கறது மனித குணம். நேர்மையும் உண்மையுமா யாரெல்லாம் இருக்கறாங்களோ அவங்களை நேசிக்கறதுதான் கடவுளோட குணம். ஐயப்பன் ரொம்ப சக்தி வாய்ந்தவர். நீ மெய்யனா... பொய்யனான்னு அவருக்குத் தெரியாம இருக்குமா என்ன?’’ என்பார் புனலூர் தாத்தா.

கடவுளிடம் மொத்தமாகச் சரணடைந்தவர் புனலூர் தாத்தா. ‘நீதான் எனக்கு எல்லாமே! என் வாழ்க்கைல நடக்கற நல்லது கெட்டது எல்லாத்துக்குமே நீதான் காரணம். அதனால, என்னைக் இந்த ஜென்மத்திலேருந்து பூரணமானவனாக்க வேண்டிய பொறுப்பு, உனக்குத்தான் இருக்கு. எப்பவும் நான் உன்னையே நினைக்கிறவனா, உன் காலடியில கிடக்கிறவனா இருக்கணும். இது ஒண்ணுதான் என் பிரார்த்தனை’’ என்கிறார் புனலூர் தாத்தா.

இப்படியொரு பிரார்த்தனையை, இப்படியான வேண்டுதலை கடவுளிடம் வைப்பதற்கு இறைசக்தி குறித்த எவ்வளவு துல்லியமான தெளிவு உள்ளுக்குள் இருந்திருக்க வேண்டும்.

‘‘உண்மையான அன்புதான், கடவுள் பக்திக்கான ஆரம்பம். அன்பு இருக்கும் இடத்தில் பக்தியும் பக்தி இருக்கிற மனங்களில் அன்பும் நிறைந்திருக்கும். இந்த இரண்டும் இருந்துவிட்டால், அவர்களுக்கு அருகே கடவுள் எனும் சக்தி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இருந்து, அரண் போல் காத்துக் கொண்டே இருக்கும். இதற்கு எத்தனையோ உதாரண புருஷர்களைச் சொல்லமுடியும். அவர்களில் புனலூர் தாத்தா முதலானவர்கள் எப்படி பக்தி செலுத்த வேண்டும், எல்லோரிடமும் எப்படி அன்பு பரிமாற வேண்டும், எப்படி வாழவேண்டும் என்பதற்கான பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்‘‘ என்கிறார் அரவிந்த் சுப்ரமணியம்.

கோவையில் வசிக்கும் அரவிந்த் சுப்ரமணியத்தை அறிந்திருக்கிறீர்கள்தானே. அய்யனார் என்பவர் யார், சாஸ்தா எனும் கடவுள் யார், ஐயப்பன் எனும் தெய்வம் எவ்விதம். அய்யனாரும் சாஸ்தாவும் ஐயப்பனும் வேறுவேறு தெய்வங்கள் இல்லை என்பதையும் ஐயப்ப சுவாமியின் பிரமாண்டப் பேரருளையும் மிகப்பெரிய ஆய்வாக, எளிமையான கருத்தாக, சொற்பொழிவாக, உபந்யாசமாக தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் விளக்கிக் கொண்டிருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்தும் வெளிநாடுகளில் கூட, இவரின் ஐயப்ப சுவாமியின் அருளாடல்கள் குறித்த பேச்சுக்கு அப்படியொரு ஈர்ப்பு இருக்கிறது.

இன்னாரின் பேரன், இவருடைய மகன் என்று சொல்லுவதுதான் வழக்கம். அது வம்சத்தையும் பரம்பரையையும் பாராட்டும் விதமாகச் சொல்வது. அப்படிப் பாராட்டுவதற்கு உரிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியாக, யாரேனும் அவர்கள் குறித்த பெருமையைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அரவிந்த் சுப்ரமணியம் எனும் இந்தக் காலத்து இளைஞரை, மிகச் சிறந்த ஐயப்ப பக்தர் இன்றைக்கு விருட்சமென வளர்ந்திருப்பதற்கு, சரியான வித்து காரணம். அப்படியொரு வித்தென அவருடைய கொள்ளுத் தாத்தா வாழ்ந்திருக்கிறார். அனவரதமும் ஐயப்ப சுவாமி மீது, மாறாத பக்தி கொண்டவராக அவர் வாழ்ந்த வாழ்க்கைதான், ஒவ்வொரு ஐயப்பசாமிமார்களுக்கும் ஆகச் சிறந்த பாடங்கள். அவரின் தாத்தா கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயர்.

இப்படிச் சொன்னால், ஐயப்ப பக்தர்களுக்கெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. புனலூர் தாத்தாவுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவரான இவரை இப்போதும் ஐயப்ப பக்தர்களும் சபரிமலை ஆலய நிர்வாகத்தினரும் ‘சாமி அண்ணா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு ஐயப்ப பக்தியையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்த ‘சாமி அண்ணா’வின் சரிதம் (இப்போது இருந்தால் அவருக்கு 108 வயது)... இன்றைக்கு முதன்முதலாக மாலைபோட்டுக் கொண்டிருக்கிற கன்னிசாமிகள் முதலான அனைவருக்கும் வேதம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!

& ஐயன் வருவான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்