நெல்லையப்பர் காந்திமதிக்கு ஐப்பசி திருக்கல்யாண விழா, விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலையும் மாலையும் சிறப்புப் பூஜைகள், உத்ஸவங்கள், வீதியுலாக்கள் என அமர்க்களப்படுகின்றன.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோயில் எனும் பிரமாண்டத்தின் இன்னும் சில பகுதிகளைப் பார்ப்போம்.
நெல்லையப்பர் கோயிலுக்கு சிகரம் வைத்தாற் போல் அமைந்துள்ள தாமிரசபையின் தகதகக்கும் தரிசனம் நம்மைச் சிலிர்க்க வைக்கும். மேற்குப் பிராகாரத்தில், தாமிரசபை கல்வளைவு மண்டபச் சிறப்புடன் திகழ்கிறது. பஞ்ச சபைகளில் நெல்லையப்பர் ஆலயம், தாமிர சபை என்பது தெரியும்தானே!
மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கியமான வைபவமான திருவாதிரைத் திருநாளில், இங்குதான் திருநடனம் புரிந்தளுவார் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான். தாமிரசபையின் பின்னே உள்ள சந்தன சபாபதியை வழிபட்டு, அதையடுத்து வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் அஷ்டலட்சுமியை வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
தாமிர சபை நாயகனை அடுத்து, நெல்லையப்பர் திருத்தலத்தில் சனிபகவானையும் சகஸ்ரலிங்கத்தையும் கண்ணாரத் தரிசிக்கலாம். பிறகு காரைக்கால் அம்மையாருக்கு அருள் புரிந்த மிகப்பெரிய ஸ்ரீநடராஜரின் திருமேனியை இங்கே தரிசிக்கலாம். அவ்வளவு அழகு!
இங்கு உள்ள குபேரலிங்கமும் சிறப்பு வாய்ந்தது, மிகுந்த சக்தி கொண்டது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த குபேர லிங்கமானது, சகல யோகங்களையும் செல்வங்களையும் தந்தருளக்கூடியது என்பது போதாதா... இதன் பெருமையைப் புரிந்துகொள்ள!
அடுத்து நவக்கிரக மண்டபம் வலம் வந்து கும்பாபிஷேக சிறு மண்டபத்தையும் தரிசிக்கலாம். பிறகு, அருளும் பொருளும் அள்ளித் தரும், கருணையும் கனிவும் கொண்டு அன்னையெனத் திகழும் ஸ்ரீகாந்திமதி எனும் பேரழகியின் மெய்சிலிர்க்கும் தரிசனம். இவளின் கருணைக்கும் அருளுக்கும் உதாரணம்... நெல்லைச் சீமையில் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு காந்திமதி என்று பெயர் வைப்பார்கள் பலரும்!
இந்தத் தலத்தில் மொத்தம் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 9 தீர்த்தங்கள் முக்கியமானவை. பொற்றாமரைத் தீர்த்தமும் வைரவ தீர்த்தமும் சர்வதீர்த்தமும் கருமாரி தீர்த்தமும் ஆலயத்தின் உள்ளேயே அமைந்திருக்கின்றன. கம்பை தெப்பக்குளம், அதாவது கம்பா நதி தீர்த்தம், சிந்துபூந்துறை துர்கைத் தீர்த்தம், குறுக்குத் துறை தீர்த்தம் முதலானவை சிறப்பு வாய்ந்தவையாகப் போற்றப்படுகின்றன! கோயிலின் ஸ்தல விருட்சம் மூங்கில். வேணு என்று மூங்கிலுக்கு இன்னொரு பெயர் உண்டு. ஒருகாலத்தில் வேணுவனமாகத் திகழ்ந்த இடத்தில் தலம் வந்ததால், சிவனாருக்கு வேணுவன நாதர் என்று திருநாமம் அமைந்தது.
சுமார் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்டு, பிரமாண்ட மதிலும் கோபுரமாகத் திகழும் நெல்லையப்பர் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வாருங்கள். ஸ்ரீகாந்திமதியையும் ஸ்ரீநெல்லையப்பரையும் கண்ணாரத் தரிசியுங்கள். நெல்லையும் மண்ணையும் காத்தருளும் சிவபார்வதியான நம் அம்மையப்பன், நம்மையும் காத்தருள்வான்; நம் சந்ததியையும் தழைத்தோங்கச் செய்வான்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago