கப்பலில் தூத்துக்குடிக்கு வந்த பனிமய அன்னை - 441 ஆண்டு வரலாறு!

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயமாக, தூத்துக்குடியில் வங்கக் கடற்கரை யோரம் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் விளங்குகிறது. 441 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம்.

கப்பலில் வந்த மாதா: இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்ததே ஓர் அற்புத நிகழ்வுதான். அற்புத மாதாவின் சொரூபம் ஒன்று மரப்பேழையில் வைக்கப்பட்டு காலே தீவில் இருந்து சாந்தலேனா என்ற கப்பல் மூலம் 1555-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது.

கி.பி. 1582-ம் ஆண்டு ஏசு சபை குருக்கள் ஒரு சிறிய ஆலயம் கட்டி அந்த ஆலயத்தில் அன்னையின் இந்த சொரூபத்தை வைத்தனர். பின்னாளில், தூத்துக்குடியில் பங்குத்தந்தையாக இருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த விஜிலியுஸ் மான்சி இந்த சொரூபத்தை தென்னங்கீற்றுகளாலும், மண் சுவர்களாலும் ஆன குருக்கள் இல்லத்தில் வைத்திருந்தார்.

இடி தாங்கிய அன்னை: 1707-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி திடீரென நள்ளிரவில் இடி- மின்னலோடு பெரும் காற்று வீசியது. அந்த நேரம், அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி மாதா சொரூபம் முன் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர மின்னல் ஒன்று கூரையை பிய்த்துக் கொண்டு அன்னையின் சொரூபத்தின் மேல் தாக்கியது.

ஆனால் அதிசயம், அன்னையின் சொரூபத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாதாவின் மகிமையால் அருட்தந்தை மான்சியும் உயிர் பிழைத்தார். இதன் காரணமாக பனிமய மாதாவை இடி தாங்கிய அன்னை என்று மக்கள் அழைத்தனர்.

புதிய ஆலயம்: அன்னையின் இந்த அற்புதத்தை உலகுக்கு உணர்த்த விரும்பிய அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி, மின்னல் தாக்கிய கூரையின் நேர் எதிரிலேயே முற்றிலும் கற்களால் ஆன ஆலயத்தை பல இன்னல்களுக்கு இடையே கட்ட ஆரம்பித்தார். 1712 ஏப்ரல் 4-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1713-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

அன்னை மரியாளுக்கு உலகிலேயே முதன் முறையாக ரோமில் உள்ள எஸ்கலின் என்ற குன்றின் மீது கி.பி. 352ல் ஆலயம் அமைக்கப்பட்டது. அப்போது போப்பாக இருந்த அருட்தந்தை லிபேரியுஸ் மற்றும் அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் ஆகியோருக்கு அன்னை மரியாள் காட்சி தந்து பனி பெய்யவே முடியாத கோடைக் காலத்தில் பனி பெய்யச் செய்து தனக்கு ஆலயம் அமைக்க வேண்டிய இடத்தை அருளினார்.

பனிமய மாதா பேராலயம்: அதன் பின்னர், உலகின் பல பகுதிகளில் பனிமய மாதா சொரூபத்தை கொண்டு பல ஆலயங்கள் கட்டப்பட்டன. அதேபோன்ற ஒரு சொரூபம் தான் தூத்துக்குடிக்கும் வந்து சேர்ந்தது. மேலும், எஸ்கலின் குன்றின் மீது அமைக்கப்பட்ட அன்னையின் ஆலயமும், தூத்துக்குடியில் உள்ள இந்த ஆலயமும் அர்ச்சிக்கப்பட்டது ஆகஸ்ட் 5-ம் தேதி தான். அதனால்தான் இந்த ஆலயம் தூய பனிமய மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-ம் தேதி பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
பல்வேறு காலக்கட்டங்களில் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலயம் கடந்த 1982-ம் ஆண்டு பேராலயம் (பசிலிக்கா) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஏசு கிறிஸ்து மரித்த திருச்சிலுவை மரத்தின் ஒரு சிறு துண்டு மற்றும் அன்னை மரியாளின் திருத்தலை முடி போன்றவை இந்த பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பார்த்தவுடனே பக்தர்கள் மனதில் பக்தியும், பரவசமும் ஏற்படுத்தும் வகையில் ஏசு பாலனை கையில் ஏந்தியவாறு, கருணை வடிவில் காட்சி தருகிறார் தூய பனிமய அன்னை. கண்ணீரோடு தன்னை தேடி வரும் மக்களை மகிழ்ச்சியோடும், மன அமைதியோடும் அனுப்பி வைக்கிறார் அன்னை என்பதற்கு இங்கு தினம் தோறும் வரும் பக்தர்களே சாட்சி.

அன்னையை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும், நமது நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சாதி, மத, இன பாகுபாடின்றி அனைத்து மக்களும் வருகிறார்கள். ஆண்டு பெருவிழா நடைபெறும் 11 நாட்களும் தூத்துக்குடி நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கும். தூய பனிமய அன்னையின் திருவிழா ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து ஒரு சமய நல்லிணக்க விழாவாகவே இன்றும் கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE