தெய்வத்தின் குரல்: கர்ம யோகம் - உலக இன்பம் தரும்

By செய்திப்பிரிவு

யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நியாயம்போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக்கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாபமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில்.

அப்படியானால் எது பாபகாரியம், எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.

ஆசையும் துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு ஜட்ஜ் குற்றவாளியை சிக்ஷிக்கிறபோது அவருக்குச் சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது.

எது செய்யத்தக்கது

சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ” என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்ய வேண்டும் என்கிறார்.

இப்போது கீதைக்கு லோகம் முழுவதும் மவுசாக இருக்கிறது. நம் சாஸ்திரங்கள் சொல்கிற ஆச்சார அனுஷ்டானங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கீதையைப் பிரமாதமாகச் சொல்கிறார்கள். கீதையில் ஸ்வதர்மப்படி அவனவனும் நடக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு இவர்கள் பல விதத்தில் அர்த்தம் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தக் கீதையிலேயே மேலே நான் காட்டிய வாக்கியத்தில் அவனவனும் சாஸ்திரப் பிரகாரம் தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தையே செய்ய வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறது. சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.

ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். ‘நான் செய்கிறேன்; எனக்காகச் செய்துகொள்கிறேன்’ என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம்.

சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தம் பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் போட்டுக் கொடுத்த மாதிரி கீதையில் அனுக்கிரகம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். “இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்” என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும்.

நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக்கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்துகொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்