ஞானச் செல்வம் தருவார் ஹயக்ரீவர்!

By வி. ராம்ஜி

மனித உடலும் குதிரை முகமும் கொண்டு காட்சி தரும் ஹயக்ரீவர், கல்விக்கான கடவுள். தன்னை நாடி வரும் குழந்தைகளுக்கு புத்தியில் தெளிவைத் தரக்கூடியவர். கல்வியில் சிறந்து விளங்க அருள்பவர். ஞானம் கிடைத்தருளச் செய்பவர் என்றெல்லாம் புகழ்கிறார்கள் பக்தர்கள்.

பிரம்மமாகவும் ஞானமாகவும் திகழ்பவர் ஸ்ரீஹயக்ரீவர். குதிரை, வேகத்தின் குறியீடு மட்டும் அல்ல... அறிவுக்கு உதாரணமாகத் திகழ்வதும் கூட! அதனால்தான் ஞானத்தையும் யோகத்தையும் பறைசாற்றுகிற விதமாக, குதிரை முகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஹயக்ரீவர்!

மது-கைடபர் எனும் அசுரர்கள் இரண்டுபேர், பிரம்மாவிடம் இருந்து வேதங்களை எடுத்துச் சென்றார்கள். ஸ்ரீமந் நாராயணர் பரிமுகனாய், அதாவது குதிரை முகத்துடன் அவதரித்து, அசுரர்களை வென்று, வேதங்களை மீட்டெடுத்தார் என்கிறது புராணம்!

இன்றைக்கும் கலியுகத்திலும் கண்கண்ட தெய்வமாக, கல்விக் கடவுளாக இருந்து கல்வியும் ஞானமும் தந்தருள்கிறார் ஸ்ரீஹயக்ரீவர்.

தமிழகத்தில், ஸ்ரீஹயக்ரீவருக்கு உள்ள முக்கியமான திருத்தலம் திருவஹீந்திரபுரம். கடலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்!

இங்கே, ஒருகாலத்தில்... ஔஷதகிரி எனும் மலைக்கு மேல், ஸ்ரீநரசிம்மர் சந்நிதிக்கு எதிரே இருந்த அரச மரத்தடியில், கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் இருந்தார் மகான் ஒருவர்.

கருட மந்திரம் தன் சக்தியை வெளிக்காட்டியது. பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாரின் தரிசனம் மகானுக்குக் கிடைத்தது. அப்போது, ஸ்ரீகருடாழ்வார் அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந்தார்.

கருட பகவான் உபதேசித்த ஹயக்ரீவ மந்திரம் மகானின் உள்ளத்தில் பதிந்தது. அந்த மந்திரத்தை உச்சரித்து, ஸ்ரீஹயக்ரீவரை தியானித்தார். வழிபட்டார். ஸ்ரீஹயக்ரீவரின் திவ்விய தரிசனத்தைப் பெறும் பாக்கியம் கிடைக்கப் பெற்றார் அந்த மகான். அவரை அனுக்கிரஹித்தார் ஸ்ரீஹயக்ரீவர். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அந்த மகான்... ஸ்ரீதேசிகன்.

தனக்குத் திருவருள் கிடைத்த திருவஹீந்திரபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தார். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாஷத், தேவ நாயக பஞ்சாஷசத், அச்யுத சதகம் முதலான ஸ்தோத்திரங்களையும் மும்மணிக் கோவை, நவமணிமாலை முதலான தமிழ்ப் பிரபந்தங்களையும் அருளிச் சென்றார் ஸ்ரீதேசிகன்!

ஒருமுறை, துறவி ஒருவர் தேசிகனிடம் வாதம் புரிய வந்தார். அவர் ஒரு மந்திரவாதியும்கூட. ஆனாலும் ஸ்ரீதேசிகனின் முன்னால் துறவியின் வாதம் எடுபடவில்லை; தோல்வி அடைந்தார். எனினும், தேசிகனை மந்திர சக்தியால் பழிவாங்கத் துடித்தார்! ஒரு குளத்துக்குள் தடக்கென்று இறங்கியவர், குளத்து நீர் முழுவதையும் குடித்தார். அதன் விளைவாக ஸ்ரீதேசிகனின் வயிறு பருக்கத் தொடங்கியது. இந்தச் சூழ்ச்சியை அறிந்த ஸ்ரீதேசிகன், கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அருகில் இருந்த தூண் ஒன்றை நகத்தால் கீறினார். அவ்வளவுதான்... தூணில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது. படிப்படியாக ஸ்ரீதேசிகனின் வயிறும் பழைய நிலைக்குத் திரும்பியது. அதைக் கண்ட மந்திரவாதி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீதேசிகனை  நமஸ்கரித்தார்.

திருவஹீந்திரபுரத்தில், அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஔஷதகிரியில் (மலையில்) ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஔஷதகிரி சிறிய குன்று என்றபோதிலும், மேலே பிரமாண்டமான கோயிலில் அருமையாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர்!

மூலவர் லட்சுமி ஹயக்ரீவர். அருகே ஸ்ரீவேணுகோபாலன், கருடன் மற்றும் ஸ்ரீநரசிம்மரும் இருக்கிறார்கள். ஹயக்ரீவர் உற்ஸவ மூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கி, கீழ் வலக்கை அபய ஹஸ்தமும், கீழ் இடக் கை ஸ்ரீகோசத்துடனும் திகழ்கிறது.

திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும் ஹயக்ரீவருக்கு பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவநாதன் சந்நிதியில், ஸ்ரீதேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவரும் அருள்பாலிக்கிறார்! இவர் ரொம்பவே சாந்நித்தியமானவர் என்கிறார்கள் பக்தர்கள்.

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்த நாளில் இங்கு வந்து ஸ்ரீஹயக்ரீவரை கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், ஞானமும் யோகமும் கைகூடும்! ஞானத்தாலும் யோகத்தாலும் சகல செல்வங்களையும் அடையலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்