கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் - 'கோவிந்தா' கோஷங்களுடன் பக்தர்கள் வெள்ளம்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய விழாவன தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என முழங்கினர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, ஆடி அசைந்தாடி வந்த தேரில் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும், ஆடி பவுர்ணமியன்று தேரோட்டத் திருவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனையொட்டி ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன்பின் தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பச் சப்பரம், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

முக்கிய விழாவான தேரோட்டம் ஆடி பவுர்ணமியான இன்று நடந்தது. அதனையொட்டி காலை 6.30 மணியளவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்குமேல் 8.35 மணிக்குள் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேர் நிலையிலிருந்து புறப்படத் தொடங்கியது. தென் மாவட்டங்களிலிருந்து தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் நேற்று இரவு வந்து தங்கினர்.

அதிகாலையில் தேரில் எழுந்தருளிய பெருமாளை கண்டவர்கள் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் கோவிந்தா.. கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினர். மக்கள் வெள்ளத்தில் ஆடி, ஆடி வந்த தேரில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

தேரோட்டத்துக்கு மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேரோட்டம் சிறப்பாக முடிந்த நிலையில் இன்று மாலையில் கோயில் வளாகத்திலுள்ள18-ம் படி கருப்பணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நடைபெறும். ஆக.2ம் தேதி சப்தவர்ணம், புஷ்பச்சப்பரம் நடைபெறும். ஆக.3ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாஜலபதி, துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE