என் அம்மா அடிக்கடி சொல்லுவார்... ‘போனா வராது, பொழுது சாஞ்சா கிடைக்காது’ என்று! இதை எதற்காகச் சொன்னார். எல்லாவற்றுக்கும்தான் சொன்னார். விளையாட்டாகச் சொன்னார். மிகப்பெரிய விஷயத்தை, மிக எளிமையாகச் சொன்னார் என்பதாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அற்புதமானது இந்த வாழ்க்கை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த வாழ்க்கையை, ஒருநாள்... ஒரு நிமிடம்... தவற விட்டால் கூட, திரும்பக் கிடைப்பதில்லை. அந்த நாளும் நொடியும் மீண்டும் வந்து... ‘இந்தா வைச்சுக்கோ... நீ மிஸ் பண்ணின நேரமும் காலமும். எடுத்துக்கோ’ என்றெல்லாம் தராது. கிடைக்கவே கிடைக்காது. ஆகவே அந்தந்த நேரத்தையும் நிமிடத்தையும் காலத்தையும் உணர்ந்து வாழ்வதே, பிறந்ததற்கும் வாழ்ந்ததற்குமான அர்த்தம்; நியாயம்; தர்மம்! அதனால்தான் இந்த வாழ்க்கை அற்புதமானது என்கிறோம்.
குழந்தைகளைப் பார்த்ததும் என்ன செய்கிறோம். கொஞ்சுகிறோம். சாக்லெட் வாங்கித் தருகிறோம். விளையாடுவதற்கு பொம்மையோ பொம்மைக் காரோ கொடுக்கிறோம். எழுதுவதற்கு பேனா பென்சிலும், படிப்பதற்கு புத்தகமும் வழங்கி சந்தோஷப்படுத்துகிறோம். சந்தோஷப்படுகிறோம். இறைவனும் அப்படித்தான்.
கடவுளுக்கு எப்போதுமே நாம் குழந்தைகள்தான். கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில், கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் எல்லோருமே இறைவனின் பிள்ளைகள்தான். அவனுடைய குழந்தைகளாகிய நமக்கு, நம் சந்தோஷங்களுக்காகவும் நம் உற்சாகத்துக்காகவும் நம்மை உத்வேகப்படுத்துவதற்காகவும் நமக்கு வழிகாட்டவுமாக இறைவனால், இந்த உலகுக்கு வழங்கப்பட்ட அருளாளர்கள்தான் மகான்கள்! பகவான் சாயிபாபாவை உணர்ந்து பக்தர்களும் அப்படியே கொண்டாடுகிறார்கள்.
அற்புதமான இந்த வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தி அருளியிருக்கிறார் பகவான் சாயிபாபா. அந்த அதிசயங்கள் ஒவ்வொன்றுமே மக்களுக்கான, பக்தர்களுக்கான வரங்கள்.
ஷீர்டி சாயிநாதனை, முழுதுமாக நம்புங்கள். நம்பினால்தான் எதுவுமே கிடைக்கும். எதையும் பெறமுடியும். அவரை நம்பி, அவரைத் தொழுது, அவரின் திருப்பாதம் பணிந்து, அவரிடம் நாம் வைக்கிற எந்தக் கோரிக்கையையும் அந்த அன்புமகான் தட்டுவதே இல்லை. நம் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காமல் இருக்கவே மாட்டார். அதுதான் பாபாவின் கருணை.
முதலில்... பாபாவை, சாயிநாதனை, ஷீர்டி நாயகனை மனமுருகி வேண்டுவோம்.
‘ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய ஜெய சாய்’
எனும் மூலமந்திரம்தான், நம் வாழ்க்கையின் வெற்றிக்கான தாரக மந்திரம். சாயிநாதனே எனக்கு எல்லாம் என்று இதை தினமும் ஒருநாளில்... ஒரு முறையேனும் சொல்லுங்கள். உங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களின் பயணத்திலும் உங்களுக்குப் பக்கத்திலேயே இருந்து உங்களை வழிநடத்தி அருள்வார் பகவான் சாயிநாதன்.
இந்த ஒரு வார்த்தையே, நம் வாழ்க்கையை நல்ல முறையில், நல்லவிதமாக, திசை திருப்பிவிடும் வல்லமை கொண்டது. அப்படியிருக்க... அந்த மகானை முறையே விரதம் அனுஷ்டித்து பிரார்த்தித்தால், இன்னும் இன்னும் நமக்காக என்னவெல்லாம் செய்வார் என்று யோசியுங்கள் நண்பர்களே!
அந்த விரதத்துக்கு சாய் சத்ய விரத பூஜை என்று பெயர். இந்த பூஜையில், சாயிபாபாவின் சரிதத்தைப் படிக்க வேண்டும் என்பதே ஆரம்பம். பூஜையறையில், சாயிபாபாவின் சிறிய சிலையோ, படமோ இருக்கிறதா? அவரின் படத்துக்கு முன்னே, அமர்ந்து கொண்டு, பாபாவின் சரிதத்தைப் படியுங்கள்.
செண்பகப் பூக்களை அவருக்கு சார்த்துங்கள். ‘ரொம்ப காஸ்ட்லியாச்சே. நிறைய இடங்கள்ல கிடைக்காதே’ என்று சொல்லலாம். தேடுங்கள். கிடைக்கும் இடங்களை, பூக்கடைகளை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை தோறும் செண்பகப் பூ வேண்டும் என்பதை சொல்லிவையுங்கள். நான்கு மாதத்துக்குப் பிறகு செல்லும் ஊருக்காக ரயிலில் புக் செய்துவிடுகிறோம்தானே. நான்கு நாட்களுக்கு முன்னதாக, சினிமாவுக்கான டிக்கெட்டை பதிவு செய்துவிடுகிறோம், இல்லையா. இரண்டு நாட்களுக்காவது ஓடும் என்பது மாதிரிதானே வண்டியில் பெட்ரோல் நிரப்பிக் கொள்கிறோம்.
மூன்று நாட்களுக்காவது பயன்படும் என்று திட்டமிட்டுத்தானே இட்லிக்கும் தோசைக்குமாக மாவு அரைத்து வைத்துக் கொள்கிறோம். அப்படித்தான் பாபாவுக்கான செண்பகப்பூவும்!
வெண்மை நிற மலர்களாலும் பாபாவை அலங்கரிக்கலாம். செந்நிற மலர்கள் கொண்டும் அவரை பூஜிக்கலாம். அப்படி வணங்குகிற போது, ‘ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய ஜெய சாய்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். ஜபித்துக் கொண்டே இருங்கள். குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில், குருநாதர் சாயிநாதனை உங்கள் இல்லத்துக்கு வரவழைக்கிற பாக்கியம் பெற்ற நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். உங்கள் வாழ்க்கை அற்புதமானதுதான். இனி அற்புதமாகப் போகிறது உங்கள் வாழ்வு என்பது சர்வ சத்தியம்தான்!
‘சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை’ என்றொரு சொல், பாபா பக்தர்களுக்கு ரொம்பவே பரிச்சயம். ஒரு கிண்ணத்தில், கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். 21 நாட்களுக்கு எந்த இனிப்பும் எந்த வகையிலும் சாப்பிடாமல் இருங்கள். உங்களால் முடியும் போதெல்லாம், பாபா நாமத்தைச் சொல்லிக்கொண்டிருங்கள். மிகச் சரியாக 21ம் நாள்... உங்களைத் தேடி, உங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு, அழைப்புமணி அடித்து, உங்கள் வீட்டுக்கே வரும் உங்கள் வாழ்க்கை அற்புதமாவதற்கான இனிப்பான சேதி!
இந்த ‘சர்க்கரை’ சோதனையை, நிறைய பக்தர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். செய்ததால் கிடைத்த பலன்களை விழிகள் விரிய விவரித்திருக்கிறார்கள்.
மந்திரத்தை ஜபியுங்கள். சர்க்கரையை கிண்ணத்தில் தனியே வைத்துவிடுங்கள். அற்புதங்களை நிகழ்த்த தயாராகிவிடுவார் சாயிநாதன். அற்புதங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில், இந்த உலகில், பாபாவின் அற்புதங்களுக்கு குறைவே இல்லை!
‘ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய ஜெய சாய்’
& அருள்வார்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago