சோழ தேசம் என்றதும் ஒரு குழந்தையைப் போல் பாய்ந்தோடி வரும் காவிரிதான் நினைவுக்கு வரும். தஞ்சாவூர் என்றதும் கோயில்நகரம் கும்பகோணமும் குடந்தையில் நடைபெறும் மகாமக தீர்த்தாடலும் ஞாபகம் வந்துவிடும். அதேபோல் கும்பகோணத்தை மையப்படுத்தி யோசித்தால், அருகில் உள்ள திருவிசநல்லூர் திருத்தலமும் நினைவுக்கு வரும். அங்கே வாழ்ந்த ஸ்ரீதர ஐயாவாளும் சட்டென்று நினைவில் நிற்பார்.
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரும் ஊரைச் சொன்னதும் நினைவுக்கு வரும் ஸ்ரீதர ஐயாவாளையும் காலம் உள்ளவரை போற்றிக் கொண்டாடுவார்கள் பக்தர்கள். இவரின் முழுப்பெயர்... ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்.
ஒருமுறை , ஸ்ரீதர ஐயாவாளின் இல்லத்தில், சிராத்த காரியங்கள் நடைபெற்றன. அதையொட்டி, வீட்டில் அதற்கான சமையல் ஏற்பாடுகள் கனஜோராக தயாராகிக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம், ஸ்ரீதர ஐயாவாள், காவிரியில் குளிப்பதற்காகக் கிளம்பினார்.
வழியில் யாரோ ஒரு வழிப்போக்கன்... வாடிவதங்கள், கண்கள் இருண்டு, துவண்டிருந்தான். எப்போது வேண்டுமானாலும் மயங்கிச் சரிந்துவிடுவது போலிருந்த அவனை ஐயாவாள் பார்த்தார். அருகில் சென்றார்.
'என்னப்பா... என்னாச்சு... என்ன வேணும்’ என்று கனிவுடன் கேட்டார். இந்த வார்த்தைகளே அவனுக்குத் தெம்பைக் கொடுத்தன போலும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ’ஐயா... பசிக்குது சாமீ...’ என்றான் கும்பிட்டபடி.
பதறிப் போனார் ஸ்ரீதர ஐயாவாள். அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து நிறுத்தினார். கைப்பிடித்து விறுவிறுவென வீட்டுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே உட்காரச் சொல்லி, பின்னே கொல்லைப் புறத்தில் இருந்து, வாழைமரத்தில் இலைகளை அறுத்து எடுத்து வந்து, அவன் முன்னே வைத்தார்.
சுடச்சுட, மணக்கமணக்க உணவு தயாராகி அப்போதுதான் எல்லா வேலைகளும் முடிந்திருந்தன. அவற்றை எடுத்து வந்து, அவரே பரிமாறினார். அவன் உயிர் பெற்றான். தவிர, ஸ்ரீதர ஐயாவாள் என்ற மகானின் அருளையும் பெற்றுக் கிளம்பிச் சென்றான்.
அவ்வளவுதான்... அக்ரஹாரத்தில் இருந்த அந்தணர்கள் அனைவரும் கொந்தளித்தார்கள். ஐயாவாளை ஏற்கெனவே பிடிக்கவில்லை அவர்களுக்கு. இப்போது இந்த விஷயத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். எல்லோரும் கூடிக்கூடி பேசி இன்னும் வசை பாடினார்கள். இறுதியாக, சிராத்த காரியம் நடக்கும் போது, இப்படியொருவனை வீட்டுக்குள் அழைத்து உணவளித்தது மகாபாதகம். எனவே சிராத்த காரியத்துக்கு யாரும் போகக்கூடாது என உறுதியாகச் சொன்னார்கள்.
கிட்டத்தட்ட, ஊர் கூடி ஐயாவாளை விலக்கிவைத்தது. ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டுக்கு நாம் யாரும் போகக் கூடாது என்று தங்களுக்குள்ளேயே சபதம் போல் சொல்லிக் கொண்டு, அவரை விலக்கி வைத்தார்கள். முகம் திருப்பிக் கொண்டார்கள். இதனால், அன்றைய சிராத்த நிகழ்வை, அந்தணர்கள் எவருடையை உதவியும் இல்லாமலேயே செய்து முடித்தார் ஸ்ரீதர ஐயாவாள்!
சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. முன்னோரில் ஒருவருக்கான சிராத்தம். அதை முறைப்படி, செவ்வனே செய்ய விரும்பினார் ஸ்ரீதர ஐயாவாள். தெருவில் உள்ள அந்தணர்களின் வீடுகளுக்குச் சென்று, வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். சிராத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும்படி வேண்டினார். ஆனால் அனைவரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
இறுதியாக, ‘இது பித்ரு காரியம். ஆகவே இதற்காகத் தகுந்த பிராயச்சித்தம் ஏதேனும் இருந்தால் அதைச் செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என்றார். உடனே அங்கே இருந்த அந்தணர்களில் ஒருவர், நக்கலும் கேலியுமாக, ‘அப்படியென்றால் கங்கையில் குளித்து வா ஸ்ரீதரா. அதுதான் பிராயச்சித்தம்’ என்று சொன்னார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் கைகொட்டிச் சிரித்தார்கள். எக்களித்தார்கள். நக்கல் செய்து அவமானப்படுத்தினார்கள்.
திருவிசநல்லூரில் இருந்து காசிக்குச் செல்வதற்கும் அங்கே கங்கையில் குளித்துவிட்டு, காசியில் இருந்து பிறகு கும்பகோணத்துக்கு திரும்புவதற்கும் வெகுநாட்களாகுமே. சிராத்தம் என்பது இன்றைக்குத்தானே. ஒரேநாளில் இது எப்படி சாத்தியம். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கேலி செய்வதை உணர்ந்துகொண்டார் ஸ்ரீதர ஐயாவாள்!
ஒரு நிமிடம் அவர்களை உற்றுப் பார்த்தார். பிறகு தரையைப் பார்த்துக் கொண்டே யோசித்தார். மீண்டும் அவர்கள் அனைவரையும் பார்த்தார். ‘உங்கள் அறிவுரைக்கு நன்றி. நீங்கள் சொல்லும் பிராயச்சித்தம் ரொம்பவே உன்னதமானதுதான். நல்ல போதனைகளை வழங்கிய அந்தணக் கூட்டத்துக்கு நமஸ்காரம். நான் வருகிறேன்’ என்று சொல்லி, அவர்களைப் பார்த்து ஓங்கிக் கையெடுத்துக் கும்பிட்டார். பிறகு விறுவிறுவென வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்தவர், கொல்லையில் உள்ள கிணற்றடிக்குச் சென்றார். கிணற்றை எட்டிப் பார்த்தார். பிறகு கண்களை மூடிக் கொண்டார். நெஞ்சில் கைவைத்துக் கொண்டு, கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தை உரக்கச் சொன்னார். சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில், அந்தக் கிணற்றின் அரைப்பகுதியில் இருந்த தண்ணீரானது, மெள்ள மெள்ள மேலேறியது. கிணற்றின் மேல் மட்டத்தை எட்டியது. அடுத்து கிணற்றைத் தாண்டி எட்டிப் பார்ப்பது போல், தளும்பியது. அப்படியே வழிந்தது. ஸ்ரீதர ஐயாவாளின் வீடு முழுக்க தண்ணீரால் நிறைந்திருந்தது. அடுத்து அந்தத் தண்ணீர் தெருவில் இறங்கியது. வீதியை நனைத்தது. மறுநிமிடமே, தெருவே வெள்ளத்தில் மிதந்தது.
தெருக்காரர்களும் ஊர்மக்களும் விஷயம் அறிந்து ஓடோடி வந்தார்கள். ‘என்னடா இது. மழையே இல்லை. ஆனால் வெள்ளம் மாதிரி பெருக்கெடுத்து, தெருவே நிறைந்திருக்கிறதே’ என்று குழம்பினார்கள்.
அப்போதுதான் ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டில் இருந்துதான் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது என்பதை உணர்ந்தார்கள். சிலிர்த்தார்கள். மலைத்தார்கள். ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக்கு ஓடிவந்தார்கள். அங்கே கிணற்றடியில் கங்காஷ்டகம் சொல்லிக் கொண்டே இருந்ததைக் கண்டார்கள். கிணற்றில் இருந்து தண்ணீர் பீரிட்டு வருவதைப் பார்த்தார்கள். அதிர்ந்தார்கள்.
‘ஐயனே. எங்களை மன்னியுங்கள். உங்களின் உன்னதமான பக்தியால், அந்த கங்காதேவியே உங்கள் வீட்டு கிணற்றுக்குள் வாசம் செய்துவிட்டாள்’ என்று சொல்லி, அவரை விழுந்து நமஸ்கரித்தார்கள்.
கண் திறந்து பார்த்த ஸ்ரீதர ஐயாவாள், அனைத்தையும் உணர்ந்தார். மீண்டும் வேண்டிக் கொண்டு ஒரு ஸ்லோகத்தை உரக்கச் சொல்ல... அந்தக் கிணற்றிலேயே கங்காதேவியானவள் ஐக்கியமாகி, இன்றளவும் அந்தக் கிணற்றை புனிதப் படுத்திக் கொண்டிருக்கிறாள்!
கும்பகோணமும் திருவிசநல்லூரும் அந்த ஊரில் ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த இல்லமும் இன்றைக்கு பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ வருடங்களும் நூற்றாண்டுகளும் ஓடிவிட்டன. வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில், அமாவாசை தினத்தில் திருவிசநல்லூர் தலத்தில் உள்ள ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த வீட்டில், கங்காதேவியானவள் கிணற்றில் ஐக்கியமாகிறாள் எனப் பூரிக்கின்றனர் பக்தர்கள்!
கார்த்திகை அமாவாசை நாளில், விமரிசையாக நடைபெறுகிறது இந்த விழா. இதில் கலந்து கொள்வதற்காகவே, ஏராளமான பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வருகின்றனர்.
18.11.17 சனிக்கிழமை அமாவாசை. கார்த்திகை அமாவாசை. கிணற்றுக்குள் கங்கை பிரவாகித்த நன்னாள்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago