சுவாமி சரணம்.. 7: துடையில் இருந்த துளை... விபூதியால் அடைத்த ஐயன்!

By வி. ராம்ஜி

குரு என்பவரே இங்கு சகலமும்! யோசித்துப் பார்த்தால், நம் வாழ்வில் ஏதேனும் ஒருவகையில், குரு ஸ்தானத்துக்கு நிகராக எவரேனும் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டே இருப்பார்கள். குரு என்பவர் எப்போதும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டோ, பாடம் போலான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டோ இருக்கவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

நம் அப்பாவை ஆழமாகப் பார்த்தால், அவரே நமக்கு குரு நிலையில் இருந்து சில விஷயங்களைப் போதித்திருப்பார். நம் அண்ணனோ தம்பியோ, அடுத்த வீட்டுக்காரரோ எதிர்வீட்டு மாமாவோ, நண்பரின் தந்தையோ, நண்பரோ கூட நம்மை ஒவ்வொரு கட்டத்திலும் வழிநடத்தி வந்திருப்பார்கள்.

சில தருணங்களில், இவற்றை உணர்ந்து சிலிர்ப்போம். ஆனால் முக்கால்வாசி காலங்களில், இவர்களை நாம் உணருவதே இல்லை. அப்படியே உணர்ந்தாலும், மிகவும் காலம்கடந்து உணர்ந்திருப்போம்.

‘ஐயப்பனுக்கு மாலை போடணும். விரதம் இருக்கணும். இருமுடி கட்டணும். ஐயப்பனைத் தரிசனம் பண்ணனும். வீட்டுக்குக் கிளம்பி வரணும். பழையபடி வாழ்க்கைக்குள்ளே போயிடணும். இப்படி ஒரு டைம்டேபிள் போட்டுத்தான் ஐயப்பனுக்கும் நமக்குமான பந்தம் இருப்பதா நினைச்சிக்கிட்டிருக்கோம். செயல்பட்டுட்டிருக்கோம்.

ஆனா, ஐயப்ப சுவாமிதான் நமக்கான ஞான குரு. தேவ குரு. பூர்வ குரு. அவ்வளவு ஏன்... நமக்கு தந்தை அவன்தான். அன்னை அவன்தான். குருவும் அவனே. கடவுளாகவும் இருந்து நம்மை காபந்து செய்கிறான்’’ என்று பிரபல பாடகர் வீரமணி ராஜூ அண்ணா, என்னிடம் பேசும் போது, மெய்சிலிர்க்கச் சொல்லுவார்.

குரும் பூர்ண லாவண்ய பாதாதி கேசம்

கரீயம் மஹத்கோடி ஸூர்ய ப்ரகாசம்

கராம்போருஹன்யஸ்த வேத்ரம் ஸுரேசம்

பரம் ஜ்யோதி ரூபம் பஜே பூதநாதம்

தலைமுதல் கால்வரை கருணையே நிரம்பிய குரு வடிவானவர், கோடி சூர்யனைப் போன்ற பிரகாசம் கொண்டவர், தாமரை போன்ற கைகளில் அழகிய பிரம்பினைக் கொண்டு காட்சி தருபவர், ஜோதிஸ்வரூபனான அந்த பூதநாதனை (ஐயப்பனை) வணங்குகிறேன் என்றொரு ஸ்லோகம் உண்டு. இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல நமக்கு அருகே வந்துவிடுகிறான் ஐயப்பன். நம் ஒவ்வொரு செயல்களிலும் உடன் இருந்து உத்வேகப்படுத்துகிறான். ஊக்கப்படுத்துகிறான். காரியம் யாவிலும் துணை நிற்கிறான். அந்தக் காரியமாகவே இருக்கிறான் என்கிறார் இனிய நண்பரும் உபந்யாசகருமான அரவிந்த் சுப்ரமணியம்.

நம் பாரத பூமியில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் இறைப் பணிக்காக, கர்மயோகிகள் பலர், தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். கடவுளின் சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்திருக்கிறார்கள். கடவுளை பக்தி செய்வதே மூச்சாகக் கொண்டிருக்கிறார்கள். கடவுளே கடைத்தேற்றுபவன் என்று போதித்திருக்கிறார்கள். கடவுள் தேடலே பிறவிப்பயன் என்று வாழ்ந்து உபதேசிக்கிறார்கள்.

அப்படி கடவுள் பக்தியுடன், ஐயப்ப பக்தியுடன் தொண்டு செய்து வாழ்ந்தவர் கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயர். எல்ல்லோரும் ‘சாமி அண்ணா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

ஐயப்ப பக்தி எனும் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக-

அந்த தர்மசாஸ்தாவினால் ஆட்கொள்ளப்பட்ட அணுக்கமான பக்தர் அவர். வேதநெறி தழைத்தோங்கும் கேரளாவின் பாலக்காடு அக்ரஹாரத்தில் பிறந்தவர். அப்பா வெங்கடீஸ்வரரும் அம்மா தைலாம்பாளும் ஞானத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்தார்கள்.

நைத்ருப காஷ்யப கோத்திரத்தில், குளிர்ந்த மார்கழி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில், 1908ம் வருடம் பிறந்தார். பார்த்தால்... மார்கழி என்பது ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் காலகட்டம் அது. தவம், தியானம், மந்திரம் ஓதுதல், உபதேசித்தல் எனும் புண்ணியச் செயல்களுக்கான மாதம் அது!

‘‘எங்க கொள்ளுத்தாத்தா பிறக்கும் போதே, ஐயப்பன் தன் விளையாட்டை குழந்தைக்கிட்டே ஆரம்பிச்சுட்டான்னுதான் சொல்லணும். குழந்தைக்கு தொடைல, ஆழமான ஒரு துளை இருந்ததாம். எல்லோரும் பதறிப் போயிட்டாங்க. குழந்தையும் பிறந்தது முதலே, ரொம்ப சோர்வாகவே இருந்துதாம்.

அப்போ, யாரோ ஒருத்தர் வந்திருக்கார். ஊர்ல எல்லாரும் பேசிக்கிட்டாங்க. கவலையே படாதீங்க. ஒண்ணும் ஆகாதுன்னு சொல்லிக்கிட்டே, பகவானோட விபூதிப் பிரசாதத்தை குழந்தையோட நெத்தில இட்டுவிட்டார். அப்புறம், தொடைல துளைப்பகுதில, விபூதியை மளமளவெனக் கொட்டி, அந்தத் துளையையே அடைச்சிட்டார். அப்படியே கையால அழுத்தி, கண் மூடி ஏதோ சொல்லி குழந்தையோட தலைல கைவைச்சு, ஆசீர்வாதம் பண்ணிட்டுக் கிளம்பிப் போயிட்டார். வீட்ல இருந்தவங்க, கவலையோடயும் பயத்தோடயும் இருந்ததுலேருந்து மாறவே இல்ல.

கொஞ்ச நேரத்துல, குழந்தைகிட்டேருந்த சோர்வு போய், ஒரு சுறுசுறுப்போட கையை காலை உதைக்க ஆரம்பிச்சுது. முகத்துலயும் கண்ணுலயும் ஒரு தேஜஸ் பரவிக்கிடந்துச்சு. அந்தக் குழந்தை லேசாச் சிரிக்க ஆரம்பிச்சுது. குழந்தை மட்டுமில்ல... எல்லாரும் அப்பத்தான் குழந்தை பொறந்திருக்கிற சந்தோஷத்துக்கும் குதூகலத்துக்கும் வந்தாங்க.

ஊர்ல தெருவுல குழந்தை தொடைல துளை இருக்கிற விஷயம் சொல்லி யாரோ வந்து, என்னவோ வேண்டிக்கிட்டு விபூதி வைச்சிட்டுப் போனதா அப்ப சாதாரணமா நினைச்சாங்க. ஆனா, அப்புறம்தான் வந்தவர் யாரு வந்தவர் யாருன்னு எல்லாரும் கேட்டுக்கிட்டாங்க.

விபூதியோட வந்தவர் யாருன்னு தெரியவே இல்லை. ஆனா ‘இந்தக் குழந்தை எனக்கான குழந்தை. இவன் என்னோட பக்தன். எனக்கு சேவை செய்றவன்ன்னு அந்த சாஸ்தாவே ‘சாமி அண்ணா’வை தேர்ந்தெடுத்துருக்கார். அதனாலதான் ஏதோவொரு ரூபத்துல வந்து, ஆசீர்வாதம் பண்ணிருக்கார்னு எங்க கொள்ளுத் தாத்தா, ஐயப்ப பக்தர்னு அடையாளத்தோட இளைஞரா வலம் வந்தப்ப, ஊர்ல பெரியவங்க எல்லாரும் சொல்லிச் சொல்லி வியந்தாங்க.

கடவுள் உண்டு. கடவுள் ஏதோவொரு ரூபத்துல நம்மகிட்ட வருவார்ங்கறதுல எந்த மாற்றமும் இல்லை. ஐயன் ஐயப்பன் அருளாளன். அவன், அப்படித்தான் பக்தர்கள்கிட்டேயே வந்து, அவங்களுக்கு அருள் செய்வான். அப்படி ஐயன் அருளிய வம்சத்திலேருந்து வந்திருக்கற விதையா நாமளும் இருக்கோங்கறதுல, எனக்கு ரொம்பவே பெருமை.

இதைவிட இந்த ஜென்மத்துக்கு வேறென்ன வேணும்’’ என்று சொல்லி நெகிழ்கிறார் அரவிந்த் சுப்ரமணியம்.

இனிய ஐயப்ப பக்தர்களே! உங்கள் வாழ்விலும் ஏதேனும் ஒரு இக்கட்டான தருணத்தில், யாரோ ஒருவராக வந்து, ஏதோவொரு வகையில் நம்மைக் கைப்பிடித்து உயர்த்தியிருப்பான்; கண்ணீரைத் துடைத்திருப்பான்; தோள் கொடுத்து தாங்கியிருப்பான் ஐயப்ப சுவாமி. யோசித்துப் பாருங்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

-ஐயன் வருவான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்