நகரங்களில் இருக்கிற மக்களுக்கு மட்டும் இயேசு வழிகாட்டவில்லை. கிராமம் கிராமாகப் பலநூறு கிலோமீட்டர் நடந்து சென்று போதனை செய்தார். தன் போதனையைக் கேட்டு, அதை ஏற்றுக்கொண்ட அனைவரையுமே தனது வழியைப் பின்பற்றும் சீடர்கள் என்று அடையாளப்படுத்தினார். தன்னைப் பின்தொடர்ந்த 12 சீடர்களைப் பார்த்து “ நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தந்தையின் பெயராலும், அவருடைய மகனின் பெயராலும், அவருடைய சக்தியின் பெயராலும் திருமுழுக்கு கொடுத்து, அவர்களது பாவங்களைக் கழுவி, புதிய மனிதர்களாக்குங்கள்.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ, இந்த சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரையிலும் எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அதனால்தான் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை ‘சீடத்துவ வாழ்வு’ என்று கூறுகிறார்கள்.
அன்பே வெற்றிக்கான ஆணிவேர்
சரி, இயேசு குறிப்பிடும் சீடத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? விவிலியத்தின் கொரிந்தியர் புத்தகம் 1:13-ல் எழுதப்பட்டுள்ள வசனம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ‘அன்பானது பொறுமையும் கருணையும் கொண்டது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்’ என்பது கொரிந்தியர் வசனம்.
தனது மலைப் பிரசங்கத்தில் இயேசு விரிவாக எடுத்துக்கூறிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிற யாரும் சிறந்த சீடத்துவ வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு சக மனிதர்கள் மீது நிபந்தனையற்ற அன்பைக் காட்டுவதன் மூலம் முன்மாதிரியாக நம்மை மாற்றிக்கொள்வது மிக முக்கியமானது. நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும் பரலோகத் தந்தையாகிய யகோவா பொறுமையாக இருக்கிறார். மீண்டும் மீண்டும் நமக்குக் கருணை காட்டுகிறார்.
அதேபோல் நாமும் சக மனிதர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். அவர்கள் தவறு செய்யும்போது, யோசிக்காமல் பேசும்போது, கோபப்படும்போது நாம் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கு அன்பு தேவை, அப்போதுதான் சிறந்த சீடராக விளங்க முடியும் என்று இயேசு தன் சீடர்களிடம் அறிவுறுத்தினார்.
நாம் நீதிபதிகள் அல்ல
தன்னை நாடிவந்து புதுவாழ்க்கை வாழ வழிகேட்டவர்களிடமும் இதுபற்றி இயேசு விளக்கினார். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.
உங்கள் கண்ணில் இருக்கிற உத்திரத்தைக் கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று எப்படிக் கேட்க முடியும்? முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” என்று கூறி நாம் நீதிபதிகள்போல் யாரையும் தீர்ப்பிடத் தேவையில்லை என்று கூறினார்.
தட்டுங்கள்… கேளுங்கள்
அன்பை மட்டுமே பொழிந்து மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் வாழ்ந்தால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்றால், அவை மட்டுமே போதாது என்கிறார் இயேசு. ‘தேடல்’ வாழ்க்கையின் மிக முக்கியச் செயல்பாடு என்பதையும் அவர் எடுத்துக்கூறத் தவறவில்லை.
“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்.
உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா, மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தந்தை தன்னிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்.” என்ற இயேசு, சிறந்த சீடத்துவ வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களைப் பாறையின் மீது வீட்டைக் கட்டிய புத்திமான் என்று கூறினார்.
பாறையின் மீது வீட்டைக் கட்டியவன்
“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். பெருமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை.
ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. அதேநேரம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான். பெருமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது, அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார்.
சிறந்த சீடத்துவ வாழ்வு குறித்து இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அங்கே மக்கள் அசந்துபோனார்கள். ஏனென்றால், அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கனமான விஷயங்களையும் மக்களின் மொழியில் அவர் பேசியதுதான்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago