காரைக்குடி அருகே ஒரே கோயிலில்... ஸ்ரீதட்சிணாமூர்த்தி... லக்ஷ்மி ஹயக்ரீவர்!

By வி. ராம்ஜி

அப்போது சேதுச் சீமை. இப்போதைய ராமநாதபுரம் மாவட்டம். இங்கே, திருப்புல்லாணி கிராமத்துக்கு அருகில், சேதுக் கடலோரத்தில், சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, பித்ருக்களுக்கு ஏராளமானோர் திதி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடம், திதி கொடுப்பதற்கும் பித்ருக்களை ஆராதனை செய்வதற்கும் உன்னதமான இடம்.

அங்கே அப்போது, கரை ஒதுங்கியிருந்த பெருமாளின் விக்கிரகத்தைக் கண்டு வியந்தனர். மகிழ்ந்தனர். அந்த விக்கிரகத்தை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு, செட்டிநாடு என்று சொல்லப்படும் காரைக்குடிக்குச் சென்றனர். வழியில், ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயில் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனவே, பெருமாள் விக்கிரகத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்வது என ஏகமனதாக எல்லோரும் முடிவு செய்தனர்.

காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில், உள்ளது நாகநாதபுரம். இங்கே ஸ்ரீநாகநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீபெருமாள் கோயில்கள் உள்ளன. மிகுந்த வரப்பிரசாதியானவர் இந்தப் பெருமாள் எனப் போற்றி வழிபடுகின்றனர் மக்கள். தாயாரின் திருநாமம்- ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்.

பங்குனி மாதம் வந்துவிட்டால், இந்தப் பகுதியே களைகட்டிவிடும். 13 நாள் திருவிழா ஏக அமர்க்களமாக நடைபெறும். 6-வது நாளில், தாயாரும் பெருமாளும் திருமணக் கோலத்தில் காட்சி தருவதைக் காணக் கண்கோடி வேண்டும். அந்த நாளில் தரிசித்து, பள்ளியறை பூஜை முடிந்ததும், பெருமாளுக்குச் சார்த்திய மாலையை வீட்டுப் பூஜையறையில் வைத்து வணங்கினால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!

இங்கு, தனிச்சந்நிதியில் காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் விசேஷமானவர்! கல்விக்கு அதிபதியான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை, வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால், படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள்கூட ஞாபகசக்தி அதிகரித்து கெட்டிக்காரர்களாக மாறுவார்கள்; தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாதந்தோறும் பௌர்ணமியில் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், சத்ரு பயம் நீங்கும்; அறிவாற்றல் பெருகும்; தொழில் விருத்தியாகும்; பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தேர்வுக்கு முன்னதாக இங்கு மாணவர்களுக்காகச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து மாணவர்கள் பலரும் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கிறார்கள். அதேபோல், குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, இங்கு அட்சராப்பியாசம் எனப்படும் நெல்லில் குழந்தைகளை எழுதச் செய்யும் வைபவம் சிறப்புற நடைபெறும்.

ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமியும் விசேஷமானவர்தான். தவிர, அஷ்டமா ஸித்தியையும் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பிரமாண்ட திருமேனியராகக் காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இவரைத் தரிசித்தால், கல்வியில் ஞானமும் மேன்மையும் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீசெண்பகவல்லித் தாயாருக்கு வில்வ மாலை மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து நெய்தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லை ஒழியும்!

புதன்கிழமைகளில் பெருமாளுக்கு அவல் படைத்து வழிபட்டால், பிள்ளை வரம் பெறலாம். மாசி மக கருடசேவையைத் தரிசித்தால், 12 வருடங்கள் பெருமாளை வழிபட்ட பலன் கிடைக்கும்.ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்