கிறிஸ்துவின் தானியங்கள் 08: கடவுளின் அரசுக்குள் யார் நுழைவார்கள்?

By அனிதா அசிசி

 

லிலேயாவிலிருந்து புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடந்து யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் போய் மக்கள் மத்தியில் போதனை செய்தார் இயேசு. அவரது புகழ் ஏற்கெனவே பரவியிருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். தன்னை நாடிவந்த அனைவரையும் அவர் குணமாக்கினார். இயேசுவின் பின்னால் திரளான மக்கள் செல்வதைக் கண்ட யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பரிசேயர்கள், மக்களின் முன்பாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே அவரைத் தவறானவர் என நிறுவ முயன்றுவந்தனர்.

ஒரு கிராமத்தில் இயேசு மக்கள் மத்தியில் இருந்தபோது பரிசேயர்கள் அவரிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் இயேசுவிடம், “ தன் மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவர் விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “கடவுள், தொடக்கத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன் காரணமாகவே, மனிதன் தன்னுடைய தாய், தந்தையை விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள் என்று ‘அவர்’ சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருப்பாராக” என்று கூறினார்.

இயேசு கூறிய பதில்

உடனே அந்தப் பரிசேயர், “ அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் கூறினார்?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார். அதற்கு இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார். ஆனால், தொடக்கத்திலிருந்து அவ்வாறு இல்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன், முறைகேடான உறவுகொள்கிறான்” என்று சொன்னார். இயேசு இப்படிக் கூறியதும் பதில் ஏதும் கூறாமல், அவரைத் தொடர்ந்து சோதிக்க முடியாமல் பரிசேயர்கள் கிளம்பிச் சென்றனர்.

பரிசேயர்கள் நகர்ந்துசென்றதும் சீடர்கள் இயேசுவிடம், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று கூறினார்கள். அதற்கு அவர், “ திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் நீங்கள் கூறுவதுபோல் நடக்க முடியாது. சிலர் பிறவிக் குறைபாட்டால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனிதர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” எனத் துறவறம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

பரலோக சாம்ராஜ்யம் குழந்தைகளுக்காக

இயேசுவிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக சின்னப்பிள்ளைகளைக் கிராமத்தார் அழைத்துவந்தனர். ஆனால், இயேசுவின் சீடர்களோ சிறார்களை இயேசுவின் அருகில் விடாமல் தடுத்தனர். எதற்காகப் பிள்ளைகளை இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள் என்று கடிந்துகொண்டனர். இதனால் அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் நெருக்கடியும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைக் கண்ட இயேசு தன் சீடர்களை நோக்கி, “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே பரலோக அரசாங்கம் சொந்தமாகும்” என்று கூறினார். அதன் பின், அந்தச் சிறார்களை வாஞ்சையுடன் தன் அருகில் அழைத்து அமர்த்திக்கொண்டார். ஒரு சிறுகுழந்தையைத் தூக்கி அணைத்துக்கொண்டார், தன் கரங்களால் அங்கிருந்த சிறார்கள் அனைவரையும் ஆசீர்வதித்த பின்னரே, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது அவ்வூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இயேசுவிடம் ஓடிவந்து, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர், “முடிவில்லாத வாழ்வைப் பெற விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி” என்று அவனிடம் கூறினார். “எந்தக் கட்டளைகளை?” என்று அவன் ஆவலுடன் கேட்டான். இயேசு அவனிடம், “கொலை செய்யக் கூடாது, மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாது, திருடக் கூடாது, பொய்சாட்சி சொல்லக் கூடாது, உன் தாய், தந்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், உன்னை நீ நேசிப்பதுபோல மற்றவர்களை நேசி ஆகிய கட்டளைகளை” என்று கூறினார். அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் நான் ஏற்கெனவே கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று இயேசுவை நோக்கி தன் கரங்களைக் குவித்துக் கேட்டான். அதற்கு இயேசு, “ நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா, அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்று கூறினார். இதைக் கேட்டு அந்த இளைஞன் துக்கத்தோடு திரும்பிப் போனான். ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன. இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார்.

யாருக்கு மீட்சி

அவருடைய சீடர்கள் இதைக் கேட்டு மிகவும் ஆச்சரியத்தோடு, “அப்படியானால், யார்தான் மீட்பைப் பெற முடியும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனிதர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே முடியும்” என்று சொன்னார்.

அப்போது அவரின் சீடரான பேதுரு, “இதோ நாங்கள் அனைவரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?”என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, “ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் பெயருக்காக வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அப்பாவையோ அம்மாவையோ பிள்ளைகளையோ நிலங்களையோ தியாகம் செய்கிற எல்லாருக்கும் அதைவிட நூறு மடங்கு அதிகமாகக் கிடைக்கும், முடிவில்லாத வாழ்வும் கிடைக்கும். ஆனால், முந்தியவர்களில் பலர் பிந்தியவர்களாகவும், பிந்தியவர்களில் பலர் முந்தியவர்களாகவும் ஆவார்கள்.” என்றார்.

(சாம்ராஜ்யம் விரியும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்