ஆடி வெள்ளியை முன்னிட்டு தேனி மாவட்ட அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று (ஜூலை 21) தேனி மாவட்டத்தின் பல கோயில்களிலும் பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி என்பதால் தேனி மாவட்டத்தின் பல கோயில்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இவர்களுக்காக சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆடி வெள்ளியில் பலரும் நேர்த்திக்கடனாக பக்தர்களுக்கு கூழ் ஊற்றுவது வழக்கம். இதற்காக கோயில் முன்பு ஏராளமானோர் பெரிய பாத்திரங்களில் கூழ் கொண்டு வந்து பக்தர்களுக்கு வழங்கினர். இதேபோல் பானகரம், நீர் மோர், புளி, எலுமிச்சை சாதம், சுண்டல், இனிப்புப் பொங்கல் உள்ளிட்டவற்றையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை வரை பலரும் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தியதால் கோயில் முன்பு கூட்டம் அதிகம் இருந்தது.

தாடிச்சேரியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக ஆடி வெள்ளியன்று கூழ் ஊற்றி வருகிறேன். இதனால் மனநிம்மதி கிடைப்பதுடன், குடும்பத்திற்கான நல்ல காரியங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றார்.

மேலும் தேனி, கோட்டூர், அரண்மனைப்புதூர், வயல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் பக்தர்களுக்கு பல்வேறு உணவு தானங்களை அளித்தனர். இதேபோல் தேனி சந்தை மாரியம்மன், பெரியகுளம் கவுமாரியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன், தேனி பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE