மறக்கலாமா மண்டைக்காட்டை? - இழுத்தடிக்கப்படும் திருப்பணிகள்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீவிபத்துக்கு பின்னர் நடந்து வந்த திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரையும், அதனுடன் இணைந்த பகுதிகளும் சேதமடைந்தன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழமை மாறாமல் கோயில் சன்னதி மற்றும் மேற்கூரையை சீரமைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அது ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டது. ‘தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கப்படும்’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். பணிகளும் தொடங்கின. நாட்கள் செல்லச் செல்ல பணிகள் ஊர்ந்தன. கடந்த இரு மாதங்களாக பணிகளே நடக்கவில்லை.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலின் முக்கியத்துவம் கருதி தாமதமின்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோயில் பக்தர்கள், `இந்து தமிழ் திசை`யின் உங்கள் குரல் சேவையில் பதிவிட்டிருந்தனர்.

அவர்கள் கூறியதாவது: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சன்னிதானத்தில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, இரு முறை பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது கோயில் மூலஸ்தான அமைப்பை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அரசு தரப்பில் 3 மாதங்களில் திருப்பணிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இரண்டரை ஆண்டுகளாகியும் மேற்கூரை பணிகள் கூட நிறைவடையவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பின்னர் 3 மாசி திருவிழாக்கள் முடிந்து விட்டன.திருக்கோயில் ஆகம விதிப்படி 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தேக்கு மரங்கள்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு பயன்படுத்தப்படும் தேக்கு மரங்கள் 30 ஆண்டுகள் கூட பழமையானவை இல்லை.

தேவஸ்தான மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்து வந்த தச்சுப் பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. கடந்த இரு மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதே வேகத்தில் பணிகள் நடைபெறுமானால் இன்னும் இரு ஆண்டுகளானாலும் மண்டைக்காடு கோயில் திருப்பணி முடியாது.

கருவறையின் மேற்கூரையை பாரம்பரிய முறைப்படி தேக்கு மரத்தால் அமைத்து, ஓட்டுக்கூரைகளை தாமதமின்றி அமைக்க வேண்டும். தீ விபத்தின் போது சேதமான தெய்வ உருவம் பொறித்த முகப்பு தகடுகள் மற்றும் சன்னிதான பகுதிகளை பழமை மாறாமல் தாமதமின்றி சீரமைக்க வேண்டும். இதற்கு இந்து அறநிலையத் துறை உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து இந்து அறநிலையத்துறையினரிடம் கேட்டபோது, “மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருப்பணிகளுக்கான தேக்கு மர தச்சுப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மரவேலை நிறைவடைந்ததும் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படும். பிற மராமத்து மற்றும் சுவர் பணிகள் விரைவில் தொடங்கும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE