பற்றுதல் ‘பற்றி’ ஆகாமல் ‘பத்தி’ ஆனது எப்படி என்றால், குற்றம் குத்தம் ஆவதில்லையா? கற்றாழை கத்தாழை ஆவதில்லையா? பற்றுப் பாத்திரம் பத்துப் பாத்திரம் ஆவதில்லையா? அப்படித்தான் பற்று ‘பத்தி’ ஆகிறது.
...பத்துஉடையீர்! ஈசன் பழஅடியீர்! பாங்கு உடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ?...
(திருவாசகம், திருவெம்பாவை, 3)
[பற்றுடையவர்களே! பழைய பரமசிவனின் பழம்பெரும் தொண்டர்களே! பாங்கானவர்களே! சிவக் கழகத்தில் புதிதாக உறுப்பினர் அட்டை பெற்றுச் சேர்ந்திருக்கும் புதிய தொண்டர்கள் நாங்கள்! புரியாமல் செய்பவற்றைப் பொறுத்துக்கொண்டால் ஆகாதோ?]
...பைங்கண்ஆனைக் கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்
செங்கண்ஆளி இட்டுஇறைஞ்சும் சிங்கவேள் குன்றமே!
(திவ்வியப் பிரபந்தம், பெரிய திருமொழி, ஏழாம் பத்து, 1)
[சிவந்த கண்களை உடைய சிங்கங்கள், குளிர்ந்த கண்களை உடைய யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைக் கொண்டுவந்து படையலாக இட்டுப் பத்திமையோடு இறைஞ்சுகின்ற இடம் சிங்கவேள் குன்றம் என்கிற அகோபிலம்!]
மணிவாசகரும் திருமங்கையாழ்வாரும் பத்திபற்றிப் பாடுவதைப் பற்றிக்கொள்க.
பற்றுவது பத்தி என்றால், பற்றவைக்கிறவர் பத்தர். பொற்கொல்லருக்குப் பத்தர் என்று ஒரு பெயர். பொன்னைப் பற்றவைப்பதால் பத்தர். பொன்னைப் பொன்னில் பற்றவைக்கிறவர்கள் பொற்பத்தர்கள் என்றால், உயிர்ப் பொருளை இறைப் பொருளில் பற்றவைக்கிறவர்கள் இறைப் பத்தர்கள். வேறுபாடு ஒன்றுதான்: பொற்பத்தர்கள் பொன்னைப் பற்றவைக்கும்போது ‘ஆசு’ கொடுத்துப் பற்றவைப்பார்கள் (soldering). இறைப் பத்தர்கள் உயிரைப் பற்றவைக்கும்போது ‘ஆசு’ அறுத்துப் பற்றவைப்பார்கள்.
‘ஆசு’ என்பது உலோகங்களைப் பொருத்துவதற்காக இடையில் இடும் பொடி. பற்றவைக்கிற ஆசு என்பதால் பற்றாசு (solder). ‘ஆசு’ என்றால் குற்றம் என்றும் பொருள். பொன்னைப் பொன்னில் இணைப்பதற்குப் பொன்னையே வைக்காமல், பொன்னுக்குப் புறம்பாய், வெள்ளியும் தாமிரமும் துத்தநாகமும் கலந்த பொடியை இடுவது பொன்னின் மாற்றுக்குக் குற்றம்தானே? பாரதமே சுவச்ச பாரதமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறபோது பொன் சுவச்சப் பொன்னாக இருக்க வேண்டும் என்பதில் என்ன பிழை? என்றாலும் பொடி இடாமல் பொன் உறுதியோடு இணையாது என்பதால் ஆசுக் குற்றம் பொன்னுக்குப் பாசச் சுற்றம் ஆகிவிடுகிறது.
உயிருக்கு அழுக்கு ஆணவம்
பொன்னுக்கு ஆசும் பாசமும் இருப்பது சரி. ஆனால், உயிருக்கு ஆசும் பாசமும் இருப்பது சரியா? அறிவுப் பொருளான உயிரைப் பேரறிவுப் பொருளான இறையோடு இணைப்பதற்கு, அறிவுக்குப் புறம்பாய் உள்ள அழுக்கை இடையிடலாமா?
பொன்னுக்கு அழுக்கு வெள்ளி-தாமிர-துத்தநாகக் கலவை என்றால் உயிருக்கு அழுக்கு ஆணவம். ஆணவத்தை முன்னிட்டுக்கொண்டு தலைவனோடு ஒட்டிக்கொள்ள நினைத்தால் ஒட்டிக்கொள்ள முடியுமா? தலைமையோடு தங்களை ஒட்ட வைத்துக்கொண்டு, அதன் விளைவாகச் செல்வாக்கையும் தலைவன் தருகிற பதவியையும் பெற நினைக்கிறவர்கள் அனைவரும் முதலில் துறக்க வேண்டியது ஆணவத்தையே அல்லவா? தலைவனின் முன்னிலையில் ஆணவத்தைத் துறந்து, வளைந்து வளைந்து வட்டமாகவே ஆகிவிட்டவர்களுக்குத்தானே பதவி? ஆகையினால் சிவ பதவி அடைய வேண்டி இறைப் பொருளைப் பற்றிக்கொள்ள நினைக்கிற உயிர்ப் பொருள் தன்னுடைய ஆணவத்தை, அதாவது அழுக்கை, அதாவது ஆசையை அறுக்க வேண்டும்.
ஆசை அறுமின்கள்;
ஆசை அறுமின்கள்!
ஈசனோடு ஆயினும்
ஆசை அறுமின்கள்!
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்!
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!
(திருமந்திரம், 2615)
அழுக்கை அறுங்கள்; அழுக்கை அறுங்கள். பதவிக்காக அல்ல, ஈசனோடு சும்மா ஒட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும்கூட ஆசையை விட்டுவிடுங்கள். ஆசைப்பட்டீர்கள் என்றால், ஆசைப்பட்டதை அடையவும் அடைந்த இடத்தைப் பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்ளவும் படாத பாடுபட வேண்டியிருக்கும். அது மாபெரும் துன்பம். ஆசையை விட்டீர்கள் என்றால், ஏதோ ஒன்றை அடைய வேண்டுமே என்கிற துடிப்பும் அடைந்ததைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே என்கிற பொறுப்பும் இல்லாமல் விட்டு விடுதலையாகிவிட்ட பெரும் பேரின்பம்.
அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்வது உங்களை நீங்களே காணாமல் தொலைத்துவிடுகிற உலகியல் என்றால், ஆசையிலிருந்து நீங்கி, ஈசனுக்கும்கூட ஆசைப்படாமல் ஒதுங்கி, தானாய், தனியாய் நிற்பது உங்களை நீங்களே கண்டுபிடித்துக்கொள்கிற உயிரியல்.
ஒரு பற்றாசு தேவையில்லை
உயிர்ப் பொருள் இறைப் பொருளோடு ஒட்டிக்கொள்வது இயல்பானது. நீர் நீரோடு சேர்வதற்கு நீர்மை போதும். அறிவு அறிவோடு சேர்வதற்கு அறிவுடைமை போதும். உயிர் உயிரோடு சேர்வதற்கு உயிர்மை போதும். நீரையும் நீரையும் பற்றவைக்க, அறிவையும் அறிவையும் பற்றவைக்க, உயிரையும் உயிரையும் பற்றவைக்க, இடைப்பட்டு ஒரு பற்றாசு தேவையில்லை.
உயிருக்குத் தன்னைத் தெரியாததால், தன் வடிவம் தெரியாததால் வரும் குழப்பம் இது. உலகியல் சார்ந்தவற்றோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அத்தனைக்கும் ஆசைப்பட்டுத் தடுமாறுகிற உயிர், தன்னை அறிவு வடிவம் என்று கண்டுகொள்ளும்போது தடுமாற்றம் நீங்கி நிலைகுத்திக் கொள்கிறது.
அறிவு வடிவுஎன்று
அறியாத என்னை,
அறிவு வடிவுஎன்று
அருள்செய்தான் நந்தி;
அறிவு வடிவுஎன்று
அருளால் அறிந்தே,
அறிவு வடிவுஎன்று
அறிந்துஇருந் தேனே.
(திருமந்திரம் 2357)
என் வடிவம் என் உடம்பு என்று எண்ணியிருந்தேன். ‘அட அறிவே! உடம்பா உன் வடிவம்? அறிவுதான் உன் வடிவம்!’ என்று எனக்கு அறிவித்து என்னை அறியச் செய்தான் ஆசிரியன். நான் அறிவு, அறிவைத் தவிர வேறொன்றும் இல்லை என்று அறிந்துகொண்டு அறிவாக இருந்தேன்.
இறைவன் அறிவை அறிவிக்கும் ஆசிரியன். ஆசு இரியன். குற்றத்தைக் கெடுத்து நம்மைத் தன்னோடு பற்றவைத்துக்கொள்பவன். அவனை நந்தி என்று அழைப்பது திருமூலர் வழக்கம். நந்துதல் என்றால் பெருகுதல். நந்தி என்றால் பெருகிய நிலை. அறிவு பெருகிப் பேரறிவான நிலை. உயிர் பெருகிப் பேருயிரான நிலை.
நல்லது. பத்தியைப் பார்த்தாகிவிட்டது. இனி, முத்தி என்றால் என்ன? முற்றுவது முத்தி. முற்றுதல் என்பது முழுமை பெறுதல். மூங்கில் முற்றுவதைப் போல, தேங்காய் முற்றுவதைப் போல, கடைக்கு வருவதற்காகக் கத்தரிக்காய் முற்றுவதைப் போல, உகரம் முற்றி முற்றியலுகரமாக ஆவதைப் போல, தன்னை அறிவதும் தன்னளவில் தான் முற்றி முழுமை பெறுவதும்தான் முத்தி.
மாடத்து உளான்அலன்;
மண்டபத்தான் அலன்;
கூடத்து உளான்அலன்;
கோயில்உள் ளான்அலன்;
வேடத்து உளான்அலன்;
வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து உளேநின்று
முத்திதந் தானே.
(திருமந்திரம் 2614)
முத்தி தருகிறவன் முத்திநாதன் என்று அவனை எங்கும் தேடித் திரிகிறவர்களே! முத்திநாதன் நீங்கள் தேடுகின்ற மாடத்தில் இல்லை; நீங்கள் விழுந்து தொழுகிற பீடத்தில் இல்லை; ஊர்வலம் வந்த சாமியை இறக்கிவைத்து இளைப்பாற்றி மண்டகப்படி செய்கிற மண்டபத்தில் இல்லை; கூடத்தில் இல்லை; கோயிலில் இல்லை; அவனைக் காண்பதற்காகவும் பெறுவதற்காகவும் நீங்கள் போடுகிற வேடத்தில் இல்லை. வேறு எங்கே இருக்கிறான்? முற்றிலுமாக ஆசை விட்டவர்களின் நெஞ்சில் இருக்கிறான். அப்படியென்றால் அத்தனைக்கும் ஆசைப்படுகிறவர்களின் நெஞ்சில் இல்லையா? அங்கும் இருக்கிறான். ஆனால், அங்கே அவனை ஆசை என்னும் மூடத்தனம் ஒரு போர்வையைப் போல் போர்த்தி மூடிவைத்திருக்கிறது. ஆசைப் போர்வையை உருவிவிட்டால் வெளிப்படத் துலங்கி, உங்களை முற்றச் செய்து முத்தன் ஆக்குவான்.
முத்தியை ஞானத்தை
முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குஉளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே?
(திருமந்திரம் 2115)
ஈசனை வழங்குகிற முத்தியை, முத்தியை வழங்குகிற அறிவை, அறிவை வழங்குகிற முத்தமிழ் ஓசையை எப்போதும் போற்றுக. பாலில் நெய் கலந்திருப்பதைப் போல அறிவினில் அறிவாக ஈசன் கலந்து நிற்கிறான். அறிவை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா?
(அறிவைப் போற்றுவோம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago