ஞா
னிகள் எவரும் விண்ணிலிருந்து பூமிக்குப் பறந்து வரவில்லை. அவர்கள் பிறக்கும்போது, தலையைச் சுற்றி எந்த ஒளிவட்டமும் இருக்கவில்லை. அவர்கள் நம்மைப் போன்று எல்லா உணர்ச்சிகளையும் குறைகளையும் நிறைகளையும் கொண்ட சாமானியர்கள்தாம். வாழ்வைப் புரட்டிப் போடும் ஒரு தருணம் எல்லோர் வாழ்விலும் வரும். பலர் அந்தத் தருணங்களின் முக்கியத்துவத்தை உணராமல் சட்டென்று கடந்து செல்வார்கள். வெகு சிலர் மட்டும் அந்தத் தருணங்களில் ஒளிந்திருக்கும் ரகசியத்தைத் தேடிச் சென்று ஞானத்தை அடைவார்கள். அத்தகைய ஞானிகளில் ஒருவர்தான் மாலிக் பில் தினார்.
இவர் எட்டாம் நூற்றாண்டில் பாஸ்ராவில் வாழ்ந்த மிகப் பெரும் சூபி ஞானிகளில் ஒருவர். இவர் பாஸ்ராவின் சூபி ஞானியான ஹஸனின் நண்பர். தன் தந்தை காபூலிலிருந்து பாஸ்ராவுக்கு வந்த ஒரு பாரசீக அடிமையாக இருந்தபோதினிலும் தன்னை உலக வாழ்வின் தளைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு பரிபூரண சுதந்திரத்தைச் சுவாசித்தார். இந்தியாவுக்கு வந்த சூபிகளில் முக்கியமான ஒருவரான இவர் 748-ம் வருடம் கேரளா மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தலங்கராவில் மறைந்தார்.
குரானின் கைப்பிரதியாளர்
“கடவுளை வணங்குவதைத் தொழிலாகக்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்தவித முதலீடுமின்றி அனைத்து வித லாபங்களும் கிடைக்கும்” என்று சொன்ன மாலிக் தன் ஆரம்ப கால வாழ்வில் உலக ஆசைகளுக்கு அடிபணிந்து சொத்துகளைக் குவிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது அவர் டமாஸ்கஸ் நகரில் வசித்தார். குரானைக் கைப்பிரதி எடுத்துக் கொடுப்பது அவரது முக்கியத் தொழில். அப்போது அங்கு மௌவியா ஒரு மிகப் பெரிய மசூதியைக் கட்டியிருந்தார். அங்கு வேலைக்குச் சேர்ந்தால் தனக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று மாலிக் எண்ணினார்.
அதற்காக ஏறக்குறைய ஒரு வருடம் அந்தப் பள்ளியில் அனைவரும் பார்க்கும்படியான இடத்திலிருந்து பகல் முழுவதும் தொழுதுகொண்டே இருப்பார். இரவில் ஆள் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்தபின் தனக்குப் பிடித்த இசைக் கருவியை நண்பர்களுடன் சேர்ந்து வாசித்து சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பார். நாட்கள் ஓடின. ஒரு நாள் வழக்கம்போல் இரவு நண்பர்களைச் சந்திக்க ஓடினார். ‘ஓ! மாலிக், நீ தினமும் என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?’ என்று ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரல் அவர் ஆன்மாவுடன் பேசியது. அந்தக் கேள்வி அவர் மனசாட்சியை உலுக்கியது. நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசித்தபடி அங்கேயே நின்றார். அந்தக் கேள்விக்குப் பதில் அவரிடம் இல்லை. அதற்குள் அவரைத் தேடியபடி நண்பர்கள் அங்கே வந்தனர். தன்னிலை மறந்து நிற்பவரைப் பிடித்து உலுக்கி, ‘ஓ! மாலிக், என்ன செய்து கொண்டு இருக்கிறாய்’ என்று கேட்டனர். ‘அதைத் தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்? எனக்குப் பதில் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?’ என்று அவர்களிடம் கேட்டார்.
வெறுமையால் நிரப்பி என்ன பயன்?
‘என்ன தெரியவில்லை உனக்கு?. நீ அழகானவன். கடினமாக உழைத்துப் பணம் சம்பாதிக்கிறாய். இப்போது நீ ஒரு செல்வந்தன். உன் பகல்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறாய். இரவுகளை நண்பர்களுடன் கொண்டாடுகிறாய். உனக்கு என்ன தெரியவில்லை’ என்று திரும்ப அவரிடம் கேட்டனர்? ‘முழு ஈடுபாடு இல்லாத செயல் ஆன்மா இல்லாத உடல் போன்றது. காலத்தை வெறுமையால் நிரப்பி என்ன பயன்’ என்று கேட்டவாறு மசூதியை நோக்கி ஓடினார்.
வாழ்வில் முதன்முறையாக இறைவனை முழு ஈடுபாட்டுடன் தொழுதார், சூரியனின் வருகையை அவர் உணரவில்லை. மசூதிக்கு ஆட்கள் வந்ததும் அவருக்குத் தெரியாது. அன்று மசூதிக்கு வந்த மவுலவி பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை அவருக்கு அளித்தார். ஆனால், மாலிக் கூனிக் குறுகி அதைக் கண்ணீர் மல்க மறுதலித்து மெய்ஞானத் தேடலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தன் மனதுடன் ஒருவன் நடத்த வேண்டிய யுத்தம் பற்றி இவர் அதிகம் சொல்லி இருக்கிறார். தன் பகைவனுடன் சண்டையிடுவது போன்று ஒருவன் தனது ஆசைகளுடன் சண்டையிட வேண்டும் என்பார். உண்மை, பொய் என்பதைப் பற்றி யோசிப்பது ஒரு வீணான செயல். ஏனென்றால், அவை அதனில் ஏதோ ஒன்று அழியும்வரை நம் மனதுக்குள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுகொண்டே இருக்கும். நாம் நடப்பதை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தாலே போதும் என்பார்.
அவர் சொல்லிய கூற்றுகளுக்கு வாழும் உதாரணமாகத் தன் வாழ்வையே அமைத்துக்கொண்டார். தனக்குள் எப்போதும் ஒரு ஈவு இரக்கமற்ற யுத்தத்தை விடாமல் நடத்திக்கொண்டேயிருந்தார். பசியுடன் சண்டை இட்டுப் பசியை வென்றார். ருசியை மறுத்து ருசியை வென்றார். பணத்தின் மீதான ஆசையைத் துறந்தார். தன் குறைகளுடன் விடாமல் போர் புரிந்து தன் குறைகளை எல்லாம் களைந்தார். தன்னை வருத்திக்கொண்ட போதும் தன்னிடம் வந்தவர்களுக்கு எப்போதும் அன்பையே வழங்கினார்.
இயல்பிலேயே இவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர். இவர் ஆற்றும் உரைகள் கேட்பவர்களின் வாழ்வையே மாற்றி அமைக்கும் வண்ணம் இருக்கும். அதிகபட்ச ஒழுக்கத்தைத் தன் எண்ணத்திலும் செயலிலும் பேச்சிலும் கடைப்பிடித்தார். தன்னை நாடி வருவோருக்கு அவர்களை அவர்களுக்குக் காட்டும் கண்ணாடியாக இவர் இருப்பார். “உங்கள் உடைமைகள் அழிந்து உடல் பலவீனப்பட்டு இதயம் கனத்து நீங்கள் நிம்மதி இழந்து தவிப்பதற்குக் காரணம் உங்கள்மீது அக்கறையற்ற ஏதோ ஒன்றுடன் நீங்கள் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் தொடர்புதான். அந்த ஏதோ ஒன்று உறவாகவோ நண்பராகவோ எதிரியாகவோ ஆசையாகவோ வேலையாகவோ இருக்கலாம். எனவே, இதயம் சுணங்கினால் பார்வையை உள்நோக்கித் திருப்புங்கள்” என்று வருவோரிடம் எப்போதும் சொல்வார்.
இவர் தன் கடைசி காலத்தைக் கேரளத்தில்தான் கழித்தார். அப்போது ஆட்சியில் இருந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் இவரது நேர்மையான பேச்சாலும் செயலாலும் மிகவும் கவரப்பட்டார். மாலிக்கின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாகக் கேரள கட்டிடக் கலை வடிவமைப்பில் மாலிக் தினார் ஜும்மா மசூதியைக் கட்டி தனது மரியாதையை அவர் செலுத்தினார். இன்றளவும் பிரசித்தி பெற்ற இந்த வரலற்றுச் சிறப்பு வாய்ந்த மசூதி மாலிக்கின் நினைவுகளையும் உயரிய எண்ணங்களையும் சுமந்துகொண்டு உயர்ந்தோங்கி நிற்கிறது. வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்தி மேன்மையடைந்தவர் அங்கு நிம்மதியாகத் துயில் கொண்டிருக்கிறார்.
(ஞானிகள் வருகை தொடரும்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago