வாழ்வில், தவிப்புடனும் புலம்பலுடனும் ஏக்கத்துடனும் துக்கத்துடனும் இல்லாதவர்கள் குறைவுதான். கவலை வேண்டாம். கந்தனை உருகி உருகி வேண்டினால், கவலையெல்லாம் பனி போல் விலகிவிடும். கந்தக் கடவுளைப் போற்றிப் பாடப்படும் பல பாடல்களைக் கேட்டிருப்போம். உருகியிருப்போம்.
கந்தனைப் புகழ்ந்து தாலாட்டுப் பாடல் கேட்டிருக்கிறீர்களா?
‘சமரபுரித் தேவோ தணிகைமலைத் தேனோ
அமரும் பழனிமலைக்கான மணிவிளக்கோ’
என்று துவங்கும் அழகிய பாடல், அழகன் முருகனைப் பற்றியதுதான்! எளிமையும் இனிமையும் வாத்சல்யமும் பக்தியும் நிரம்பித் ததும்புகிற இந்தப் பாடலை யார் இயற்றியது என அறிவீர்களா?
இந்தப்பல்லவியில் இடம்பெறும் மூன்று திருத் தலங்களில் தணிகைமலையும் பழநி மலையும் நாம் அறிவோம். முதலாவதாக இடம்பெறும் சமரபுரி என்ற திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா?
சமர் என்றால் போர். வேலாயுத சுவாமி, சூரபத்மாதி அசுரர்களுடன் சமர் செய்த தலங்கள் மூன்று என்கிறது புராணம். நிலத்தில் திருப்பரங்குன்றத்திலும், நீரில் (கடலில்) திருச்செந்தூரிலும், வானில் திருப்போரூரிலும் அற்புதப் போர் நிகழ்த்தினான் ஆறுமுகப் பெருமான் எனப் போற்றுகிறார்கள் முருக பக்தர்கள்!
ஆகாயத்தில் சமர் நிகழ்ந்த ஸ்தலமே சமராபுரி என்றும் திருப்போரூர் என்றும் வழங்கப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது இந்தத் திருக்கோயில்.
இந்தத் தலத்தில்தான் அகத்திய முனிவர், முருகக் கடவுளிடம் ஞானோபதேசம் பெற்றதாகச் சொல்கிறது திருப்போரூர் ஸ்தல புராணம்.
சிதம்பர சுவாமிகள் எனும் மதுரையைச் சேர்ந்த சித்தர் 17-ம் நூற்றாண்டில், இந்தக் கோயிலை கற்கோயிலாக, கற்றளி ஆலயமாக எழுப்பினார். முருகப்பெருமான் வயோதிக வடிவில் வந்து அவருக்குக் கோயிலின் அமைப்பைக் காட்டி அருளினாராம்!
மேலும் சிதம்பர சுவாமிகள் குமரக்கடவுளின் திவ்ய அக்ஷரங்கள் பொறிக்கப் பெற்ற அனுக்கிரகச் சக்கரத்தை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்தார். இவர்தான் கந்தக் கடவுள் குறித்து தாலாட்டுப் பாடலை இயற்றி அருளினார். முருகபக்தர்களால் போற்றிக் கொண்டாடப்படும் நூலாகிய ‘திருப்போரூர் சந்நிதி முறை’ சிதம்பரம் சுவாமிகள் இயற்றப்பட்டதே!
கோயில் கருவறையில் ஏழடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் கந்தசாமிப் பெருமான் சுயம்பு மூர்த்தி. ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனையுடன் வேலேந்தியபடி அழகும் கருணையும் கொண்டு காட்சி தருகிறார்.
உற்ஸவ மூர்த்திகளும் கொள்ளை அழகு. மேலும் தந்தை சிவனார் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சுவாமிநாத விக்கிரகம் கொள்ளை அழகுடன் திகழ்கிறது. மயில்வாகனத்தின் மீது ஒரு கால் ஊன்றி, வில்லேந்தியபடி போருக்குக் கிளம்பும் முத்துக்குமாரசுவாமியும் நம்மை என்னவோ செய்கிறார்!
வாழ்க்கைப் போராட்டத்தில் வருந்திக் களைத்து, விரக்தியில் திளைப்பவர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் திருப்போரூர் வந்து வள்ளி தெய்வானை சமேத கந்தபிரானை தரிசியுங்கள். தர்மம் வெல்லவும் துன்பம் விலகவும் அருள்வார் அழகன் முருகன்!
ஆறுமுகன், நடராஜர் சந்நிதிகளுடன் சிதம்பர சுவாமிகளும் தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago