அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் 15,000+ பக்தர்கள் சுவாமி தரிசனம்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு 15,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி அமாவாசை அன்று சிவனடியார்கள், சித்தர்கள், சாதுக்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்வர்.

இந்த ஆண்டு ஆடி மாதம் 1-ம் தேதி மற்றும் 31-ம் என இரு அமாவாசை வருகிறது. பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது.

ஜூலை 15-ம் தேதி சனி பிரதோஷம் அன்று 5,321 பேரும், விடுமுறை நாளான நேற்று 8,000-க்கும் மேற்பட்டோரும் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அமாவாசையை முன்னிட்டு 15,000-க்கும் மேற்பட்டோர் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மலைக் கோயிலில் உள்ள சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம் மற்றும் 18 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சதுரகிரியில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE