எளிமையின் வழி நடப்போம்!

By கனி

நா

ம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம் நம்ப முடியாத அளவுக்குச் சிக்கலானதாக மாறியிருக்கிறது. இந்தச் சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். அடிமனத்திலிருந்து வெறுக்கும் விஷயங்களை ஓய்வின்றி செய்துகொண்டிருக்கிறோம். மிகையான விஷயங்களில் கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கிறோம். சிக்கலான எண்ணங்களால் மனங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படியொரு வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். மனங்களையும் ஆன்மாக்களையும் சுரண்டும் இந்த வாழ்க்கையைத்தான் நாம் நவீன வாழ்க்கைமுறை என்கிறோம்.

இத்தகைய சிக்கலான ஓர் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அதன் தாக்கம் நம்மிடம் இருக்கவே செய்யும். ஆனால், எண்ணங்கள், செயல்கள், மனப்பான்மை போன்ற அம்சங்களால் நம்மால் நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள முடியும். நம்மைச் சுற்றி நடக்கும் குழப்பங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். அத்துடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஊக்கவிக்க முடியும். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதற்குச் சில வழிகள் உள்ளன.

இயற்கையுடன் இணைவோம்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி செய்யுங்கள். கான்கிரீட் காட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கான வாய்ப்பை அடிக்கடி உருவாக்கிக்கொள்ளுங்கள். பறவைகளின் ஒலிகளைக் கேட்பது, பலவகையான மரங்கள், உயிரினங்கள், கடல் போன்ற இயற்கை அதிசயங்களின் அழகை ரசிப்பது ஆன்மாவை ஆற்றுப்படுத்தும். கடலோரத்தில் அமர்ந்து தூய்மையான காற்றைச் சுவாசியுங்கள். இந்த இயற்கையான சூழலில் மன அமைதியை வசப்படுத்துவது எளிமையாக இருக்கும்.

உடல்நலனில் அக்கறை

உடல்நலனில் அக்கறையில்லாமல் வாழ்வது நம்முடைய வாழ்நாட்களை மோசமானதாக மாற்றிவிடும். அதனால், உலகில் வாழும்வரை, ஆரோக்கியமாக வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். உடலை ஆரோக்கியமாகப் பேணுவதற்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். உடல் ஓய்வை எதிர்பார்க்கும்போது ஓய்வெடுக்கத் தயங்காதீர்கள்.

பிடித்ததைச் செய்யுங்கள்

நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யும்போது வாழ்க்கை எளிமையாகிவிடுகிறது. பிடிக்காத செயல்களை ஏதோ ஒரு வற்புறுத்தல் காரணமாகச் செய்யும்போது வாழ்க்கை சலிப்பாகிவிடும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் பிடிக்காதவற்றைச் செய்வதற்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பிடிக்காத வேலை, படிப்பு, உறவு போன்றவற்றை ஏதோவோர் அழுத்தத்துக்குப் பயந்து தொடராமல், பிடித்த விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து அதில் நம் ஆற்றலைப் பயன்படுத்துவோம். இதைச் செய்யும்போது வாழ்க்கை நமக்குப் பிடித்தவகையில் முழுமையாகமாறிவிடும்.

யாரையும் தீர்மானிக்காத மனப்பான்மை

வாழ்க்கையில் நமது ஆற்றலின் பெரும்பகுதியை மற்றவர்களைத் தீர்மானிப்பதற்காகச் செலவிடுகிறோம். இந்தத் தீர்மானிக்கும் மனப்பான்மை நமக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்குகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவரைப் பிரித்துவைக்கிறது. ஒருவருக்கொருவர் மோதலையும் உணர்வுரீதியிலான வலியையும் உருவாக்குகிறது. மற்றவர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்கும்போது, அவர்களை நம்மால் கூடுதல் அக்கறையுடனும் புரிதலுடனும் அணுக முடியும். இந்தத் தீர்மானிக்காத மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், உறவுகளைச் சிக்கலாக்கிக்கொள்ளாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.

குறைபடத் தேவையில்லை

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளைக் கடந்துதான் முன்னேற வேண்டும். ஆனால், அந்தத் தடைகளைப் பற்றித் தொடர்ந்து குறைபட்டுக் கொண்டேயிருப்பது எந்த வகையிலும் நமக்கு உதவாது. அத்துடன், இப்படிக் குறைபட்டுக் கொண்டேயிருப்பது, வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்கவிடாமல் தடுத்துவிடும். அதனால், பிரச்சினைகளைப் பற்றிக் குறைபடுவதற்குப் பதிலாக, அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது சிறந்தது.

தற்கண உணர்வுநிலைப் பயிற்சி

நமது மனம் எண்ணற்ற எண்ணங்களால் சூழ்ந்திருக்கும்போது வாழ்க்கை பெரிதும் சிக்கலானதாகவும், அழுத்தம் நிறைந்ததாகவும் மாறிவிடுகிறது. அமைதியான மனநிலையை அடைவதற்குத் தற்கண உணர்வு பற்றிய விழிப்பு தேவையாக இருக்கிறது. இன்றிலிருந்து, தினசரி குறைந்தது முப்பது நிமிடங்களாவது தியானப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால், குழப்பமான தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்க முடியும்.

அகத்திலிருந்து வரும் குரலைக் கேளுங்கள்

நாம் பிறந்ததிலிருந்தே, நம்மை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நம்மிலிருந்து வித்தியாசமான ஒரு மனிதராக மாற நாம் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறோம். மெதுமெதுவாக, நம்மிடம் ஏதோ பிரச்சினை இருப்பதாக நாமே நம்பத்தொடங்கிவிடுகிறோம். அதனால், நமது அகத்திலிருந்து வரும் குரலையும் நம்ப மறுக்கிறோம். மனம் என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கத் தொடங்குகிறோம். அத்துடன், மற்றவர்கள் நம்மைப் பற்றித் தெரிவிக்கும் கருத்துகளை வைத்தும் நம்மைத் தீர்மானிக்கத் தொடங்குகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதனால், உங்கள் அகத்திலிருந்து வரும் குரலைக் கவனித்து, அது சொல்லும் பாதையில் நடக்கத் தொடங்குங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும் சிறந்ததாகவும் மாறிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்