துளி சமுத்திரம் சூபி 08: கடவுளை நாடிச் செல்லும் நேரம்

By முகமது ஹுசைன்

“பாவம் செய்த மனிதனைப் பார்த்துச் சிரிப்பவர் எவராக இருந்தாலும் அவர் அந்த மனிதருக்கு நம்பிக்கைத் துரோகம் புரிந்தவர் ஆவார்” என்று சொன்ன அபு அலி பைசல், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முக்கியமான சூபி ஞானி.

சூபி ஞானியான இவர் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரர். மெர்வ், பாவார்ட் நகரங்களுக்கு இடையே பாலைவனத்துக்கு மத்தியில் இவரது கூடாரம் இருந்தது. சணல் துணியால் ஆன ஆடையும் தலையில் இருக்கும் கம்பளிக் குல்லாவும் கழுத்தில் தொங்கும் செபமாலையும் இவரது அடையாளங்கள். கொள்ளை அடிப்பதில் தேர்ச்சிபெற்ற பல கூட்டாளிகள் இவருக்கு இருந்தனர். அவர்கள் இரவு பகல் பாராமல் அந்த வழியே செல்லும் பயணிகளிடம் கொள்ளையடித்து பைசலிடம் கொண்டுவந்து கொடுப்பார்கள். பைசல் தனக்குப் பிடித்தமானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அனைவருக்கும் பங்கிட்டு அளிப்பார்.

ஒருநாள் அவ்வழியாகக் கடந்து சென்ற ஒரு செல்வந்தரின் வண்டி பற்றிய தகவல் தெரிந்து, அதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அந்தச் செல்வந்தர் நகை மூட்டையுடன் ஓடும் வண்டியில் இருந்து குதித்தார். பின் பாலைவனத்தில் நடந்து அவர் கண்ணில் பட்ட ஒரு கூடாரத்தை அடைந்தார். அது அந்தக் கொள்ளையரின் தலைவன் பைசலின் கூடாரம். அங்கே தொழுகையில் இருந்த பைசலிடம் தன் கையில் இருந்த மூட்டையைச் சிறிது நேரம் பத்திரமாக வைத்திருக்கும்படி வேண்டிக் கேட்டார். பைசல் சிரித்தபடி அவரிடம் உள்ளே சென்று, அதை வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறினார். அவரும் அதை உள்ளே வைத்துவிட்டு நிம்மதியுடன் வண்டியை நோக்கி விரைந்தார்.

அவர் நினைத்தபடி அவரது வண்டி கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு, மீண்டும் அந்தக் கூடாரத்துக்கு விரைந்தார். கூடாரத்தில் தன் வண்டியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்த கும்பலைப் பார்த்து அதிர்ந்துபோனார். அவரைப் பார்த்த பைசல் சிரித்தபடி, ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

தான் கொடுத்த மூட்டை வேண்டும் என்று இவர் கேட்டார். ‘நீ எங்கு வைத்தாயோ அங்கே போய் எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டு பைசல் மீண்டும் பங்கிடுவதில் மும்முரமானார். அந்தச் செல்வந்தர் உள்ளே ஒடிச் சென்று பார்த்தார். அவரது மூட்டை வைத்த இடத்தில் வைத்தவண்ணம் இருந்தது.

கொள்ளையர் கடைப்பிடித்த நெறி

இதைப் பார்த்த பைசலின் கூட்டாளிகள் வெகு நாட்கள் திட்டமிட்டு மிகுந்த சிரமத்துடன் அந்த வண்டியைக் கொள்ளையடித்தோம். ஆனால், அந்த வண்டியில் விலை மதிப்புள்ள பொருள் எதுவும் இல்லை. அவன் நம்மை ஏமாற்றி விலை மதிப்புள்ள பொருட்களை இங்கு வந்து உங்களிடம் கொடுத்துள்ளான். அப்படி இருக்க நீங்கள் ஏன் அந்த மூட்டையை எடுத்துச் செல்ல அவனை அனுமதித்தீர்கள் என்று பைசலிடம் கேட்டனர்.

அதற்கு பைசல், “கடவுளிடம் நம்பிக்கை வைத்து நல்லது நடக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். அந்தச் செல்வந்தனோ என்னிடம் நம்பிக்கை வைத்து நல்லவற்றை எதிர்பார்த்தான். அவன் நம்பிக்கையை நான் காப்பாற்றினால் கடவுள் என் நம்பிக்கையைக் காப்பாற்றுவார். எனவேதான் அவன் பொருளைத் திரும்பிக் கொடுத்தேன்” என்றார்.

ஒருநாள் இவரது கும்பல் ஒரு வண்டியைக் கொள்ளையடித்த பின், அதில் இருந்த உணவுப் பொருளை வண்டியில் இருந்தோருடன் பங்கிட்டு உண்டனர். அந்த வண்டியில் இருந்த செல்வந்தன் இவர்களை வினோதமாகப் பார்த்தான். ‘திருடிவிட்டுச் செல்லாமல் எங்களிடம் ஏன் பங்கிடுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ஒருபோதும் நாங்கள் வண்டியை மொத்தமாகக் கொள்ளையடிக்க மாட்டோம். வண்டியில் இருப்போருக்கும் சிறிது வைத்துவிட்டுத்தான் எடுத்துச் செல்வோம். மேலும், வண்டியில் பெண்கள் இருந்தால் அந்த வண்டியைத் தொடவே மாட்டோம். இவை எங்கள் தலைவரின் உத்தரவு’ என்று பதிலளித்தனர்.

அதைக் கேட்டு அவர் சற்று வியப்படைந்தார். உங்களில் யார் அந்தத் தலைவர் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் எங்கள் தலைவர் இங்கு இல்லை. அவர் எங்கள் கூடாரத்தில் தொழுகையில் உள்ளார் என்றனர். பைசலைப் பார்க்க விரும்பிய அந்தச் செல்வந்தரைத் தங்களுடன் கூடாரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நெக்குருகி தீவிர பிரார்த்தனையில் இருந்த பைசலைப் பார்த்து, இவர் வாயடைத்துப் போனார். பிரார்த்தனை முடித்து கண் திறந்த பைசலைப் பார்த்து, ‘இவ்வளவு தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட உங்களைப் போன்ற ஒருவரால் எப்படி இந்த மாதிரி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட முடிகிறது?’ என்று கேட்டார். அதற்கு பைசல், ‘நல்லவற்றை மட்டுமே செய்யும் மனிதரோ தீயவற்றை மட்டுமே செய்யும் மனிதரோ இங்கு உண்டா?’ என்று திருப்பிக் கேட்டுள்ளார்.

குரான் தந்த திருப்பம்

ஓர் இரவில் தன் கூட்டாளிகளுடன் கொள்ளையடிப்பதற்காகப் பாலைவனத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு வண்டி வந்தது. அதில் ஒரு மனிதன் குரானை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது அவர் படித்த “நம்பிக்கையால் நிரம்பிய இதயங்களுக்குக் கடவுளை நாடிச் செல்லும் நேரம் வந்துவிட்டது” என்ற வாசகம் பைசலின் காதில் விழுந்தது. இதைக் கேட்டவுடன் உலகம் நின்றுவிட்டதைப் போன்று பைசல் உணர்ந்தார். கண்களில் நீர் வழியத் தேம்பி தேம்பி அழுதபடி மெக்காவை நோக்கி ஓடினார்.

பைசலின் நடமாட்டத்தைக் கண்டவுடன் அந்த ஊரில் இருந்து கிளம்ப வேண்டிய வண்டிகள் எல்லாம் தங்கள் பிரயாணத்தை ஒத்திவைத்தன. பைசலைப் பயத்துடன் பார்த்தவர்களிடம் சென்று தன்னைத் தண்டிக்கும்படி கெஞ்சினார். ஆனால், அனைவரும் பயத்தில் விலகிச் சென்றனர். ‘என்னை மன்னரிடமாவது அழைத்துச் செல்லுங்கள், அவராவது என்னைத் தண்டிக்கட்டும்’ என்று கெஞ்சினார். ஒருவர் இவர் மேல் பரிதாபப்பட்டு, தன் பயத்தை மீறி பைசலை மன்னரிடம் அழைத்துச் சென்றார். மன்னர் இவர் கதையை பொறுமையாகக் கேட்டார்.

‘திருந்திய உன்னைத் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை, நீ போகலாம்’ என்றார். வெளியே வந்த பைசலிடம் அவரது கூட்டாளிகள் மிகுந்த பதற்றத்துடன், ‘உள்ளே என்ன நடந்தது?’ என்று கேட்டனர். ‘மன்னர் என்னைக் கடுமையாக சித்திரவதை செய்தார்’ என்று பதில் சொன்னார். ‘எங்கே?’ என்று அவர்கள் கேட்டதற்கு தன் நெஞ்சைக் காட்டி தன் ஆன்மாவை என்று சொல்லிக் கதறி அழுதபடி மெக்காவை நோக்கி ஓடினார்.

பைசல் ஒரு சுயம்பு. இவர் யாரிடமும் மெய்ஞானத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. மெக்காவுக்குச் சென்ற சில நாட்களில் இவர் புகழ் பரவ ஆரம்பித்துவிட்டது. பள்ளிகளில் இவர் சொல்லும் ஹதீஸ்கள் கேட்கக் கூட்டம் அலைமோதும். இவர் யாரிடமும் பேச மாட்டார், யாரையும் பார்க்கவும் மாட்டார். தொழுகையும் நோன்பும் மட்டும்தான் இவர் வாழ்வாக இருந்தது. ஒருமுறை இவரைப் பார்ப்பதற்காகக் கூடிய கூட்டம் வீட்டின் கதவைத் தட்டியது. இவர் திறக்காததால் ஆத்திரமடைந்த கூட்டம் உணர்ச்சி வயப்பட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றது.

இவரைக் காணவில்லை. வீடு எங்கும் தேடிய கூட்டம் இறுதியில் இவரை வீட்டின் கூரை அடியில் கண்டுபிடித்தது. ‘உங்களுக்கு அர்த்தமுள்ள வேலை கொடுக்கச் சொல்லி கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன். தயவுசெய்து நீங்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ என்றார். சாமானியர்களுக்கு மட்டுமல்ல, மன்னர் இவரைப் பார்க்க வந்தபோதும்கூட இவரின் பதில் இதுவாகத்தான் இருந்தது.

இந்த உலகம் ஒரு காப்பகம். அதில் வசிக்கும் அனைவரும் மனநலக் குறைபாடு உள்ளவர்கள். எனவே, அவர்களைச் சிறைபிடித்து வைப்பது அவசியம் என்று சொல்லித் தன்னைத்தானே சிறையில் அடைத்துக் கொண்டவர் 803-ம் வருடம் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே இயற்கை எய்தினார்.

(சமுத்திரம் முழங்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்