திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.
பெருமாள் கையை அலங்கரிப்பவர்
சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.
நவகிரக தோஷம் நீங்க
சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி
சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.
மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.
கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.
பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.
பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago