ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருமலைக்கு வஸ்திர மரியாதை அனுப்பி வைப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்தில் மொகலாய மன்னர்கள் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் விக்ரகம் திருப்பதியில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது.

இதை நினைவுகூரும் வகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 1-ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கவிலாச மண்டபத்தில் நேற்று வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அனைத்தும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பின்னர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஒரு தட்டை, யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் மற்றும் கோயில் ஊழியர்கள் எடுத்துக் கொண்டும் ஊர்வலமாக வந்தனர். பின்னர், அவர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒப்படைக்க புறப்பட்டுச் சென்றனர்.

இந்த வஸ்திர மரியாதை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் திருப்பதி திருமலை ஏழுமலையானிடம் ஆடி மாதம் 1-ம் தேதி (திங்கள்கிழமை) ஒப்படைக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE