ஸ்ரீவில்லிபுத்தூரில் விமரிசையாக நடைபெற்ற ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்: ஜூலை 22-ம் தேதி தேரோட்டம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பெரியாழ்வாரின் அவதார தினமான ஆனி சுவாதியன்று செப்புத் தேரோட்டமும், ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரத் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பெரியாழ்வாரின் ஆனி சுவாதி உற்சவ செப்புத் தேரோட்டம், கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, ஸ்ரீ ஆண்டாள் -ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல் நாள் விழாவான நேற்று இரவு 16 வண்டி சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வரும் 17-ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளித்தல், 18-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம், அன்று இரவு5 கருட சேவை, 20-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

9-ம் நாள் திருவிழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8 மணிக்கு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE