பழநியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் நள்ளிரவில் கறி விருந்து பரிமாறப்பட்டது.

பழநி அருகேயுள்ள இராஜாபுரத்தில் தலைவாசல் கருப்பணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா, பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பெண் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. திருவிழாவையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, காணிக்கையாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட ஆண்களுக்கு இலைப் போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது. கறி விருந்தில் பழநியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெண்கள் யாரும் பங்கேற்கவில்லை.

மறுநாள் காலை விடிவதற்குள் திருவிழா நடந்த தடமே தெரியாமல் அந்தப் பகுதியை சுத்தம் செய்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE