திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆதாயத்துக்காக பக்தர்களை விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'இந்து தமிழ் திசை' உங்கள் குரல் மூலமாக சென்னையைச் சேர்ந்த பக்தர் விஜயகுமார் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "திருவண்ணாமலையில் ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் அண்ணாமலையை கடந்த 1-ம் தேதி கிரிவலம் சென்றேன். பின்னர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்றேன். சுவாமியை தரிசிக்க பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண சிறப்பு தரிசனம் என 2 வழித்தடத்தை கோயில் நிர்வாகம் வைத்திருந்தது.

நான், ரூ.50 கட்டணம் செலுத்தி, அதற்கான பாதையில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தேன். அப்போது, வரிசையில் காத்திருந்த தங்களுக்கு வேண்டியவர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பாதையில் இருந்து தனியே அழைத்து மாற்றுப் பாதையில் அழைத்துச் சென்றனர்.

மேலும், வரிசையில் உள்ளவர்களிடம், விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக கூறி நேரிடையாக அழைப்பு விடுக்கின்றனர். இதற்காக குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என பேரம் பேசுவதை காண முடிந்தது. இவர்கள், கோயிலில் உள்ள ஒரு சில அர்ச்சகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

பொது தரிசன பாதை மற்றும் கட்டண தரிசன பாதையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், பாதைகளில் ஆங்காங்கே உள்ள கதவுகளை திறந்து அழைத்துச் சென்று, தங்களுக்கு வேண்டியவர்களை விரைவாக சுவாமி தரிசனம் செய்ய வைத்து ஆதாயம் அடைகின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு என்ன பதில் அளிக்கப்போகிறது கோயில் நிர்வாகம் என தெரியவில்லை.

இதுபோன்ற செயல்பாட்டால், சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். சுவாமியை தரிசனம் செய்யும் வழிமுறைகளை முறைப்படுத்த வேண்டும். சுவாமிக்கு அணிவித்த மாலைகளை வெளியே எடுத்து வந்து கொடுத்து பணமாக்குகின்றனர். சாதாரண நாட்களிலேயே இந்த நிலை என்றால், பவுர்ணமி நாளில் எப்படி எல்லாம் நடைபெறும் என கணிக்க முடியவில்லை.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலம் சென்றுவிட்டு, சுவாமியை தரிசிக்க செல்லும் பக்தர்களை, மூலவர் முன்பு சென்றதும் நொடிப் பொழுதில் அனுப்பிவிடுகின்றனர். 50 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்லும் பக்தர்களுக்கும் இதே நிலைதான்.

ஆதாயத்துக்காக குறுக்கு வழியில் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்பவர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக உள்ளவர்கள் மீதும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து அண்ணாமலையார் கோயில் அலுவலர் ஒருவர் கூறும்போது, “புகார்களுக்கு இடம் கொடுக்காத வகையில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவு காரணமாக, சில விஐபிக்களை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்டுகிறது. ஆதாயத்துக்காக பக்தர்களை விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்பவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்