காசி ஸ்ரீ விஸ்வநாதர் கோயிலில் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் சிறப்பு வழிபாடு

By செய்திப்பிரிவு

வாராணசி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரப் பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ்ஜில் இருந்து காசி மாநகரை வந்தடைந்து, ஸ்ரீ விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமது விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் வந்தடைந்து, கடந்த 3-ம் தேதி திரிவேணி சங்கமம் பகுதியில் வியாஜ பூஜை செய்தார். சமஷ்டி பிக்‌ஷாவந்தனம் நிகழ்வுக்குப் பிறகு, ஆதி சங்கரர் விமான மண்டபத்தை வந்தடைந்தார்.

கடந்த 5-ம் தேதி காசி வந்தடைந்த ஸ்ரீ விஜயேந்திரருக்கு காசிராமன் விலாசத்தில் காசி மேயர் தலைமையில் பக்தர்கள் கூடி சிறப்பு வரவேற்பு அளித்தனர். கடந்த 1974-ம் ஆண்டு இதே இடத்தில் காஞ்சிகாமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரருக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோயிலிலுக்கு நேற்று முன்தினம் அதிகாலை (ஜூலை 6-ம் தேதி) வந்த ஸ்ரீ விஜயேந்திரருக்கு கோயில் பண்டிதர்கள், ஆணையர் மற்றும் அறங்காவலர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ விஜயேந்திரர் கோயில் கருவறைக்குள் சென்று காசி விஸ்வநாதருக்கு ருத்ராபிஷேகம் நிகழ்த்தினார். மேலும், காசி விஸ்வநாதருக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ரஜத வில்வம், ஸ்வர்ண புஷ்பம் கொண்டு ஷோடச உபசார பூஜைகளை நிகழ்த்தினார்.

வழிபாட்டுக்குப் பின்னர், ஸ்ரீ விஜயேந்திரர் ஹனுமான் காட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து ஜூலை 6-ம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை ஹனுமான் காட்டில் தங்கியிருந்து ஸ்ரீ விஜயேந்திரர் தமது விஜய யாத்திரையில் முக்கியத்துவம் பெற்ற சாதுர்மாஸ்ய விரத பூஜைகளை மேற்கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE