திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில்  மகா கும்பாபிஷேகம்: மண்ணியாற்றிலிருந்து புனித நீர் ஊர்வலம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வர கோயிலில் ரூ. 3 கோடியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தையொட்டி மண்ணியாற்றிலிருந்து புனித நீர் ஊர்வலம் நடைபெற்றது.

பெரிய நாயகி அம்பாள் சமேத அருணஜடேஸ்வர சுவாமி கோயில் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையதாகும். பல சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் 1968-ம், 2003-ம் ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.நிகழாண்டு ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய பாலாலயத் திருப்பணி கடந்த 6 மாதங்களில் 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசிய 50 செப்பு கலசங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரூ.3 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டு, அதில் 59-யாக குண்டங்களும், 25 வேதிகைகள் அமைக்கப்பட்டு, 80 சிவாச்சாரியார்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் யாகசாலை முதல் கால பூஜை ஞாயிறன்று தொடங்கவுள்ளதையொட்டி, காலை மண்ணியாற்றிலிருந்து புனித நீர் எடுத்துக் கொண்டு ஏராளமானோர் பங்கேற்று ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து, யாகசாலையில் தீர்த்த சங்க்ரஹணம், சம்ஹிதா ஹோமம் மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சிகளில் தருமை ஆதீனம் திருக்கயிலாயப் பரம்பரை ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள், காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, 3-ம் தேதி் முதல் கால யாக பூஜையுடன் தொடங்குகி, வரும் 7-ம் தேதி வரை 8 கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. இதில் 5-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ தேரடி விநாயகர், திருவீதி விநாயகர் முதலிய பரிவார கோயில்களில் மகா கும்பாபிஷேகமும், 6-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தருமை ஆதீனம் ஸ்ரீ ஊருடையப்பர், காசித்திருமடம் ஸ்ரீ வீரியம்மன், ஸ்ரீ விஸ்வநாதர் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

7-ம் தேதி காலை 8-ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடும், காலை 9.30 மணிக்குக் கோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும், தொடர்ந்து சண்டயாகம், யஜமானபிஷேகம், மகாஅபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வீதியுலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE