பக்ரீத் - தியாகத்துக்கான பெருநாள்

By செய்திப்பிரிவு

நாடு, இனம், பண்பாடு, கலாச்சாரம், மொழிசார்ந்த பண்டிகைகள் இருப்பது போலவே உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் அந்தந்த பண்டிகைகளைக் கொண்டாடுவர். ஆனால் ஒட்டுமொத்த உலக இஸ்லாமியர்களும் கொண்டாடும் பண்டிகைகள் மூன்று.

ஒன்று - நோன்புப் பெருநாள். சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் ஆகும் வரை உண்ணாமல் பருகாமல் விரதம் இருந்து ஒரு மாதத்தை பூர்த்தி செய்து, ஏழைகளுக்கு தர்மம் வழங்கி அல்லாஹ்வை தொழுது மகிழ்ந்திருப்பது.

இரண்டாவது - ஹஜ் பெருநாள். புனித மக்காவுக்குச் சென்றுவர சக்திபெற்று, அங்கு சென்று ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதும் மக்காவுக்குச் செல்லாத ஏனையோரில் விருப்பமுள்ளவர்கள் ஒட்டகம், மாடு, ஆடு போன்ற பிராணிகளில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ்வுக்காக பலியிட்டு இறைச்சியை மூன்று பாகங்களாக்கி, தமக்கும் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் என்று பங்கிட்டு மகிழ்ந்துண்பது.

மூன்றாவது - மீலாதுன் நபி. அல்லாஹ்வால் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மற்றும் நினைவு நாளான இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தில் அவர்களின் மீது புகழ்மாலை சூடி ஒவ்வொரு பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அல்லது ஊர் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஒன்று கூடி உணவு சமைத்து பகிர்ந்துண்டு மகிழ்வது. இது 'கந்தூரி விழா' என்றும் சொல்லப்படும்.

எதற்காக கொண்டாடுகிறோம்?: வாழ்வாதாரத்துக்கான எல்லாவற்றையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது, வயதில் மூத்த குடும்பப் பெரியவர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்வது, உறவுகள், நட்புகளைச் சந்தித்து உறவாடுவது, இயன்ற அளவுக்கு ஏழைகளுக்கு உதவுவது, சமத்துவம் - சகோதரத்துவத்தை பேணுவது போன்ற செயல்பாடுகள் மிக முக்கியமானவை ஆகும். அதுமட்டுமின்றி 'தன் அல்லாத பிற மக்களோடு ஒன்றுதல்' என்கிற பண்பாட்டையும் இப்பண்டிகைகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்லாம், கிறிஸ்தவ, யூத மதங்களின் தந்தை என்று மதிக்கப்படக்கூடிய இப்ராஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் குடும்பத்தாராகிய ஹாஜரா அம்மையார் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளே ஹஜ்ஜின் செயல்பாடுகளாக உள்ளன.

இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்படிந்து கடுமையான சிரமங்களைத் தாங்கிக் கொண்டு, பல பருவங்கள் சூழ்நிலைகளில் பயணம் மேற்கொண்டு மக்கா வந்தடைந்தனர் அந்த குடும்பத்தினர். ஹாஜரா அம்மையார் எதிர்கொண்ட நெருக்கடிகள் ஏராளம்.

தாய், மகன் ஆகிய இருவரும் மனம் தளராமல் அல்லாஹ்வின் துணையுடன் எல்லாவிதமான சிரமங்களையும் எதிர்கொண்டு, வெற்றியும் அடைந்து உலக முடிவு நாள் வரை அழியாத அடையாளத்தை உருவாக்கினர்.

இன்றளவிலும் ஹஜ் யாத்ரீகர்கள் செய்யும் பெரும்பாலான காரியங்கள் யாவும் இப்ராஹிம் நபி மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் உறுதிமிக்க செயல், தியாகத்தால் விளைந்தவையாகும். இதனாலேயே ஹஜ் பெருநாளுக்கு 'தியாகப் பெருநாள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

பெண்களின் பங்கு: உலக நாகரிக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவம் இல்லாமல் சாத்தியம் ஆகாது. ஹாஜரா அம்மையார், இஸ்மாயில் நபி ஆகியோரின் குடியேற்றத்தாலேயே 'மக்கா நகரம்' உருவானது. காபா- இறையில்லம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அதுபோலவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய அழைப்பை மக்களுக்கு விடுத்தபோது முதலாவதாக இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டவர் முஹம்மத் நபியின் மனைவி கதீஜா அம்மையார் ஆவார்கள்.

அதுபோலவே இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு எதிரிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக முதல் உயிர் தியாகம் செய்தவர் சுமய்யா அம்மையார் ஆவார். எனவே இஸ்லாமிய வரலாற்றில் ஆகட்டும், உலக வரலாற்றில் ஆகட்டும் இனங்கள், சமூகங்களின் நாகரிக வளர்ச்சியில் பெண்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது.

தியாகத் திருநாள் சொல்லும் செய்தி:

> குடும்பம், சமூகம், நாட்டின் ஒற்றுமை அவசியம்.
> சிரமங்கள் துன்பங்களின்போது இறைவனிடம் பொறுப்பை ஒப்ப டைப்பது.
> இருக்கும் இடங்களை மனிதன் வாழத் தோதுவான இடங்களாக மாற்றி அமைத்து நாகரிகங்களை உருவாக்குவது.
> உழைத்தல், கூட்டாக இருத்தல், பகிர்ந்துண்டு வாழுதல்.
> இயன்றவரை ஏழைகளுக்கு உதவு தல்.
> இறைவனின் கட்டளைகளை சரி யான முறையில் நிறைவேற்றி அவனது அடையாளச் சின்னங்களை பாதுகாத்தல்.
> சகோதரத்துவம், சமூக நல்லிணக் கத்துடன் வாழ்தல்.
- இவை தியாகத் திருநாள் நமக்குத் தரும் செய்தியாகும்.

கட்டுரையாளர்: மவ்லவி P.M. அப்துல் அஜீஸ் வாஹிதி,
இமாம் வக்ஃப் வாரியக் கல்லூரி, பள்ளிவாசல், மதுரை - 20.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE