ஜூலை 29 : பெருநாள் தொழுகை

ரமலான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்க அடுத்துவரும் ‘ஷவ்வால்’ மாதத்தின் முதல்நாள் ரமலான் பண்டிகை எனப்படும் ‘ஈதுல் பித்ர்’ என்னும் பெருநாள். இந்த நாளில் நடைபெறும் தொழுகை பற்றி நாம் இப்போது அறிந்துகொள்வோம்.

பருவமடைந்த ஆண்,பெண் அனைவரும் தொழுகை செய்வது அவசியமாகும். பொதுவாக தினமும் நடைபெறும் ஐந்து வேளைத் தொழுகைகள் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ‘ஜூமுஆ’ தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்குபெற விரும்பாவிட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனியாகத் தொழுதுகொள்ள இஸ்லாம், பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. ஆனால் பெருநாள் தொழுகையில் மட்டும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தொழும் முறை

சாதாரண தொழுகைகளில் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை (இறைவனைப் புகழும் சொற்கள்) விடப் பெருநாள் தொழுகையில் கூடுதல் தக்பீர்களை நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது பகுதியில் ஐந்து தக்பீர் களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்ல வேண்டும்.

பொதுவாக வெள்ளிக்கிழமை தொழுகையின் உரை பள்ளிவாசலின் மிம்பரில்(மேடைத்தளம்) ஆற்றப்படும். ஆனால் பெருநாள் தொழுகைக்கு தரையில் நின்றுதான் உறையாற்ற வேண்டும். நபிகள் நாயகம் அவர்கள் பெருநாளன்று தரையில் நின்றுதான் உரையாற்றியதாக அபூ சயீத் அல்குத்ரீ கூறுகிறார்.

அதேபோல் நோன்புப் பெருநாள் அன்று உணவருந்திவிட்டுத்தான் தொழுகைக்குச் செல்ல வேண்டும். நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபடி ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் அனைத்து நாள்களிலும் பாவங்களை விட்டு விலகி நின்று, எல்லாம் வல்ல அல்லாஹ்வும் அவரது தூதரும் காட்டிய வழியின்படி நம் வாழ்க்கையை நற்செயல்கள் புரிந்து வாழ இந்த நன்னாளில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE