உயிர் வளர்க்கும் திருமந்திரம் 05: பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்

By கரு.ஆறுமுகத்தமிழன்

மனிதப் பற்று வரவுகள் எல்லாம் வங்கிகளில் வைப்புத் தொகைகளாக இருக்கின்றன; பங்கு முதலீடுகளாக இருக்கின்றன; நகர்களுக்கு மிக அருகில், உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளுக்குப் பக்கத்தில், அதிசயிக்கத்தக்க விலையில் கால் துண்டம், காலரைக்கால் துண்டமென்று வாங்கிச் சேகரித்த மனைத் துண்டங்களாக இருக்கின்றன. வாழ்க்கை முழுவதும் பற்றுக்கோடுகளைத் தேடியே களைத்துப் போகிறோமே என்று வருந்த வேண்டாம். அதனால் ஒன்றும் குற்றமில்லை. களைத்துப் போனவர்களைப் புத்தாக்கம் செய்து பந்தயக் குதிரைகளாக ஆக்கி மீண்டும் களத்தில் இறக்கிவிடக் கைதேர்ந்த சாமியார்கள் இருக்கிறார்கள். கட்டணம் பெற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கற்பிப்பார்கள். முக்கால் துட்டு கூடுதலாய்க் கொடுத்தாலோ முக்தியே கொடுப்பார்கள்.

நல்லது. நாம் பற்றி வைத்துக்கொண்டிருப்பவை நமக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கக்கூடியவையா? கதை முடிய இன்னும் காலம் இருக்கிறது; வாழும் நாளுக்கு வழிகோலிக் கொள்வோம் என்று கவனமில்லாமல் இருக்கும்போது ஒரு காலையில் சடக்கென்று வந்து சொல்லிக்கொள்ளாமல் கணக்கை முடித்துவிடுகிறது சாவு.

அடப்பண்ணி வைத்தார்;

அடிசிலை உண்டார்;

மடக்கொடி யாரோடு

மந்தணம் கொண்டார்;

இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்;

கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே!(திருமந்திரம் 148)

அருமையாய்ச் சமைத்து வைத்துவிட்டுச் சாப்பிடக் கூப்பிட்டாள் மனைவி. வந்தவர் உண்டார். மனைவியைக் கமுக்கமாகக் கொஞ்சினார். ‘இடப் பக்கம் லேசாக வலிக்கிறது’ என்றார். ‘வாய்வுப் பிடிப்பாக இருக்கும்; சற்றுப் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றாள் மனைவி. படுத்தார். போய்விட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுதான் கதி.

நாட்டுக்கு நாயகன்;

நம்ஊர்த் தலைமகன்;

காட்டுச் சிவிகைஒன்று

ஏறிக் கடைமுறை

நாட்டார்கள் பின்செல்ல

முன்னே பறைகொட்ட

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.(திருமந்திரம் 153)

இந்த நாட்டுக்கே நாயகன்; நம் ஊரின் தலைமகன்; காலால் நடந்து அறியாதவன். ஏறினால் பல்லக்கு; இறங்கினால் அரசுக் கட்டில். புடை சூழ வருவதற்குப் படை உண்டு. வருகை அறிவிக்க முன்னே முரசொலிக்கும். போகும் வழியெல்லாம் பூச்சொரிந்து வரவேற்பார்கள். முன்னறிவிப்பில்லாமல் எங்கேயும் போகாத அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சாவு வந்தது. கிளம்பினான். நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை: இப்போதும் புடைசூழ ஆட்கள் வந்தார்கள்; போகும் வழியெல்லாம் பூச்சொரிந்தார்கள். மாற்றம் சிலவற்றில்தான்: பல்லக்கு, பாடை ஆகிவிட்டது; முரசு, பறை ஆகிவிட்டது. அவ்வளவே.

வியப்புக்குரியது எது?

‘உலகத்தில் மிகவும் வியப்புக்கு உரியது எது?’ என்ற கேட்கப்பட்டபோது தருமபுத்திரன் சொன்னான்: ‘ஒவ்வொரு நாளும் சாவைப் பார்க்கிறோம்; ஆனால், அந்தச் சாவு நமக்கும் நிகழும் என்ற நினைப்பே இல்லாமல் திரிகிறோமே, அது!’

அடையாளம் சேகரிப்பதற்காக நம்மைத் தொலைக்கிறோம்; நம்மைத் தொலைத்துச் சேகரித்த அடையாளத்தையும் பின்னர் இழக்கிறோம். இந்த நிலையாமைக் கருத்தியலைத் திருமூலர் சித்திரித்துக் காட்டுகிறார்:

ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,

பேரினை நீக்கிப் பிணம்

என்று பேர்இட்டு,

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. (திருமந்திரம் 145)

ஒரு பிள்ளை பிறந்தது. தங்கள் வாழ்வின் கனியாக வந்த பிள்ளைக்கு மேனி வலிக்காமல் மெத்தென்ற பஞ்சணையில் பூ இட்டுப் பூமேல் பிள்ளையை இட்டார்கள் பெற்றவர்கள். உலகுக்குப் புதிதாய் வந்திருக்கும் பிள்ளையைப் பார்க்கவும், ‘என் குலம்’ என்று அந்தப் பிள்ளையைத் தன்னுடன் ஒட்டவும் ஊரே ஒன்றுகூடியது. மந்தையில் வாழப்போகிற மாட்டுக்குத் தோலில் சூட்டுக்கோல் அடையாளமோ கொம்புகளில் வண்ணப்பூச்சு அடையாளமோ வைப்பதில்லையா? அதைப் போல மனிதப் பெருமந்தைக்குள் வாழப்போகும் அந்தப் பிள்ளைக்கு அடையாளம் கற்பித்து ஊர் ஒரு பெயர் இட்டது. ஊர் தந்த அடையாளத்தைப் பேணிக்கொண்டே அந்தப் பிள்ளை வளர்ந்தது; அடையாளத்தை நிலைநிறுத்தலே வாழ்வின் நோக்கம் என்று வாழ்ந்தது; கடைசியில் ஒரு நாள் ஊர் தந்த அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் கைவிட்டு மாண்டது. பிறந்த அன்று ஒன்றுகூடி அடையாளம் தந்த ஊர் இறந்த அன்றும் ஒன்றுகூடியது. தன் குலக் கொழுந்து ஒன்றை இழந்ததற்காக ‘ஓ’வென்று அழுதது. தான் தந்த தனி அடையாளப் பெயரைத் தானே நீக்கிப் பிணம் என்று பொதுப் பெயர் இட்டது. பிணத்தைச் சூரைப் புதர் மண்டிக் கிடக்கிற முள்ளுக் காட்டுக்குக் கொண்டு போய்ச் சுட்டது. பின்னர், நீரினில் முழுகிக் காலஞ்சென்ற குலக்கொழுந்தின் நினைவை விட்டது. அவ்வளவுதான். புடவை கிழிந்தது, போயிற்று வாழ்க்கை. ஒட்டி இருந்தவர்களுக்கு மட்டும் கூடுதலாய்க் கொஞ்ச நாள் வலிக்கும். அழுது தீர்த்துக்கொள்வார்கள்.

அழுவது பயன் தருமா?

அழுதால் சரியாகப் போயிற்றா? உலகத்து இயற்கை என்னவென்று அறியாமல் அழுவது பயன் தருமா? உலக இயற்கை சொல்கிறது குண்டலகேசிப் பாடல் ஒன்று:

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?

பச்சிளம் குழந்தையராக இருந்தோம். அந்தக் குழந்தைமை செத்துவிட்டது. குழந்தைமையைக் கொன்றுதான் பிள்ளையரானோம். அந்தப் பிள்ளைமை செத்துவிட்டது. பிள்ளைமையைக் கொன்றுதான் காளையரானோம். காளைத் தன்மை செத்துவிட்டது; காமவேகம் ஊட்டுகிற இளமையும் செத்துவிட்டது. இளமையைக் கொன்று மூத்தோம்; காமத்தைக் கொன்று கனிந்தோம். இதுதான் இயல்பு. பழையது சாகும். பழையதன் சாவில் புதியது பிறக்கும். புதியதும் சாகும்-குருத்தையும் குலையையும் ஈன்று வாழை தான் சாவதைப் போல. குருத்திலிருந்து வாழை, மீண்டும் வாழையிலிருந்து குருத்து என்று இது ஒரு சுழற்சி. சாவதற்காக அழுவதென்றால் அழுவது மட்டுமே வாழ்வாக இருக்கும்-ஏனென்றால், ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையாமையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இழப்பு நேரும்போது மட்டும் உணர்கிறோம். பின்னர், மீண்டும் பற்றுக் காட்டுக்குள் தொலைந்துபோகிறோம். என்றால் நிலையாமையை விட்டுத் தொலையாமைக்குப் போகவே முடியாதா? பற்றிலும் பதற்றத்திலும் நம் வாழ்வு தொலைந்துகொண்டே இருக்க வேண்டியதுதானா? பற்றுதான் கேடா? பற்றை விட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

பற்றுதல் நம் இயல்பு. விட்டுவிட முடியாது. என்றால் என்ன செய்வது? பற்றும் பொருளை மாற்றிக்கொண்டுவிட வேண்டியதுதான். எதைவிட்டு எதைப் பற்றுவது?

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்;

முற்றுஅது எல்லாம் முதல்வன் அருள்பெறில்;

கிற்ற விரகில் கிளர்ஒளி வானவர்

கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. (திருமந்திரம் 298)

எதையேனும் பற்ற வேண்டும் என்றால் பரமனைப் பற்றுங்கள். முதல்வன் அருள்பெற்றால் எல்லாமே முற்றும். இதைக் கற்றவர்கள் தொலையாத பேரின்பம் பெற்றார்கள்.

இந்தப் பற்று நெறிதான் சமயங்கள் சொல்லித் தருகிற பக்திநெறி. வசப்படாமல் இருந்ததெல்லாம்கூடப் பற்றப் பற்ற வசப்படும்.

(பற்றுவோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

11 days ago

மேலும்