மயிலாடி வந்தால் ஆணவம் அழியும்!திருமயிலாடி முருகன் ஸ்தல மகிமை!

By வி. ராம்ஜி

ஆணவம் எல்லாக் காலத்திலும், எல்லோருக்கும் அழிவையே தரும் என்பதை உணர்த்தும் தலமாகத் திகழ்கிறது மயிலாடி திருத்தலம்.

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கிச் செல்லும் வழியில் உள்ளது புத்தூர்.

இங்கிருந்து கிளைபிரியும் சாலையில், சுமார் இரண்டு கி.மீ. தொலைவு பயணித்தால் திருமயிலாடி தலத்தையும் அங்கே முருகப்பெருமானின் கோயிலையும் அடையலாம்.

எல்லாக் காலத்திலும், அழகு தொடர்பான போட்டியும் அதுகுறித்த கர்வமும் எல்லோருக்கும் இருக்கும். இதற்கு கடவுளர்களும் விதிவிலக்கல்ல. ‘நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட... இதென்ன விந்தை. நான்தான் அழகு’ என உமையவள் மறுத்துச் சொன்னாள். இரண்டுபேருக்கும் ஆரம்பமானது சண்டை. ஒருகட்டத்தில், கடுங்கோபத்துக்கு ஆளான சிவபெருமான், திருக்கயிலாயத்தில் இருந்து சட்டென மறைந்தார்.

அவ்வளவுதான். துடித்துப் போனாள் தேவி. கலங்கிக் கதறினாள் உமையவள். ‘இந்த உருவம்தானே அழகு என நம்மைச் சொல்லவைத்தது!’ என எண்ணியவள், உடலைத் துறந்து, உருவத்தை இழந்து, மயிலாக மாறினாள். சிவபெருமானை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தாள்.

இதில் மகிழ்ந்து நெகிழ்ந்த சிவனார், அழகிய லிங்கத் திருமேனியராகக் காட்சி தந்தார். நெக்குருகியவள், தோகையை விரித்து மனம் குளிர ஆடினாள். மனநிறைவுடன் ஆடிக் கூதூகலித்தாள். ஆனந்தமாக ஆடினாள். அம்மை மயிலாக வந்து ஆடிய தலம்.. மயிலாடி என்றே அழைக்கப்படுகிறது. திருமயிலாடி என்று போற்றப்படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் ஸ்ரீசுந்தரேஸ்வரர்.

அதேபோல் மயிலாடியில் உள்ள சிவமைந்தனின் மூத்தோனும் முதல்வனுமான விநாயகரும் சிறப்பு வாய்ந்தவர்தான். அவரின் திருநாமம் ஸ்ரீசுந்தர விநாயகர். கண்வ மகரிஷி இங்கு ஆஸ்ரமம் அமைத்து சிவபூஜையில் ஈடுபட்டார். முன்னதாக ஸ்ரீவிநாயகரையும் பிரதிஷ்டை செய்து தவமிருந்து வழிபட்டார். இவர், ஸ்ரீசுந்தர விநாயகர் எனப் போற்றப்படுகிறார்.

இங்கு வந்து, ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய இருவரையும் வணங்கி வழிபட்டால், முகத்தில் தேஜஸ் கூடும். எப்போதும் இளமையுடனும் அழகுடனும் பொலிவுடனும் திகழலாம். முக்கியமாக, அகத்தின் அழகையும் தெளிவாக்கி விடும் திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

இன்னொரு சிறப்பு... இங்கே ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரக தாம்பாள் என இரண்டு தேவியரின் சந்நிதிகள் அடுத்தடுத்து காட்சி தருகின்றன. இருவருக்கும் அபிஷேக- ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. இவர்களை வணங்கினால், செல்வம் பெருகும். நல்ல வரன் அமையும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப்பெறுவது உறுதி!

கிழக்குப் பார்த்த மூன்றடுக்குக் கோபுரம் கொண்ட ஆலயம். உள்ளே... வடக்குப் பார்த்த நிலையில், அழகுறக் காட்சி தருகிறார் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி. கருவறையில், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கிழக்கு திசை பார்த்தபடி இருக்க, ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் ஸ்ரீபெரியநாயகி என இரண்டு அம்பிகையும் தெற்குப் பார்த்தபடி அருளுகின்றனர். அழகும் கருணையும் ததும்பக் காட்சி தரும் தேவியரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் என்று கேட்டால்தான் மக்கள் வழிகாட்டுகிறார்கள். எனினும், ஆலய நாயகன், முருகப்பெருமான்தான்! இங்கே... மூலவரைப் போலவே உற்ஸவரும் கொள்ளை அழகு. இதில் இன்னொரு விசேஷம்... வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகக் கடவுள். ஆனால் இங்கு, பாதரட்சைக்குப் பதிலாக மயிலையே அணிந்திருக்கிறார் குமரக்கடவுள். அதாவது, அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கி காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார். இடதுகாலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் முகத்தைப் பார்த்தபடி காட்சி தருகிறது மயில். அந்த ஒயிலை அழகாக வடித்திருக்கும் சிற்பி யார் என்றுதான் தெரியவில்லை. இந்த அரியதொரு காட்சியை வேறெங்கும் காண்பது அரிது என்கின்றனர் பக்தர்கள்.

கோயிலுக்கு எதிரே கந்தக்கடவுள் உருவாக்கிய திருக்குளம் உள்ளது. இங்கு நீராடி, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ஒருகுறையும் இருக்காது. நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்