சனி தோஷம் நீக்கும் குச்சனூர்

By தேனி மு.சுப்பிரமணி

நவக்கிரகச் சிலைகளில் ஒன்றாக சனீஸ்வர பகவான் பல கோயில்களில் இடம் பெற்றிருக்கிறார். சில கோயில்களில் சனீஸ்வர பகவான் துணைக் கோயில் கொண்டுமிருக்கிறார். சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ள இடம் குச்சனூர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் எனுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

தலவரலாறு

செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த அரசன் தினகரன் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்தான். கோயிலில் அவனுக்கு அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது.

அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்.

இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். சதாகன் அப்படி இருக்கவில்லை. இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரசனாக்குவது என்று முடிவு செய்து அவனுக்கே முடிசூட்டினான்.

அரசனுக்கு சனி

இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தையின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து வழிபடத் தொடங்கினான்.

அவனது வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்” என்று கூறினார்.

தந்தையின் தோஷம் ஏற்ற மகன்

சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் சம்மதித்தான்.

சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான், இந்த ஏழரை நாழிகைக் கால சனி தோஷம்கூட சந்திரவதனனின் முற்பிறவியின் வினைகளுக்கேற்பதான் வந்ததாகவும் இனி யாருக்கும் எக்குறையும் இருக்காது என்றும் உறுதியளித்தார்.

உடனே சந்திரவதனன் சனீஸ்வர பகவானிடம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை அத்துன் பத்திலிருந்து மீட்க அங்கேயே எழுந்தருள வேண்டினான். சனீஸ்வரனும் அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டு, அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.

சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான். அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்றமடைந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர் என்று ‘தினகரன் மான்மியம்’ என்கிற பெயரில் வெளியான பழமையான நூல் ஒன்று இத்தலத்தின் வரலாறைத் தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்