சிலிர்ப்பு தரும் புனித அனுபவம்

By எஸ்.ரவீந்திரன்

நீங்காத பெருமையை உடையதும், நாடி வரும் பக்தர்களுக்கு மங்காத ஞானத்தை வழங்குவதுமான புண்ணிய நகரம் காசி. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசிக்கு வாராணசி, பனாரஸ் என்றும் பெயர்கள் உண்டு. என்றாலும், கடைக்கோடி கிராமத்தில் உள்ள பாமரனுக்கும் தெரிந்த பெயர் என்றால் அது காசிதான். காலத்தால் பெரிதும் மாறாத இந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று. பல ஆயிரம் ஆண்டுகளைக் கண்ட புண்ணிய பூமி. இன்றும் அப்படியே இருக்கிறது. காசி விஸ்வநாதர் தரிசனமும் கங்கை நீராடலும் தேடிவரும் பக்தர்களுக்குப் பல நூறு ஆண்டுகளாக மோட்சத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.

குறுகலான தெருக்கள், சாலையின் இரு பக்கமும் மழை நீர் வழிந்தோட சின்னச் சாக்கடை, எங்கு பார்த்தாலும் ஷேர் ஆட்டோ, ஷேர் பைக், கார் என வாகனங்களின் நெரிசல். ஆனால், ஒரு விஷயத்தில் ஆறுதல். எல்லோரும் பயமுறுத்தியதுபோல் குப்பைகள் இல்லை. கூட்டம் கூட்டமாகத் திரியும் மாடுகள் போட்ட சாணியைத் தவிர, வேறு பிரச்சினை இல்லை. கங்கையும் சுத்தமாக இருக்கிறது. பிணங்கள் மிதப்பதில்லை.

தொட்டு வணங்கலாம்

அதிகாலை 2 மணிக்கே காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம். குறுகலான கேட் நம்பர் 1 வழியாக நுழைந்து கோயிலின் அருகே காத்திருந்தோம். கேட் வாசலிலேயே ஏகே 47 துப்பாக்கியுடன் முரட்டு மீசை வைத்த போலீஸாரின் காவல். அதைத் தாண்டி கோயிலை நெருங்கியபோது, அங்கு அதிரடிப் படையினர் காவலுக்கு இருந்தனர். அந்த நேரத்திலும் பல கடைகள் திறந்திருந்தன. பூஜை சாமான்கள் விற்பனை நடந்துகொண்டிருந்தது. 3 மணிக்குக் கோயில் நடை திறந்தது. ஆதார் கார்டு காட்டினால்தான் தரிசன டிக்கெட். மெட்டல் டிடெக்டரைத் தாண்டி கோயிலுக்குள் நுழைந்தோம்.

ஹரிச்சந்திர மகாராஜா காலத்துக்கு முன்பிருந்தே பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல கோடிப் பேர் தரிசித்த காசி விஸ்வநாதர் லிங்க வடிவில் அருள்பாலித்துக்கொண்டிருந்தார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துக்கொண்டிருக்க விஸ்வநாதருக்கு மங்களாரத்தி தொடங்கியது. மிகவும் சிறிய லிங்கம்தான். ஆனால், சக்தி வாய்ந்தது. பால், தயிர், நெய், தேன், மலர்கள் என ஒரு மணி நேர ஆராதனை நடந்தது. பிறகு வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சிவ லிங்கத்தைத் தொட்டு வழிபட அனுமதிக்கிறார்கள். இதை ஸ்பரிச தரிசனம் என்கிறார்கள். சாமி சிலைகளைத் தொட்டு வணங்கக் கூடாது எனச் சொல்லக் கேட்டு வளர்ந்த நமக்கு, இது வித்தியாசமான அனுபவம். அரை மணி நேரம் மட்டும்தான் இதற்கு அனுமதி.

அதன் பிறகு, லிங்கத்தைச் சுற்றி கிரில் போட்டுவிடுகிறார்கள். பால், தேன் போன்ற அபிஷேகப் பொருட்களை நாமே லிங்கத்தின் மீது ஊற்றலாம். இதற்கு 5 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு லிங்கத்தைத் தொட்டு வணங்க அனுமதியில்லை.

காசி விஸ்வநாதர் கோயில் சிறியதுதான். அதிகம் போனால் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மேல் உள்ளே இருக்க முடியாது. அதனால் ஒரு பக்கம் வரும் பக்தர் கூட்டத்தை மறு பக்கம் வழியாக அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இரவு 11 மணிவரை கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.

அருள்பாலிக்கும் அம்பாள்

முக்தி தரும் தலங்கள் ஏழில் காசியும் ஒன்று. பாரதத்தின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலமாக விளங்குகிறது. கோயில் கோபுரம் 51 அடி உயரம். போர்களால் பழைய தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. பின்னர், 1785-ல் ராணி அகல்யா பாய் இப்போது உள்ள கோயிலைக் கட்டியிருக்கிறார். நேபாள மன்னர் காணிக்கையாக வழங்கிய மிகப் பெரிய வெண்கல மணி கோயிலுக்குள் உள்ளது. அதிகாலை அமைதியில் இந்த மணியின் கம்பீர ஒலி சில மைல் தூரத்துக்குக் கேட்குமாம்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அன்னையின் 52 சக்தி பீடங்களில் இந்தக் கோயிலும் ஒன்று என்பது சிறப்பு. உலகுக்கே படியளக்கும் அன்னையாக விளங்கும் அன்னபூரணி அம்மன் ஆலயமும் அருகிலேயே உள்ளது. மனிதர்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல; ஞானப் பசியையும் போக்கும் கருணை வடிவாக அன்னபூரணி விளங்குகிறாள்.

காசி நகரின் மாற்றம்

கோயிலுக்கு வருவோரில் முதியவர்களே அதிகம். தனியாக வருபவர்கள் குறைவு. டிராவல்ஸ் மூலம் கூட்டம் கூட்டமாக வருபவர்கள்தான் அதிகம். ரயில், பஸ்கள் மூலமும் விமானம் மூலமும் பக்தர்கள் வாராணசியில் குவிகிறார்கள். புறப்படுவதற்கு முன் வாராணசி ரயில் நிலையத்தில் 4 அடிக்குக் குப்பை குவிந்து கிடக்கும், ஒரே துர்நாற்றம் வீசும் எனப் பயமுறுத்தித்தான் அனுப்பினார்கள். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. சுத்தமாகத்தான் இருக்கிறது. இப்போதுதான் இந்தச் சுத்தம், முன்பெல்லாம் கிடையாது என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

புண்ணியம் தரும் கங்கையில் நீராடும்போது, பக்கத்திலேயே எரிந்தும் எரியாமலும் பிணம் மிதந்து செல்லும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோமே, எப்படி இருக்குமோ என பயந்துகொண்டேதான் ஆற்றுக்குப் போனோம். கங்கை சுத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. அரைகுறையாக எரிந்த பிணத்தை ஆற்றில் இழுத்துவிடுவது நின்றுவிட்டது. கடுமையான நடவடிக்கைகள் காரணமாகப் பிணம் முற்றிலும் எரிந்த பிறகு, அஸ்தி மட்டுமே ஆற்றில் கரைக்கப்படுகிறது. ஆனாலும், தினமும் குறைந்தது 18 சடலங்களாவது எரியூட்டப்படுகின்றன. சடலங்கள் மிதப்பது நின்றுபோனதால், கரையையொட்டி முதலைகளும் இப்போதெல்லாம் வருவதில்லை.

கங்கைக் கரையில் மொத்தம் 88 படித்துறைகள் உள்ளன. அதில் ஹரிச்சந்திரா படித்துறை மற்றும் மணிகர்னிகா படித்துறைகளில் மட்டும்தான் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. மற்ற படித்துறைகளில் முன்னோர்களுக்கு கர்ம காரியங்கள் செய்வது, பிண்டம் வைப்பது, புனித நீராடுவது மற்றும் வழிபாடுகள் போன்றவை நடக்கின்றன.

கங்கா ஆரத்தி

தினமும் மாலையில் கங்கையை வழிபடும் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இரவு 7 மணி முதல் 7.30 மணிவரை அரை மணி நேரத்துக்கு இது நடக்கிறது. இதற்காக அரை மணி நேரம் முன்பாகவே படித்துறைகளில் இருந்து நூற்றுக்கணக்கான மோட்டார் படகுகள் பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன. கங்கையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு, படித்துறைக்கு அருகே அணிவகுத்து நிற்கின்றன. தஸாஸ்வமேத் படித்துறையில் நடக்கும் இந்த ஆரத்தியைக் காண பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் படகுகளில் கங்கை ஆற்றில் காத்திருக்கிறார்கள். மேளம் முழங்க, சங்கொலி நாதத்துடன் தொடங்கும் ஆரத்தி கண்கொள்ளாக் காட்சி. மிதக்கும் படகில் அமர்ந்தபடி ஆரத்தியின்போது காட்டப்படும் அடுக்கு தீபாராதனைகளின் ஒளியில் காசி நகரமே ஒளிர்கிறது.

காசிக்கு வரும் பக்தர்கள் பாட்டிலிலும் கேனிலும் கங்கை நீரை லிட்டர் லிட்டராகத் தங்களுடன் கொண்டுசெல்கிறார்கள்.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக நானும் ஒரு கேனில் கங்கை நீரைக் கொண்டுவந்தேன்... மறக்க முடியாத ஆன்மிக சிலிர்ப்புடன் கூடிய புனிதமான நினைவுகளோடு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்