திருமணத்தடையை தகர்ப்பார்...தீராத நோயையும் தீர்ப்பார்! திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மகிமை!

By வி. ராம்ஜி

நோயற்ற வாழ்வுதான் வரம். நோயற்ற வாழ்வுதான் குறைவில்லாத செல்வம். வேகமான இந்த உலகில், புதுப்புது நோய்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி எந்த நோய் வந்தாலும், வந்த வேகத்தில் நம்மை விட்டுப் போகச் செய்து அருள்கிறார் வீரராகவ பெருமாள். அதுமட்டுமா... தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிப்பவர்கள், இவரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் போதும்... விரைவில் மணமாலை நிச்சயம்!

திருவள்ளூர் நகருக்கே பெருமை சேர்க்கும் விதமாக, புகழ் கூட்டும் விதத்தில் எழுந்தருளியிருக்கிறார் வீரராகவ பெருமாள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது திருவள்ளூர். இங்கே, அழகே உருவெனக் கொண்டு, அற்புதமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீவீரராகவ பெருமாள்.

1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம். புராதனப் பெருமைகள் பல கொண்ட திருக்கோயில். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம் என்பதை கோயில் கட்டுமானமும் சிற்பங்களும் உணர்த்துகின்றன. 108 திவ்விய தேசங்களில் ஒன்று எனும் புண்ணியத் தலம் கொண்டது திருவள்ளூரைப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

தொண்டை நாட்டு திவ்விய தேசத்தில் 22-வது தலம் என வீரராகவ பெருமாள் கோயிலின் பெருமைகள் சொல்லிக் கொண்டே போகலாம்! திருமழிசை ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இங்கு வந்து, கோயிலுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளனர். ஸ்ரீவேதாந்த தேசிகர் சம்ஸ்கிருதப் பாடல்களை பெருமாள் குறித்து மெய்யுருகப்பாடியுள்ளார்.

ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள ‘ஹ்ருத்தாப நாசினி’ எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கும் என்று அவரின் உள்ளுணர்வு சொல்லிற்று. குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், கண்கள் மூடி தியானத்தில் மூழ்கினார். அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவதை உணர்ந்து சிலிர்த்தார். குளத்தின் சிறப்பு குறித்து முனிவருக்கு எடுத்துரைத்தார்கள் தேவர்பெருமக்கள்.

அப்போது, பிருத்யும்னன் எனும் மகாராஜா இங்கே வந்து தவமிருந்து, இந்தக் குளத்தில் நீராடியதாகவும், அவனுக்குப் பெருமாளே நேரில் தரிசனம் தந்து வரம் அருளினார் என்றும், கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்று தேவர்கள் விவரித்தார்கள்.

சரியான தலம், மிகச் சரியான மூர்த்தம் என வந்திருப்பதில் மகிழ்ந்தார் முனிவர். அங்கே குளத்தில் நீராடி, திருமாலை நினைத்து தவத்தில் ஈடுபட்டார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்றார். முனிவரின் விருப்பப்படியே, அங்கேயே தங்கி கோயில் கொண்டார். இன்றளவும் எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது ஸ்தல புராணம்!

வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும். முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!

தன் வலது கரத்தால் முனிவர் சிரசில் பெருமாள் சத்தியம் செய்யும் சிற்பமும், நாபிக்கமலத்தில் இருக்கிற ஸ்ரீபிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்திலும் வெகு அழகுடன் காட்சி தருகிறார் வீரராகவ பெருமாள். அரக்கர்களை வதம் செய்ததால் ஸ்ரீவீரராகவ பெருமாள் என்றும் ராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால், ஸ்ரீவைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீநவநீத கிருஷ்ணர் வரப்பிரசாதி. இங்கு வரும் பக்தர்களுக்குத் தேன் கலந்த தினைமாவுப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் ரொம்பவே விசேஷமானது என்கின்றர் ஆச்சார்யப் பெருமக்கள். பிரசாதத்தை உட்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்று தங்கள் அனுபவம் சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்!

இங்கு, மூன்று அமாவாசை தினத்தில், வெல்லம் மற்றும் பால் கொண்டு தீர்த்தக் குளத்தில் கரைத்துப் பிரார்த்திப்பது சிறப்பு. அதேபோல், உப்பு மற்றும் மிளகு சமர்ப்பிக்கும் வழிபாடும் இங்கே உண்டு. அப்படிப் பிரார்த்தித்தால், நம் துயரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது உறுதி. உறுப்புக் காணிக்கை பிரார்த்தனையும் உண்டு.

தாயாரின் திருநாமம்- ஸ்ரீகனகவல்லித் தாயார். தை மாத பிரம்மோத்ஸவம் இங்கு பிரசித்தம். அந்த நாளில், கனகவல்லித் தாயாரின் தந்தையிடம் சென்று, வேஷ்டி- புடவை வாங்கி வரும் வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அதனால், பெருமாளுக்கு, ஸ்ரீகல்யாண வீரராகவர் என்றும் பெயர் உண்டு!

வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்கு வந்து, வீரராகவ பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், ஞானமும் யோகமும் பெறலாம். தீராத நோயும் தீரும். கல்யாண யோகம் கைகூடி வரும் என்பது சத்தியம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்