சிவபெருமானின் மிக முக்கிய வடிவமெனப் போற்றி வணங்கப்படும் சரபேஸ்வர மூர்த்தியை மனதாரப் பிரார்த்தித்தால், தீயனவற்றை அழித்து நல்லன அனைத்தையும் தந்தருள்வார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
இரணியன், பரமனை நோக்கி தவமிருந்தான். சாகா வரம் கேட்டான். தவம் செய்வதிலும் தெளிவாக இருந்தான். என்ன வரம் கேட்பது என்பதிலும் உறுதியாக இருந்தான். தவத்தின் பயனாக, “தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் முதலான எவராலும் எதனாலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எந்த ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது’’ என்ற வரத்தைப் பெற்றான்!
தன்னை எதிர்ப்பவர் எவருமில்லை என இருந்தவன், ஒருகட்டத்தில்... தானே கடவுள் எனக் கூறிக் கொண்டான். தன்னையேக் கடவுளாக வணங்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். வேறு யாரையும் தெய்வமாக வழிபடக்கூடாது எனக் கூறினான். என்னடா இவன்... கொடுங்கோலனாக இருக்கிறானே... என புலம்பித்தவித்தனர் மக்கள்.
அவனுக்குப் பிறந்த பிரகலாதனும் இந்தப் புலம்பலுக்குத் தப்பவில்லை. அப்பாவை அப்பாவாக வணங்க நினைத்தான். ஆனால் தெய்வமாக திருமாலையே பூஜித்து வந்தான். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபந்யாசம் கேட்டு வளர்ந்தான். திருமாலின் பக்தனாகவே பிறந்தான்! அப்பன் அசுரனுக்கு இப்படியொரு பக்திப் பிள்ளை.
எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான் பிரகலாதன். இதைக் கண்ட இரணியன், கோபமானான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி “எங்கே உன் நாராயணன்’’ எனக் கேட்க, “என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’’ என்று பிரகலாதன் சிரித்துக் கொண்டே சொன்னான்!
ஆவேசமான இரணியன், அருகில் இருந்த தூணை தன் கையில் வைத்திருந்த ‘கதை’யால் தாக்கினான். அந்தத் தூண் இரண்டாகப் பிளந்தது. அதிலிருந்து நரசிம்ம உருவெடுத்து வெளிப்பட்டார் நாராயணர். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்தார். இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில், எந்த ஆயுதங்களுமின்றி தன் விரல்நகங்களைக் கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி உக்கிரமானார் நரசிம்மமூர்த்தி. அவரின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நோக்கி வேண்டினார்கள். மன்றாடினார்கள். நரசிம்மக் கோபம், உலகுக்கு ஆகாதே என்று வருந்தினார்கள். சிவபெருமான், சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.
சரபேஸ்வரரின் தோற்றம் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவையே சரபேஸ்வரர் மூர்த்தம். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய இரண்டு இறக்கைகளும், நான்கு கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், நான்கு கால்கள் கீழேயும், மேலே தூக்கிய வாலும், மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்டு, தெய்வாம்சமாகத் திகழும் விசித்திரப் பிறவியாகக் காட்சி தருகிறார் சரபேஸ்வரர்!
இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும், அவர் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வர். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாற்புறமும் சுழலும் நாக்கோடும், ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாகப் பறந்து, பகைவர்களை அழிக்கும் சரபேஸ்வரரை பட்சிகளின் அரசன் என்றும் சாலுவேஸ்வரன் என்றும் போற்றுகிறார்கள்.
சக்தி மிக்க ஸ்ரீசரபேஸ்வரருக்கே சக்திகளாய்த் திகழ்பவர்கள் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியும் ஸ்ரீசூலினியும்! இதில் தேவி ப்ரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவளின் உதவி தீயசக்தியை அழிப்பார்...ஸ்ரீசரபேஸ்வரர்!
சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. எதிரிகளால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் முதலான துர்குணங்களையும் அழித்தொழிப்பவர் சரபேஸ்வரர். இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் சகல நோய்களையும் தீர்த்து வைப்பார். தடைப்பட்ட காரியங்களும் வெற்றிகளும் இவரைத் தரிசித்து வணங்கினால், விரைவில் ஜெயம் கிடைக்கும் என்பது ஐதீகம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருப்புவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் கோயில், சென்னை கோயம்பேட்டில் உள்ள குசலவபுரீஸ்வரர் முதலான சில கோயில்களில் மட்டுமே சரபேஸ்வரருக்கு சந்நிதி அமைந்து உள்ளது.
இந்த நாள், அந்த நாள் என்றில்லாமல், எந்த நாளிலும் வணங்குங்கள் சரபேஸ்வரரை. எல்லா நலனும் வளமும் தந்தருள்வார் என்பது உறுதி!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago