கிறிஸ்துவின் தானியங்கள்: இறை வார்த்தை என்னும் விதை

By அனிதா அசிசி

இயேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார்.

விவசாயி தூவிய விதைகள்

“ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார்.

விதை, நிலம், விளைச்சல்

“விதைக்கிறவர் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள். பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் தன் மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்காதவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.”

நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? “அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும் சில சமயம் 60 மடங்கும் சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார்.

இவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.

கதைகளே இயேசுவின் ஊடகம்

‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார்.

சீடர்கள் அவரிடம் வந்து, “ ஏன் மக்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான். ஆனால், இல்லாதவர்களிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். இந்த மக்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் மனதால் உணராமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது. இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

இயேசு, இந்த உவமைக் கதையின் இறுதியில் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். “ நான் கூறிய உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்” என்பதே இதன் பொருள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்