மயில்வாகனன், சேவற்கொடியோன் என்றெல்லாம் அழகன் முருகனுக்கு ஆயிரமாயிரம் திருநாமங்கள் உண்டு. இதில் மயிலும் சேவலும் எப்படி வந்தது என்பதைப் பலரும் அறிவார்கள். இந்த இரண்டும் பெருமை பெற்ற திருத்தலம் திருச்செந்தூர். கடலோரத்தில் கோயில் அமைந்திருக்கும் தலங்களில், திருச்செந்தூரும் ஒன்று. அறுபடை வீடுகளில் கடலையொட்டி உள்ள திருத்தலம் இதுமட்டுமே!
இங்கே... ஆறுமுகப் பெருமானின் உற்ஸவர்- குமாரவிடங்க பெருமான். திருமண வைபவங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் இவரை மாப்பிள்ளை சாமி என்று அழைக்கிறார்கள்.மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை, முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளது. எனவே, பரதவர்கள் முருகப்பெருமானை 'மச்சான் சாமி' என்று பாசத்துடன் அழைக்கின்றனர்!
மூலவருக்கு- போற்றி மடைப் பள்ளியிலும், ஆறுமுகனுக்கு - முக்காணியர்கள் மடைப் பள்ளியிலும், இங்கே உள்ள ஸ்ரீவேங்கடாசலப் பெருமாளுக்கு- வைணவ மடைப்பள்ளியிலும் தனித்தனியே நைவேத்தியங்கள் தயாராகின்றன.காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம். முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையொட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று.
முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக 'கந்த புராணம்' கூறுகிறது. அதை 'ஸ்கந்த புஷ்கரணி' என்று சொல்கிறார்கள். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது இந்தத் தீர்த்தம். ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே மிகக் குறுகிய அளவில் நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு என்றும் பெயர் உண்டு. இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. .
மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணிகலன்கள் அணிவிக்கப்படுகின்றன. அதாவது, அழகன் முருகனின் ஆபரணங்கள், ஆடல்வல்லானுக்கு அணிவித்து அழகு பார்க்கப்படுகிறது.இந்தத் தலத்தில் மாதப் பிறப்பு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளியறை தீபாராதனை முடிந்தபின், கொடிமர வணக்கம் செய்து விட்டு, சண்முக விலாசம் சென்று சூரிய வணக்கம் செய்வார்கள் அடியார்கள்.
தினமும் காலை சுமார் 5.30 மணிக்கு கொடி மரத்தின் முன்பு திருவனந்தல் எனப்படும் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அப்போது குமாரோபநிஷத்தில் உள்ள துவாதச நமஸ்காரம் செய்யப்படுகிறது. விராட் புருஷனின் பாத ஸ்தானத்தில் செந்தூர் அமைந்திருப்பதால், இது தினமும் நடைபெறுகிறது.
உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படும் வைபவமும் நடைபெறுகிறது. மாமரமாக மாறிய சூரபதுமனை, முருகப் பெருமான் தனது வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதே இல்லை என்பது ஐதீகம்.
மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைத்து வழிபடுகிறார்கள்.
திருச்செந்தூரில் இன்னொரு விஷயம்... ஸ்ரீசுப்ரமணிய சுவாமியைத் தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் 'திரிசுதந்திரர்கள்' எனப்படுகிறார்கள். இவர்கள் கேரள தேசத்தின் ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானப்படி பூஜிக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago