பழநி முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவில் திருஊடல் வைபவம்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநி மலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி திருவிழாவில் இன்று பழநியில் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 1-ல் திருக்கல்யாணம், ஜூன் 2-ல் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான இன்று (ஜூன் 5) காலை 9.30 மணிக்கு விநாயகர், தெய்வானை மற்றும் வள்ளி சமேத முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வள்ளியை திருமணம் செய்து கொண்ட முத்துக்குமாரசுவாமி, தெய்வானையை சமாதானப்படுத்தும் திருஊடல் வைபவம் நடைபெற்றது. அப்போது, முத்துக்குமாரசுவாமி வள்ளியை திருமணம் செய்ததை அறிந்து கோபம் அடைந்து கோயில் நடையை தெய்வானை சாத்திக் கொண்டார். சுவாமி வள்ளியுடன் கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு, வீரபாகுவை தெய்வானையிடம் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினார். அதற்கான தூதுப் பாடல்களை சிவநாகராஜன் பாடினார். சமாதானமடைந்த தெய்வானை கோயில் நடையை திறந்து சுவாமிக்கு வழிவிட கோயிலுக்குள் நுழைந்த முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். இரவு 10 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE