சோழ தேசம் என்றாலே தஞ்சாவூர் நினைவுக்கு வரும். தஞ்சை என்றதும் பெரியகோயில் எனப்படும் பெருவுடையார் ஆலயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். இவற்றில் எதைச் சொன்னாலும் நினைவுக்கு வந்து பிரமிக்க வைப்பவர்... மாமன்னன் ராஜராஜ சோழன்!
ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம்தான், ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரம். ஆயிரம் வருடங்கள் கடந்தும் கூட, இன்றைக்கும் சரித்திரத்தில் இறவாப் புகழுடன் திகழ்கிறார் ராஜராஜ மாமன்னன்.
எல்லாக் கட்டடங்களையும் போல தஞ்சை பெரியகோயிலை, வெறும் கட்டடம், புராதனம் மிக்க கோயில் விமானம் என்று நினைத்துவிடமுடியாது. ராஜராஜப் பெருவுடையார் அப்படி நினைத்துக் கட்டவில்லை. இது, மகா சதாசிவலிங்கத் தோற்றத்தின் வடிவம். மகுடாகமம் அப்படித்தான் இதைக் குறிப்பிடுகிறது. திருவதிகை வீரட்டம், திருவானைக்கா முதலான திருத்தலங்களின் திருச்சுற்று மண்டபங்களில் சதாசிவலிங்கங்கள் (முகலிங்கம்) இருப்பதை இன்றைக்கும் தரிசிக்கலாம்! அதாவது, பாணத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்கள் இடம்பெற்றிருக்கும்.
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என சிவனாரின் ஐந்து வடிவங்களைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இவற்றில், முதல் நான்கு வடிவங்களின் திருமுகங்களை, லிங்க பாணத்தில் காணலாம். ஈசான முகத்தை, ஊர்த்துவ முகம் என்பதாக, அதாவது கற்பனையாகவே பார்த்துக் கொள்ளவேண்டும்!
தஞ்சாவூர்ப் பகுதியில் சில சிவாலயங்களில், தாமரை மலரில் அமர்ந்தவராக நான்கு திருமுகங்களும் கொண்டு, சிவனாரின் திருமேனியைத் தரிசிக்கலாம். இதனை ‘வாக்ச சிவா’ என அழைப்பார்கள்.
தஞ்சைக் கோயிலில் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில், ராஜராஜ சோழ மன்னன் செய்து வைத்த செப்புத் திருமேனி பற்றிய குறிப்புகள் உள்ளன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.
சிவனாரின் உருவமான அந்தத் திருமேனியை ‘பஞ்சதேக மூர்த்தி’ என்று சொல்கிறார்கள். திருமேனியின் உயரம், வடிவம் ஆகியவற்றின் துல்லியமான அளவைக் கல்வெட்டில் பொறித்துள்ளான் ராஜராஜ சோழன். ஒருவேளை... பிற்காலத்தில் இந்தத் திருமேனி அதாவது திருவிக்கிரகம் கிடைக்கப் பெறாமல் போனால்கூட, அந்த விக்கிரகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தக் கல்வெட்டின் மூலம் அறிய முடியும்!
இன்னொரு விஷயம்... எந்தவொரு சிவாலயத்திலும் பஞ்சதேகமூர்த்தி எனும் பெயரில் செப்புத் திருமேனி இருந்ததாகத் தெரியவில்லை.
சிவனாரின் ஐந்து தேகங்களையும் இணைத்து, செப்புச் சிலை வடிவில் ஓர் உருவமாகச் செய்து வழிபட்டிருக்கிறான் மாமன்னன் ராஜராஜன். அதுமட்டுமா? ஐந்து திருவுருவங்களையும் தனித்தனியே வடித்து, ஸ்ரீவிமானத்தின் கோஷ்டப் பகுதிகளில் வைத்து, விமானத்தையே சதாசிவலிங்கமாக்கிப் பூரித்திருக்கிறான்! தஞ்சை பெரிய கோயில் தவிர, சிவனாரின் அந்த ஐந்து வடிவங்களை, வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க முடியுமா... தெரியவில்லை!
தஞ்சைக் கோயிலின் அர்த்த மண்டபம் வழியே தெற்கு வாயிலுக்கு வரும் வழியில், கீழ்ப்புற கோஷ்டத்தில் தத்புருஷ மூர்த்தியும், விமானத்தின் தெற்குப் புற கோஷ்டத்தில் அகோர மூர்த்தியும் அருள்பாலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
மேலிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் இடது கரத்தில் மாதுளம்பழத்தை ஏந்தியபடி, முன் வலது கரத்தில் அபயம் காட்டி தரிசனம் தருவார் தத்புருஷர். உடல் முழுவதும் பாம்புகளை ஆபரணம் போலச் சூடிக்கொண்டு, எட்டுத் திருக்கரங்களும், எடுப்பான மீசையுமாக அகோரமூர்த்தியும், விமானத்தின் மேற்கு கோஷ்டத்தில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் அபய வரதம் காட்டி சத்யோஜாத மூர்த்தியும், கோஷ்டத்தின் வடக்கில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் வாளும் கேடயமும் ஏந்தியபடி வாமதேவ மூர்த்தியும், விமானத்தின் வட கீழ்த் திசையில், அர்த்தமண்டபம் செல்லும் வாசலுக்கு அருகில் கோஷ்டத்தில் வலது பக்கத்தில் நீண்ட திரிசூலத்தை ஏந்தி, இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி ஈசான மூர்த்தியும் காட்சி தருகின்றனர். இவை சரித்திரப் பொக்கிஷங்கள். தெய்வ பக்தியுடன் கூடிய திருப்பணிகள்.
இந்த மூர்த்திகளையெல்லாம் தரிசித்துவிட்டு, உலகமே போற்றுகிற 216 அடி உயர விமானத்தைக் கூர்ந்து பாருங்கள். அப்போது... அது, சதாசிவலிங்கத் திருவடிவம் என்பது புரியும்.
கிழக்கு ராஜகோபுரமான கேரளாந்தகன் நுழைவாயிலின் மேல் நிலையில் வடக்கு மற்றும் மேற்குத் திசையிலும் பத்துக் கரங்கள், ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவ மூர்த்தியின் சுதை வடிவங்களைப் பார்க்கலாம்!
பெரியகோயிலில் சிவனாரின் பல வடிவங்களான ஆடவல்லார், பிட்சாடனர், காலகால தேவர், விஷ்ணு அநுக்கிரஹ மூர்த்தி, ஹரிஹரர், லிங்கோத்பவர், சந்திரசேகரர், கங்காதரர், கௌரி பிரசாதர், திரிபுரம் எரித்த
தேவர், ஆலமர்ச் செல்வர் ஆகிய மூர்த்தங்களும் இங்கே காணக் கிடைக்கின்றன!
சோழ தேசத்தில் மலைப்பாறைகள் இல்லை. எனவே திருச்சி புதுக்கோட்டைக்கு அருகில் நார்த்தாமலையில் இருந்து கல் எடுத்து வந்திருக்கலாம் என்று யூகமாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆலயத்தின் திருப்பணிக்கு உதவியவர்கள் அனைவரின் பெயரையும் பொறித்து வைத்துள்ள மன்னனின் மனசு... விசாலமானது.
கோயிலுக்குள் நுழையும் கோபுரமா பிரமாண்டமாக இருக்கவேண்டும். அவர் குடியிருக்கும் கருவறையின் விமானம் அல்லவா ஓங்கி உயர்ந்திருக்கவேண்டும் என நினைத்த மாமன்னன், 216 அடி உயரத்தில் விமானம் எழுப்பியது அவனுடையை பக்தியையும் காலம் கடந்து நிற்கிற ஆன்மிக உணர்வையுமே காட்டுகிறது. எல்லாவற்றுக்கும் ராஜராஜன், ராஜராஜப் பெருவுடையார், கேரளாந்தகன், மாமன்னன் என்றெல்லாம் பெயர்கள் பல இருந்தாலும், தன்னை சிவபாதசேகரன் என்று சொல்லிக் கொள்வதில் பூரித்துப் போன மிகச்சிறந்த சிவனடியார்... ராஜராஜ சோழன்.
அத்தனைப் பெருமைகளும் ஒருங்கே கொண்ட ஒப்பற்ற மன்னன் ராஜராஜனுக்கு, நாளையும் (29ம் தேதி) நாளை மறுநாளும் (30ம் தேதி) தஞ்சைப் பெரியகோயிலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது சதயத் திருவிழா.
நாளை 29ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, காலையில் தொடங்குகிறது சதயப் பெருவிழா. ‘மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறை’ எனும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலையில் இசை நிகழ்ச்சிகள் பலவும் நடக்கின்றன.
30ம் தேதி திங்கட்கிழமை, திருவேற்காடு கருமாரி பட்டர், அன்னதான கும்பாபிஷேக மகாசக்கரவர்த்தி அய்யப்ப சுவாமிகள், தஞ்சைப் பெருவுடையாருக்கும் பெரியநாயகிக்கும் வழங்கும் சிறப்பு அபிஷேகங்கள் பிரமாண்டமாக நடைபெறும். கோயிலுக்கு அருகில் உள்ள பூங்காவில் அமைந்து உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தலும் திருமுறை திருவீதியுலாவும் மன்னனின் உத்ஸவர் சிலை வீதியுலா வரும் வைபவமும் விமரிசையாக நடைபெறுகிறது.
தஞ்சைப் பெரியகோயில் பல்லாண்டு வாழ்கவே!
மாமன்னன் ராஜராஜன் புகழ் பல்லாண்டு வாழ்கவே!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago