டீ விற்று உலக நாடுகளை வலம் வந்த பிரபல கேரள தம்பதி: மாரடைப்பால் கணவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

டீ விற்று உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் கேரளாவைச் சேர்ந்த விஜயன் - மோகனா தம்பதியர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விஜயன் உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

கேரளாவைச் சேர்ந்த விஜயன், எர்ணாகுளத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் பல நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் இருக்கின்றன. இவருக்கு ஆலப்புழா மாவட்டத்தின் சேர்த்தலா கிராமம்தான் பூர்வீகம். எர்ணாகுளத்துக்குத் தொழில் நிமித்தமாக விஜயன் இடம்பெயர்ந்து 46 ஆண்டுகள் ஆகின்றன.

சைக்கிளின் பின்னால் கேன் வைத்து டீ விற்பதில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கிய விஜயனின் அத்தனை சுக துக்கங்களிலும் அவரது மனைவி மோகனாவும் உடன் பயணித்தார். டீக்கடையில் கிடைக்கு வருமானத்தைக் கொண்டு இவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருவது வழக்கம். இதனால் இந்தத் தம்பதியர் மீது ஊடகம் வெளிச்சம் விழுந்தது.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்த இந்தத் தம்பதியினர் கடந்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் செய்து நாடு திரும்பினர். அடுத்த வருடம் ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விஜயன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விஜயனுக்கு வயது 71. கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 26 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் மனைவி மோகனாவும் உடன் பயணித்துள்ளார்.

சொத்து, வீடு எல்லாம் சேகரித்துக் கொண்டால்தானே எதிர்காலத்துக்கு உதவும், இப்படிப் பயணம் செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று விஜயனிடம் பலரும் கேட்டுள்ளனர். ''வியாபாரம், சம்பாத்யம் எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதையே முதன்மையாக்கிக் கொண்டால் நமக்கான வாழ்க்கையை எப்போது வாழ்வது? நான் சென்ற இடங்களில் எனக்குக் கிடைத்த நினைவுகள் எல்லாம் எனக்காக நான் சேகரித்தவை. நான் இறக்கும்போது அவை என்னுடம் வரும். அந்த நினைவுகளை மட்டுமே நான் கொண்டாடுவேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. என்னால் உங்களுக்கு விளக்கவும் முடியாது” என்று கூறியுள்ளார். இதனைத் தனது நேர்காணல்களிலும் விஜயன் பதிவு செய்திருக்கிறார்.

நான் இன்னமும் பல நாடுகளுக்குப் பயணிப்பேன் என்று கூறிய விஜயன், தற்போது தனது பயணத்தை நிரந்தரமாக முடித்துக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE