"என்கிட்ட 20 ரூவாதான் இருக்கு, வரலாமா?" இப்படிக் கேட்டுவிட்டு தன்னுடைய ஆட்டோவில் ஏறிய முன்னாள் எம்எல்ஏ குறித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் வியந்து எழுதிய முகநூல் பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் பாண்டி. பட்டதாரியான இவர், சொந்தமாக ஆட்டோ ஓட்டித் தொழில் செய்து வருகிறார். கடந்த 27-ம் தேதி காலையில் இவர் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்றபோது, அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏற முயன்ற பெரியவர் ஒருவர் தன்னுடைய ஒற்றைக்கால் செருப்பைத் தவற விட்டுவிட்டார். உடனே பேருந்தில் இருந்து இறங்கி செருப்பை அவர் தேடிக்கொண்டிருப்பதைக் கண்ட பாண்டி, அந்தப் பெரியவர் மதுரையின் முன்னாள் எம்எல்ஏ என்பதை அடையாளம் கண்டு வியந்திருக்கிறார்.
பேருந்தைத் தவறவிட்ட அந்தப் பெரியவரிடம் போய், தன்னுடைய ஆட்டோவில் ஏறச் சொல்லிக் கேட்டார் பாண்டி. அதற்கு அவர், “என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது. கொண்டுபோய் விட்டுவிடுவீர்களா?” என்று கேட்டிருக்கிறார். “சரிங்கய்யா” என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற பாண்டி, ஆட்டோவில் இருந்த அந்த முன்னாள் எம்எல்ஏவுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டார்.
கூடவே, ‘வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பைத் தேடித் திரிந்த அந்தப் பெரியவர் மதுரை கிழக்குத் தொகுதியில் இருமுறை எம்எல்ஏவாக இருந்த எளிமையின் சிகரமான நன்மாறன் அய்யா. கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று எழுதியிருந்தார்.
இதுகுறித்து முனிச்சாலை பாண்டியிடம் கேட்டபோது, “முதலில் வயதானவராக இருக்கிறாரே என்றுதான் உதவுவதற்கு முன்வந்தேன். அப்புறம்தான் அவர் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் என்று கண்டுகொண்டேன். ‘எங்கே போகணும் அய்யா, ஆட்டோவில் ஏறிக்கோங்க’ என்றபோது, தயங்கியபடி ‘கருப்பாயூரணி போகணும். என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது, கூட்டிட்டுப் போவீங்களா?’ என்று கேட்டார். எனக்குக் கண் கலங்கிவிட்டது. நான் பசும்பொன் தேசியக் கழகத்தின் மதுரை மாநகர் இளைஞரணிச் செயலாளராக இருக்கிறேன். ஆட்டோ ஓட்டிக்கொண்டே அரசியலிலும் இருப்பதால், மதுரையில் பொதுவாழ்வில் இருப்போரை நன்கு அறிந்தவன் நான்.
சைக்கிள் வாங்கவே காசில்லாமல் இருந்த பலர், இன்று டொயோட்டா, பார்ச்சூன் கார்களில் பறக்கிறார்கள். சமீபத்தில் மதுரையின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்துக்குச் சீர்வரிசையாக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்தார். ஆனால், நன்மாறனோ கட்சி வாங்கிக்கொடுத்த ஸ்கூட்டருக்குப் பெட்ரோல் போட்டாலே கட்டுப்படியாகாது என்று, 72 வயதிலும் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறார். எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்ஷன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தில் வாழ்கிறார். ஆட்டோவை விட்டு இறங்கும் வரையில் நான் முன்னாள் எம்எல்ஏ என்பதை அவராகச் சொல்லவே இல்லை” என்றார்.
நன்மாறனைத் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் உண்மையா என்று கேட்டோம். “ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார். முகநூல் பதிவு விஷயத்தைச் சொன்னதும், “அதை எல்லாம் செய்தியாக்க வேண்டாம். டெல்லி விவசாயிகள் போராட்டம் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார் நன்மாறன். அவரது மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளைய மகன் ராஜசேகரன், மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிகப் பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் பதிவைக் காண:
முக்கிய செய்திகள்
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
1 year ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
2 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago
சமூக வலைதளம்
3 years ago