கரோனா வைரஸுக்கு எதிரான போர்: பொதுச் சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்புக்காக தனிமனித சுதந்திரத்தை தியாகம் செய்வது குடிமைக் கடமை

By இரா.முத்துக்குமார்

கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் 2,43,162 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 10,284 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது தீய முகத்தைக் காட்டி வருகிறது.

இந்தியாவில் நேற்று மட்டும் 40க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று பரவியுள்ளது. இதில் அபாயம் என்னவெனில் இவர்களுக்கு கரோனா தொற்று எப்படிப் பரவியது, இதனை இவர்களுக்குப் பரப்பியவர் யார் யார்? அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் எத்தனை பேருக்குப் பரப்புவார்கள் என்பதும் தெரியாத நிலையில் இப்படித்தான் கரோனா பரவுகிறது என்பதற்காகத்தான் பிரதமர் மோடி, இந்திய மாநில அரசுகள், தமிழகம் ஆகியவை சில பொதுக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனை ஒன்றும் தெரியாமல் கேலி பேசுவதோ, அதீதமாக வினையாற்றி மக்களை அச்சப்படுத்துகின்றனர் என்றோ, தனிமனித சுதந்திரம் பறிபோகிறது என்றோ பேசுவதில் எள்ளளவும் பயனில்லை. ஏனெனில் இந்த அச்சுறுத்தலையெல்லாம் விட கரோனா பயங்கரமானது என்ற உண்மையை உணர்ந்தால் நாம் அரசின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையிருப்பதை, கட்டாயத்தை உணர்வோம்.

கரோனாவின் மிகப்பெரிய நெருக்கடி என்னவெனில் கரோனா தொற்றியதற்கான அறிகுறிகள் இல்லாமலேயே ஒருவர் கரோனாவால் பீடிக்கப்பட்டிருப்பார்கள் என்பதே தெரியாமல், அறியாமல் இவர்கள் பலருக்கும் பரப்பி விடுவார்கள். சங்கிலித் தொடராய் இது செல்லும். இதனால்தான் சமூக அந்நியமாதல் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் 41,035 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 3,405 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 19,980 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,002 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 10,995 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 372 பேர் இறந்துள்ளனர்.

வல்லரசு நாடான அமெரிக்காவில் 10,427 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 150 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் உயிரிழப்பைத் தடுப்பதிலும் அமெரிக்காவே திணறி வருகிறது. பிரிட்டனில் 3,269 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அந்த நாட்டில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 14,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் 81,008 பேருக்குத் தொற்றியுள்ளது. 3,255 பேர் மரணமடைந்துள்ளனர். 71,740 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது கரோனா தொற்று இருப்பவர்கள் 6,013 பேர். இதில் 4,086 பேர் சாதாரண நிலையிலும் 1,927 பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர். சீனாவில் தற்போது உள்நாட்டிலேயே புதிதாக கரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகியுள்ளது, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதிதாகத் தோன்றியுள்ளது.

இவை எல்லாம் வெறும் புள்ளி விவரங்களோ, எண்ணிக்கை விளையாட்டுகளோ அல்ல. நெருக்கடியில் இருக்கும் மனித உயிர்கள்.

சீனா செய்தது என்ன?

கரோனா வைரஸுக்கு எந்த ஒரு சமூகப் பிணைப்போ மதமோ, நாடுகளோ, பண்பாட்டு மதிப்பீடோ, அரசியல் அமைப்போ கிடையாது. அனைத்தையும் சமனப்படுத்தும் ஒரு கொடிய தொற்று நோயோ கரோனாவுக்கு நாட்டின் எல்லைகளை மதிக்கத் தெரியாது. புலம் பெயர்வோரைத் தடுத்து நிறுத்தலாம். கரோனாவைத் தடுத்து நிறுத்துவது கடினம். அது நம்மை கடினமாகத் தாக்கியுள்ளது. இதுபோன்ற கொடிய தொற்று நோயின் அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளை இரண்டாம் உலகப்போருக்கு ஒப்பிடுகின்றனர் அரசியல், சமூக வல்லுநர்கள்.

எனவே எங்கிருந்து தோன்றியது, எப்படி வந்தது என்ற கதைகள், ஹேஷ்யங்கள் முக்கியமல்ல. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று நம் இந்தியப் புராணிக மரபில் ஒரு பழமொழியே உண்டு. ஆகவே எப்படி, எங்கிருந்து தோன்றியது என்பதை விட நாம் அதற்கு எப்படி வினையாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம்.

சீனாவின் கரோனா மையமான வூஹானில் தினசரி ஆயிரக்கணக்கானோரை கரோனா தொற்றியது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் படுக்கைகளில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க பல கட்டிடங்கள், வீடுகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. ஆனால் இன்று படுக்கைகள் காலியாகியுள்ளன. புதிய தொற்றுகள் இல்லை. சீனா எப்படி இதைச் செய்ய முடிந்தது என்பதுதான் விஷயம்.

தனிமனித சுதந்திரத்தை கால/தேச வர்த்தமானங்களைக் கடந்து லட்சியமாகக் கருதும் அமெரிக்கா, சீன வழிமுறைகளை அடக்குமுறை என்றும், அங்கு மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் பிரச்சாரம் மேற்கொண்டன. அமெரிக்க அதிபரும் நோய்க்கான எந்த ஒரு மானுட உணர்வும் இன்றி அதனை சீனா வைரஸ் என்று கூறி சீன மக்களை அவமானப்படுத்தினார்.

ஆனால் சீனா தன் வழிமுறைகளைச் சரியாகவே செய்தது. காரணம் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அது குறைந்தது 2.6 நபர்களுக்குத் தொற்றுகிறது. இது இப்படியே தொடர் சங்கிலியாக தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. இப்படிச் சென்றுதான் இன்று இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியாஉட்பட சுமார் 155 நாடுகளில் தொடர் சங்கிலியாகப் பரவி வருகிறது. இந்தச் சங்கிலியை எப்படி உடைப்பது? இதைத்தான் சீனா செய்தது. மானுடத் தலையீடு, அரசின் தலையீடு இல்லாமல் இதனை உடைக்க முடியாது.

இதற்காக சீனா கடைப்பிடித்த வழிமுறை கடுமையானது, ஆக்ரோஷமானது, சில சமயங்களில் கொடூரமானது என்று கூட வர்ணிக்கப்படத் தகுந்ததே. ஆனால் இந்தப் புதிய வாழ்க்கை முறை, நடைமுறைக்கு மக்கள் தற்போது பழகிவிட்டனர். காரணம், கரோனா அபாயம் அது மாதிரியானது. லாக் டவுன் என்பதே சீனாவின் தாரக மந்திரம். வூஹானில் ஒரு தெருவில் தொடங்கினால் அந்தத் தெருவின் இரு வழிகளையும் பெரிய கதவுகளின் மூலம் அடைத்து வாசலில் போலீஸ் காவல் வைக்கும் நடைமறை பிற்பாடு வூஹான் நகரம் முழுதும் லாக் டவுன் செய்யப்பட்டு ஹூபேய் மாகாணமே லாக் டவுன் செய்யப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வர அனுமதி. காரில் சென்றால் சோதனை, சாலைகளில் சோதனை, காய்ச்சல் இருந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு போய் சிகிச்சை அளிப்பது, சோதனை செய்வது என்று கடும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. இவையெல்லாம் தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா என்ற கேள்வி எழும்.

ஆனால், தனிமனித சுதந்திரம் என்பதற்கும் பொதுச் சுகாதாரம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு என்பதற்கும் இடையேயான சமன்பாடு எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் சமன்பாடுதான். இன்று சீனா செய்ததைக் கண்டிக்கும் அமெரிக்கப் பத்திரிகைகள் அன்று 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு விமான நிலையங்களில் மேற்கொண்ட சோதனைகள் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். காரணம் பயங்கரவாதம் எனும் தீமை உலகப் பாதுகாப்புக்குக் கேடு விளைவிப்பது. அதனைத் தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

ஆனால், சீனா கரோனாவுக்காக செய்த லாக் டவுன் என்பது பயங்கரமானது. தொழிற்சாலைகள் மூடல், பொது இடங்கள் மூடல், மால்கள் இல்லை, போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கம். மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ந்தனர். ஆனால் இதனைச் செய்ததன் மூலம் கரோனா பாதிப்புகளை வெகுவாகக் குறைத்தது. லட்சக்கணக்காக வேண்டிய தொற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தது. 10 ஆயிரத்துக்கும் அதிகமாகியிருக்க வேண்டிய மரணங்களை கட்டுப்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் போதிய மருத்துவ ஊழியர்கள் இருக்குமாறு உறுதி செய்தது. போதிய பாதுகாப்புக் கவசங்களைத் தயாரித்துக் கொண்டது.

சுமார் 70 சேர்க்கை மருந்துகளையும் சீனாவின் பாரம்பரிய மூலிகை மருந்துகள் உட்பட 30 மருந்துகளைப் பயன்படுத்தி மக்களின் கோபாவேசங்களையும் மீறி நோயை இன்று கட்டுப்படுத்தி புதிய கேஸ்கள் இல்லாதவாறு செய்துள்ளது. இந்த 30 மருந்தில் கியூபா உருவாக்கி வளர்த்த பின்லாந்து ஆராய்ச்சியில் உருவான மருந்தான இண்டெர்ஃபெரான் ஆல்பா 2பி என்ற வைரல் எதிர்ப்பு மருந்து பெரிதும் உதவியதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து மற்ற செல்களிலிருந்து உற்பத்தியாகும் புரோட்டீன்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி அருகில் உள்ள செல்களை ஒருவகையில் எச்சரிப்பதாகும் எனவே பிற செல்கள் வைரல் தடுப்பு உத்திகளை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்ளும். கொண்டே தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்வதை தடுப்பதாகும், 1981-ல் டெங்கு காய்ச்சல் பரவலை இந்த இண்டெர்பெரான் ஆல்பா 2பி மருந்துதான் பெரிய அளவில் கட்டுப்படுத்தியது. அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறி கியூபா இண்டெர்ஃபெரான் ஆல்பா 2பி என்ற மருந்து குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது, இதுதான் இன்று சீனாவுக்கும் இத்தாலிக்கும் பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் கரோனா பரவலைத் தடுக்க கைகொடுத்து வருகிறது.

சீனாவின் கெடுபிடிகளை வூஹான் மக்கள் ஏற்றுக் கொண்டனர், இது போன்ற நெருக்கடிகள் உலகிற்கு ஏற்படும்போது நாட்டு அரசுகள்தான் மக்களுக்கு ஒரே நம்பகமான விஷயம். ஏனெனில் அரசிடம்தான் தரவுகள் இருக்கின்றன, லாஜிஸ்டிக்ஸ் இருக்கின்றன, வழிமுறைகள் அவர்களுக்குத்தான் முதலில் வந்து சேர்கின்றன, எனவே அவர்கள் மக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகளை, கடுமையாக இருந்தாலும் சரி, விதிக்கப்படும்போது மக்கள் அதனை ஒரு சமூகக் கடமையாக, குடிமை கடமையாகக் கருதி செயல்படுத்த வேண்டும், இது ஒவ்வொரு தனிமனிதரின் கடமை என்பதை விட அறமும் ஆகும். அப்போதுதான் சீனா மிகமிகப்பெரிய பாதிப்பிலிருந்து தற்போது 3 மாதங்களில் வெளியே வரும் சிறு இடைவெளியை உருவாக்கியுள்ளது. அதே போல்தான் இந்திய அரசும், எந்த ஒரு அரசும் மக்கள் ஒத்துழைப்புடன் தன இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை பயோடெக் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஏனெனில் மனித உற்பத்திச் செயல்பாடுகள், உலக முதலீட்டியத்தின் கார்ப்பரேட் லாப வேட்டை, பேராசை உற்பத்தித் திட்டங்கள், விவசாயத்தைக் கார்ப்பரேட் மயப்படுத்துவது ஆகியவற்றினால் சூழலியல் பாதுகாப்பு கூறுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு இன்று பிரபஞ்ச உயிரி உணவுச்சங்கிலி உடைக்கப்பட்டதினால் புதிய புதிய வைரஸ்கள், இனம்புரியாத நோய்கள் மானுட குலத்தைத் தாக்கி வருகின்றன.பல உதாரணங்களில் ஒரு உதாரணமாக இன்று பல எதிர்ப்புக்களுக்கிடையே பரவலாக்கப்பட்டு வரும் ஜிஎம் கிராப்ஸ் என்று அழைக்கப்படும் மரபணு மாற்ற விதைகள், பயிர்கள் பற்றி 1996-ல் டாக்டர் அர்பாட் புஸ்டாய் (Dr.Arpat Puzstai), என்ற ஸ்காட்லாந்து ரோவெட் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர் புதிய வெளிச்சத்தை ஊட்டினார், அதாவது மரபணு மாற்ற விதைகளில் பயிரான உருளைக்கிழங்குகளை எலிகளுக்குக் கொடுத்து பரிசோதித்த போது அதன் நோய் எதிர்ப்பு-தடுப்புச் சக்திகள் செயலிழந்து போனதையும் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியமும் பிறழ்ந்தன என்று கண்டுபிடித்தார். இதோடு அலர்ஜியும் பலருக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்தன.

ஆகவே இன்று நாம் நோய் எதிர்ப்புச் சக்திகளை செயலிழக்கச் செய்யும் உணவு முறைகளை, வாழ்க்கை முறைகளை வாழ்ந்து வருகிறோம், நம் பழக்க வழக்கத்தை, வாழ்முறையை மாற்றிக் கொண்டால் எந்த ஒரு லாபவேட்டைத் திட்டங்களும் தோல்வியில்தான் முடியும். அதே போல்தான் கரோனா தொற்றை முறியடிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவை சுய ஒழுங்குடன் கடைபிடிப்பது நம் நல்லதுக்காக மட்டுமின்றி, சமூக நலன் காக்கவும் நாட்டின் நலன் காக்கவும் அவசியமானது.

வைரஸ் என்ற சொல்லின் ஆதிமுதல் வேர்ச்சொல்லை எடுத்துப் பார்த்தால் அதன் அர்த்தம் ‘பாய்சன்’ அதாவது விஷம் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத விஷம் என்பதை ஒத்ததே வைரஸின் ஆதி வேர் சொல்லாகும். பவுதிக அறிவியலில் வெர்னர் ஹெய்சன்பர்க் என்பாரின் ‘நிர்ணயமின்மைக் கோட்பாடு’ என்பது அணுக்களின் நிலையையும் திசைவேகத்தையும் கணிக்க முடியாது, திசை வேகத்தைக் கணிக்க முற்பட்டால் அதன் நிலையை கணிக்க முடியாது அதன் நிலையைக் கணிக்க முற்பட்டால் திசைவேகத்தை கணிக்க முடியாது என்றார்.

அதேதான் இந்த வைரஸ் விவகாரத்திலும் இதன் ஒவ்வொரு ஸ்ட்ரெய்ன் அல்லது துணைவகைகளும் ஒவ்வொரு மாதிரி, இதனை ஆய்வுக்குரிய பொருளாகக் கொள்ள முடியாது என்றும் இது ஒரு செயல்முறை என்றும் (not substance or thing, but process) வைரஸுக்கு உயிர் கிடையாது எனவே அதை கொல்ல முடியாது என்றும் சில விஞ்ஞானிகள் கூற வைரஸ் வளர்கிறது, இரட்டிப்பாக்கிக் கொள்கிறது எனவே அதற்கு உயிர் உண்டு எனவே அதனைக் கொல்ல முடியும் என்றும் சில விஞ்ஞானிகளும் கூறி வரும் நிலையில் ஒருவிதமான விஷ கரோனா வைரஸையும் அதன் நிலை குறித்த நிர்ணயமின்மை நிலையிலும் மனித குலம் தற்போது இருந்து வருகிறது. இதிலிருந்து மீள மனிதகுலம் சுயக் கட்டுப்பாட்டையும், ஒத்துழைப்புக் குணங்களையும் கடைப்பிடிப்பது அவசியம்.

எனவே சமூக கூட்டங்கள் கூட்டாமல் , சுய அன்னியப்படுத்திக் கொள்ளுதல் மூலம் அரசாங்கக் கட்டுப்பாடுகளை மதித்தே இந்தக் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும்.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இத்தகைய கட்டுப்பாடுகளக் மக்கள் புறக்கணித்து தனிமனித சுதந்திரம்தான் பெரிது என்று ஒத்துழைக்க மறுத்தனர், மேலும் ‘நமக்கு வராது’ என்ற அசட்டு நம்பிக்கை வேறு ஒருபுறம் இவர்கள் மனதில் தலைத்தூக்க எச்சரிக்கைகளைப் புறக்கணித்தனர் இன்று கரோனாவைக் கட்டுப்படுத்த இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா போராடி வருகின்றன.

நாம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, சீனாவின் வூஹான் மக்களின் சுயக் கட்டுப்பாடு,சுய ஒழுங்கு வழிமுறையில் கரோனாவை எதிர்க்க தனிமனித சுதந்திரத்தைத் தியாகம் செய்து பொதுச்சுகாதாரம், பொதுமக்கள் நலன்களைக் காப்போம், தேசத்தைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழி எடுத்துக் கொள்வது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

1 year ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

2 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

சமூக வலைதளம்

3 years ago

மேலும்